தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகையாக நீடிப்பதுதான் எனது எதிர்காலம்: சான்வே

3 mins read
121aa777-100e-458f-bdc6-b713d51db22a
சான்வே மேகனா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

அண்மையில் வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்தின் பட நாயகன் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சான்வே மேகனா.

முதல் படத்திலேயே தனக்கு மிக அழுத்தமான கதாபாத்திரம் அமைந்ததில் மகிழ்ச்சி என்று சொல்லும் சான்வே, இந்தப் படத்தில், கணவரின் கன்னத்தில் ஓங்கி அறையும் தருணத்தில் தனது நடிப்பு மிக யதார்த்தமாக இருந்ததாக பலரும் பாராட்டியதாகக் கூறுகிறார்.

இவரது சொந்த ஊர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத். தந்தை சொந்த தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். தாயார் இல்லத்தரசி. தந்தையின் தொழிலை கவனிக்க உதவுமே என்று வணிகத்துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தாராம்.

தனது குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம் என்று குறிப்பிடுபவர், திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என்கிறார்.

“நானும் எல்லா நடிகைகளையும் போல இவ்வாறு சொல்வதாக நினைக்க வேண்டாம். கல்லூரியில் சேரும் வரை எனக்கு சினிமா ஆசை இருந்ததில்லை.

“ஒருமுறை எனது கல்லூரியில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் நானியின் பின்னால் நிற்பதற்காக சில பெண்களைத் தேர்வு செய்தனர். அவர்களில் நானும் ஒருவள். அதன் பிறகு அதே இயக்குநர் இன்னொரு வாய்ப்பு அளித்த போது வேண்டாமென்று கூறிவிட்டேன். ஆனால் விதியின் கணக்கு வேறாக இருந்தது.

“ஒருமுறை ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க விருப்பமா என்று கேட்டு திடீரென ஒருவர் தொடர்புகொண்டார். என் கைப்பேசி எண் அவருக்கு எப்படி கிடைத்தது என்று தெரியாது. இருப்பினும் அவர் சொன்ன இடத்துக்கு மறுநாள் சென்றேன்.

“அங்கு பிரபல நடிகை ஜெயசுதா இருந்தார். அவர்தான் என்னை அந்தத் தொடரில் நடிக்க தேர்வு செய்தார். பிறகு என் அம்மாவை வரவழைத்த அவர், ‘உங்களுடைய மகள் நல்ல திறமைசாலி, அவளுக்கு நடிப்பு எளிதாக வருகிறது. அவளைத் தொடரில் நடிக்க தேர்வு செய்துள்ளோம்’ என்று கூறியபோது, என் அம்மாவால் அவரது வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை.

“எனினும், அந்தத் தொலைக்காட்சிச் தொடர் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. பிறகு, பிலால்பூர் போலிஸ் ஸ்டேஷன்’ தெலுங்குப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து தெலுங்கிலேயே பல படங்களில் நடித்து முடித்துவிட்டேன்,” என்று சொல்லும் சான்வே, நல்ல வாய்ப்பு கிடைத்தால் தமிழ்த் திரையுலகில் அறிமுகம் ஆக வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தாராம்.

அந்த சமயத்தில் இவர் நடித்த ‘பிட்ட கதலு’ என்ற இணையத்தொடர் ஓடிடி தளத்தில் வெளியாக, அதைப் பார்த்த ‘குடும்பஸ்தன்’ படக்குழு நடிப்புத் தேர்வுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

“தேர்வின்போது எடுத்த எடுப்பிலேயே இறுதிக்காட்சியை விவரித்து நடிக்குமாறு கூறினர். அழுது புலம்பி, ஆவேசம் அடைந்து ஒரு கட்டத்தில் மனைவி கணவரை கன்னத்தில் அறையும் காட்சி இது. நான் அழுத அழுகையைப் பார்த்த இயக்குநர், உடனே என்னைத் தேர்வு செய்துவிட்டார். தமிழில் முதல் படத்திலேயே குடும்பஸ்தியாக மாறிவிட்டேன்.

“மணிகண்டன் போல் பல்வேறு திறமைகளைக்கொண்ட கலைஞருடன் இணைந்து நடித்ததில் கூடுதல் மகிழ்ச்சி. அவரிடமும் நடிகை குரு சோமசுந்தரத்திடமும் நடிப்பு தொடர்பாக பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்,” என்று உற்சாகத்துடன் விவரிக்கிறார் சான்வே.

“எந்த வாய்ப்பும் உன்னைத் தேடி எளிதில் வந்துவிடாது. உனக்கு யோகம் இருந்தால் தானாக வரும். அப்படி தேடி வரும் வாய்ப்பைத் தவறாக மட்டும் பயன்படுத்தக்கூடாது.

“இவை எனக்கு நானே அடிக்கடிச் சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள். ஒரு வகையில் நான் படித்து பின்பற்றும் பாடம் என்றும் கூறலாம்.

“என்னைப் பொறுத்தவரை திரைப்படம் என்பது பெரிய குழு. ஒன்றுசேர்ந்து மக்களை மகிழ்விக்கச்செய்யும் வேலை எனக் கருதுகிறேன்,” என்கிறார் சான்வே.

தற்போது இவர் தெலுங்கில் ‘டுக் டுக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதான் இவரது விருப்பமாம்.

மூன்று இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளாராம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என்கிறார்.

“வாழ்க்கையில் நாம் ஒன்று நினைக்க, நடப்பது வேறு ஒன்றாக இருக்கக்கூடும். அதற்கு என் வாழ்க்கையும் ஓர் உதாரணம். என்னதான் நடிப்பின் மீது தொடக்கத்தில் ஆர்வம் இல்லாமல் போனாலும், முதல் படத்தில் நடித்து முடித்த உடனேயே திரைத்துறை நடிகையாக நீடிப்பதுதான் எனது எதிர்காலம் எனத் தீர்மானித்துவிட்டேன்.

“எனது இந்த முடிவில் மட்டும் எப்போதும் எந்தவித மாற்றமும் இருக்காது,” என உறுதியாகச் சொல்கிறார் சான்வே.

குறிப்புச் சொற்கள்