தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிப்பு என்பது இயல்பாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்: ரோஷினி

3 mins read
d74d0907-693d-44db-b89b-566126aa07ea
ரோஷினி. - படம்: ஊடகம்

‘கருடன்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் ரோஷினி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் மூலம், தமிழ் ரசிகர்களின் மனம்கவர்ந்த நடிகை.

தற்போது ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வருவதால் உற்சாகமாக இருப்பதாகச் சொல்பவர், பெரும்பாலான நடிகைகள் கூறுவதைப் போல், நடிகையாக வேண்டும் என்று தாம் ஆசைப்பட்டதே இல்லை என்கிறார்.

எம்பிஏ பட்ட மேற்படிப்பை முடித்துள்ள ரோஷினி, தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் கைநிறைய ஊதியம் பெற்று வந்துள்ளார்.

ஆனால், அந்த வேலையின் மீது எந்தவித ஆர்வமும் ஏற்படவில்லையாம். எனவே, அந்த வேலையை உதறிவிட்டுச் சொந்தமாக நகைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

“அப்போதுதான் என் கவனம் ‘மாடலிங்’ துறை மீது பதிந்தது. என் சொந்தப் பணத்தில் எடுக்கப்பட்ட எனது புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டேன்.

“என் நம்பிக்கை வீண் போகவில்லை. சில விளம்பரங்களில் நடிக்க அழைப்புகள் வந்தன. அந்த விளம்பர வெளிச்சம் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த பின்னர், திரையுலகுக்கான கதவுகளும் திறந்தன. ‘மாடலிங்’ செய்யத் தொடங்கும் முன் சினிமா, நடிகை என்கிற திட்டமெல்லாம் ஏதுமில்லை.

“வாய்ப்புகள் தேடி வந்தபோது அவற்றைத் துணிச்சலாக ஏற்க வேண்டும், புது அனுபவங்கள் கிடைக்கும் என்ற எண்ணம் மட்டுமே மனத்தில் மேலோங்கி இருந்தது,” என்று அண்மையப் பேட்டியில் கூறியுள்ளார் ரோஷினி.

இவரது தந்தை பொறியாளராம். மூத்த சகோதரி ஐடி துறையில் வேலை பார்க்கிறார். எனவே, இளைய மகளான இவரும் அதே துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் பெற்றோரின் விருப்பமாக இருந்துள்ளது. அதனால் சினிமாவில் நடிக்கப் போவதாகத் தெரிவித்தபோதே வீட்டில் யாருமே ஆர்வம் காட்டவில்லையாம்.

ஆனாலும், தனது முடிவில் இருந்து பின்வாங்காமல் செயல்பட்டு நடிகையாகிவிட்டதாகச் சொல்கிறார்.

“எல்லோருக்குமே கேமரா முன் நிற்பது என்றால் ஒருவித நடுக்கம் ஏற்படும். உடன் நடிப்பவர்களின் நடிப்பு, இயக்குநர்கள் வழிநடத்தும் விதம் ஆகியவை உற்சாகப்படுத்திப் பயத்தைப் போக்கும். எப்போதுமே நம் நடிப்பு தனியாகத் தெரியக்கூடாது. இயல்பாக இருக்கும் வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன்.

“’கருடன்’ படத்தில் சூரியின் நடிப்பு, அர்ப்பணிப்பு வியப்பைத் தந்தது. அனுபவம் வாய்ந்த நடிகராக இருந்தாலும், எந்தவிதப் பாகுபாடும் பார்க்காமல் பழகுவார்.

“அதேபோல் நடிகர் சசிகுமாரின் நடிப்பு அசத்தலாக இருக்கும். எந்தக் காட்சியாக இருந்தாலும் எளிதாக நடித்து முடித்திடுவார்.

“என்னைப் பொறுத்தவரை எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், முன்கூட்டியே பயிற்சியோ ஒத்திகையோ தேவையில்லை என்பேன். அவ்வாறு செய்யும்போது சில கதாபாத்திரங்களில் செயற்கைத்தன்மை வந்துவிடும். நடிப்பு என்பது இயல்பாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

“திரையுலகில் எதுவும் நிரந்தரமல்ல. எதுவும் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும். ஒருநாள் கீழே இருப்போம், மற்றொரு நாள் உயரத்தில் இருப்போம். அது பெரிதல்ல. எப்படி அனைத்தையும் சமாளித்து முன்னேறிச் செல்கிறோம் என்பதுதான் முக்கியம்.

“அதேசமயம் இலக்கு முக்கியம் என்றாலும், அதை நோக்கிய பயணத்தை ரசித்து அனுபவிக்க வேண்டும்,” என்று சொல்லும் ரோஷினி, திரைத்துறையில் ஏதாவது சாதிக்கும் வரை அதில் நீடிக்க விரும்புகிறார்.

அதற்கேற்ப, தமது திரைப்பயணத்தில் சில ஆச்சரியங்கள் காத்திருக்கும் எனவும் நம்புகிறாராம்.

“நான் திரைத்துறைக்கு வந்தது ஓர் ஆச்சரியம். சத்யராஜ், சூரி என முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு அமைந்தது மற்றோர் ஆச்சரியம். இப்படி மேலும் சில ஆச்சரியங்களை எதிர்கொள்வேன் என நம்புவதில் தவறில்லையே,” என்று சொல்லி அழகான சிரிப்பை உதிர்க்கிறார் ரோஷினி.

குறிப்புச் சொற்கள்