வெள்ளித்திரையைவிட, இப்போது சின்னத்திரைக்குத்தான் மவுசு அதிகமாக இருக்கிறது. எனவே, பல நட்சத்திரங்கள் சின்னத்திரை நோக்கி நடைபோடத் தொடங்கிவிட்டனர்.
ஏற்கெனவே, தொலைக்காட்சி உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த ராதிகா, தேவயானி, கமல், குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், மாஸ்டர் கலா ஆகியோரைத் தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்க உள்ளார்.
தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளை அடையாளம் காணும் ‘பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்’ என்ற நிகழ்ச்சியை நவம்பர் வரை தொகுத்து வழங்குகிறார் பார்த்திபன்.
பொதுவாக, கொலைக் குற்றங்களைச் செய்ய உடந்தையாக இருப்பவர்களுக்கு அதிக தண்டனை. அதேபோல் நல்லது செய்யத் தூண்டுபவர்களுக்கு புண்ணியம் அதிகம். அந்த வகையில் தமக்கு அதிக புண்ணியம் கிடைக்கும் என்பதால்தான் இதற்கு ஒப்புக்கொண்டதாக பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் இழப்பு தமக்கு இன்றும் வலியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒருவேளை விவேக் உயிருடன் இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சியை நடத்த அவர்தான் பொருத்தமாக இருந்திருப்பார் என்று கூறியுள்ளார்.
“எனக்கும் முன்னாள் அதிபர் அப்துல் கலாமுக்கும் இடையே உணர்வுபூர்வமான அன்பு இருந்திருக்கிறது. அதனால்தான் அவர் பெயரில் அமைந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.
“சினிமா என்பது மிகப்பெரிய அறிவியல் அதிசயம். அதில் சாதிக்க பல இளையர்கள் தவம் கிடக்கிறார்கள்.
“எனக்கு அறிவியல் பெரிதாக தெரியாது. ஆனால், அறிவியல் உலகில் சாதிக்கத் துடிக்கும் இளையர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்,” என்று பார்த்திபன் மேலும் தெரிவித்துள்ளார்.