சிகரெட் பழக்கத்தால் குரலை இழக்கும் நிலை ஏற்பட்டது: ஆர்ஜே பாலாஜி

சிகரெட் பழக்கத்தால் குரலை இழக்கும் நிலை ஏற்பட்டது: ஆர்ஜே பாலாஜி

படம்: பின்டர்ரஸ்ட்

28 Feb 2026 - 6:19 pm

2 mins read

நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி, தமது புகைபிடிக்கும் பழக்கம் குறித்தும் அதனால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள் குறித்தும் மாணவர்களிடம் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அண்மையில் கல்லூரி விழாவொன்றில் கலந்துகொண்டு பேசியபோது, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தக் கருத்தை அவர் முன்வைத்தார்.

தற்போது சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படத்தை இயக்கிவரும் பாலாஜி, இன்றைய இளையர்களின் வேலைத்திறன் குறித்துக் கவலை தெரிவித்தார்.

“2005ல் நான் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியில் சேர்ந்தேன். என்னிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரியவரும் 22, 23 வயது இளைஞர்கள், முதல் மூன்று மாதங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். ஆனால் அதன்பிறகு, மன அழுத்தம், சோர்வு எனக் கூறி நீண்ட விடுப்பு எடுப்பார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்,” என்றார் பாலாஜி.

திரைத்துறையில் 50 ஆண்டுகளைக் கடந்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காட்டும் சுறுசுறுப்பை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

“அண்மையில் ரஜினியைச் சந்தித்தபோது, அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்களை வைத்திருக்கிறார். 75 வயதிலும் அவரிடம் இருக்கும் அந்த உத்வேகம் ஏன் இன்றைய இளைஞர்களிடம் இல்லை? இதற்கு முக்கியக் காரணம் உடல்நலனில் அவர்கள் அக்கறை காட்டாததுதான்,” என்றார் பாலாஜி.

20 ஆண்டுகாலப் போராட்டம்

தமது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சவால்களைப் பகிர்ந்துகொண்ட பாலாஜி, சிகரெட் பழக்கத்தால் தாம் இழந்தவை அதிகம் என்றார்.

“கல்லூரியில் படிக்கும் காலத்தில் சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொண்டேன். இந்தப் பழக்கத்தால் எனது தொண்டையில் தீவிரப் பாதிப்பு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யும் நிலை உருவானது.

“பேசுவதையே தொழிலாகக் கொண்ட எனக்கு, குரல் பறிபோகும் என்ற பயம் வந்த பிறகே அந்தப் பழக்கத்தைக் கைவிட முடிந்தது.

“கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகே இதிலிருந்து மீண்டு வந்துள்ளேன்.

“இப்போது நான் எந்தக் கெட்ட பழக்கத்திற்கும் அடிமையில்லை. ஒரு நாளைக்கு 12 முதல் 13 மணி நேரம் உற்சாகமாக வேலை செய்ய முடிகிறது. உங்கள் உடலை ஒரு கோயில் போலப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உடலைக் கெடுக்கும் எந்தப் பழக்கத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்,” என மாணவர்களுக்கு அவர் அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

‘கருப்பு’ திரைப்படம், படப்பிடிப்பு முடிந்தும் வெளியீடு காணாமல் இருக்கிறது.

தற்போது, ரசிகர் ஒருவர் ‘கருப்பு’ எப்போது திரைக்கு வரும் எனக் கேட்டதற்கு, ‘கோடையில்’ என மீண்டும் வெளியீட்டை அவர் உறுதிசெய்துள்ளார். இதனால், சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்