கணவரின் ஆசைகளை நிறைவேற்றும் முயற்சியில் ராணி கண்ணா

3 mins read
394093bb-b405-47bf-a4d5-14821e9cd190
மனைவி, மகளுடன் காலஞ்சென்ற ஆனந்த கண்ணன். - படம்: ஊடகம்

ஆனந்த கண்ணன் என்ற பெயரை 2,000ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிவழிகளைப் பார்த்து வளர்ந்தவர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட இயலாது.

மிகக் குறுகிய காலத்திலேயே நேயர்களின் மனத்தில் இடம்பிடித்தவர். அக்காலக்கட்டத்தில் இளையர்களின் ‘ஐகான்’ஆக இருந்தவர் அவர்.

இன்று பிரபலமாக உள்ள நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் முன்னோடி என ஆனந்த கண்ணனைக் குறிப்பிடலாம். தனது உடல்மொழி, பேச்சு, நட்பும் உறவும் பாராட்டும் பண்பு எனத் தம்மிடம் இருந்த திறமைகள், நற்குணங்களால் எல்லாரையும் ஈர்த்தார்.

இளமைத்துடிப்புடன் வலம் வந்த ஆனந்த கண்ணன் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்துபோன தகவல் வெளியானபோது அவரது குடும்பத்தார் மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான ரசிகர்களும் மனமுடைந்து போயினர்.

இந்நிலையில், ஆனந்த கண்ணனின் காதல் மனைவி ராணி கண்ணா அண்மையில் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டபோது ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

தம் கணவர் இறந்துவிட்டார் என்பதை அவரது ரசிகர்களைப் போலவே தம்மாலும் நம்பமுடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஆனந்த கண்ணன் இன்னும்கூட இந்தியாவில்தான் பணிநிமித்தம் இருப்பதாக நினைத்து மனத்தைத் தேற்றிக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

நல்ல கதைசொல்லியும் தமிழாசிரியையுமான ராணி, தனது ஒரே மகளுடன் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவர் இந்தியாவில்தான் பிறந்தாராம். ஆனால் இவரது தாயார் சிங்கப்பூரர் என்பதால் சிறு வயதிலேயே குடும்பத்துடன் சிங்கப்பூரில் தங்கிவிட்டனர்.

பள்ளி நாள்களில் இருந்தே ராணியும் ஆனந்த கண்ணனும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிவிட்டனர். இருவரும் விவாதப் போட்டிகளில் எதிரெதிர் அணிகளில் இருந்து போட்டியிட்டுள்ளனர்.

அப்போதே ஆனந்த கண்ணன் சிங்கப்பூரில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம்வந்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் அவருடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டிய பெண் வராததால், அந்த வாய்ப்பு ராணிக்கு கிடைத்தது.

“அதன்பிறகு இருவருமாகச் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினோம். பிறகு அவர் ‘ரவீந்திரன் நாடகக் குழு’வில் தீவிரமாக இருந்தபோது, நானும் அதில் இணைந்தேன்.

“அதையடுத்து, நட்பு காதலாகி, திருமணத்தில் முடிந்தது. அன்பான, இனிமையான வாழ்க்கையின் அடையாளமாக எங்களுக்கு அவா கண்ணன் என்று ஒரு மகள் இருக்கிறார்,” என்கிறார் ராணி.

அவா கண்ணன், ‘ஆர்ட்ஸ் மேனேஜ்மென்ட்’ (கலை மேலாண்மை) படித்திருக்கிறார். மேலும், மரபுக் கலைகளை ஆர்வமாக் கற்றுக்தேர்ந்து ஏகேடி நிறுவனத்தில் அவரும் முக்கியப் பங்காற்றுகிறார்.

ராணிக்குத் தமிழாசிரியையாக வேண்டும் என ஆசை. அதனால் குழந்தை பிறந்த ஒன்பது மாதத்திலேயே மதுரையில் பட்டப்படிப்பு மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார்.

“இருவரையும் பிரிந்திருக்க முடியாமல் ஆனந்த கண்ணனும் சென்னைக்கு சென்றுவிட்டார். ஊடகத்துறையில் அதிக வாய்ப்புகள் கிடைக்க, ரசிகர் கூட்டம் அதிகரித்தது. நானும் பட்ட மேற்படிப்புக்காகச் சென்னைக்குச் சென்றேன்.

“கடந்த 2011ஆம் ஆண்டு சிங்கப்பூர் திரும்பியதும் ‘ஏகேடி’ (ஆனந்த கண்ணன் தியேட்டர்ஸ்) தொடங்கினோம். நாடகப் பட்டறைகள், பறை, கரகம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து போன்ற மரபுக் கலைகளைச் சொல்லிக் கொடுத்தோம்.

“அப்போதுதான் அந்தத் துயரச்செய்தி எங்களை நிலைகுலையச் செய்தது. உடல்நலனில் மிகுந்த அக்கறையோடு இருப்பார் ஆனந்த கண்ணன். அவருக்கு பித்தப்பையில் பிரச்சினை ஏற்படும் எனக் கனவிலும் நினைக்கவில்லை.

“உலகின் எந்த மூலையில், எந்த சிகிச்சையாக இருந்தாலும், அங்கு அழைத்துச் செல்லத் தயாராக இருந்தோம். ஆனால்...” என்று சொல்லும்போதே ராணிக்கு துக்கத்தில் வார்த்தைகள் தடுமாறுகின்றன.

கண்மூடித் திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டதாகவும் அழகான பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் இருந்து, திடீரென அந்த பொம்மையைப் பிடுங்கிக் கொண்டு போனதுபோல் ஆனந்த கண்ணன் மறைந்துபோனார் என்றும் சொல்கிறார்.

கணவர் ஆனந்த கண்ணனின் பிறந்த நாளன்று அவரது நினைவாக கோயம்புத்தூர் வட்டாரத்தில் பிரபலமான ‘சிக்காட்டம்’ என்ற நடனக்கலையைச் சொல்லிக்கொடுத்து, 250 குழந்தைகளுடன் நடனமாடி அந்நிகழ்வை சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளனர்.

“ஆசைப்பட்டு செய்ய முடியாமல் போன விஷயங்களை அவருக்காக செய்து பார்க்க வேண்டும். அதுவே எனது ஆசை,” என்று அந்தப் பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார் ராணி.

குறிப்புச் சொற்கள்