மும்பை: மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் நடைபெற்ற ‘தண்டேல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சாய் பல்லவி கலந்துகொள்ளவில்லை.
பிரபல தெலுங்கு இயக்குநர் சந்து மொணடெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தண்டேல்’. இப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி ஜோடியாக இணைந்துள்ளனர்.
கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின்கீழ் அல்லு அரவிந்த் மற்றும் பனி தாஸ் (Bunny Das) தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம், இம்மாதம் ஏழாம் தேதியன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நாக சைதன்யா, சாய் பல்லவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அதேபோல் மும்பையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சாய் பல்லவி கலந்துகொள்ளவில்லை.
உடல்நலக் குறைவு காரணமாக சாய் பல்லவி வருகை தரவில்லை என்று இயக்குநர் சந்து மொண்டெட்டி கூறினார் என்று தந்தி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சாய் பல்லவி கடந்த சில நாட்களாக மோசமான காய்ச்சல், சளித் தொல்லை போன்றவற்றால் அவதிப்படுவதாக சந்து மொண்டெட்டி கூறினார்.