தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகையான வத்சலா ராஜகோபால் (93), வயதுமூப்பு காரணமாகச் சென்னையில் அக்டோபர் 30ஆம் தேதி காலமானார்.
நாடக மேடைகளில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களில் நடித்தவர் வத்சலா ராஜகோபால். அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தனது 60வது வயதில் சினிமா உலகில் அறிமுகமானார்.
பின்னர் ‘சதி லீலாவதி’, ‘அந்நியன்’, ‘ரிதம்’, ‘மொழி’, ‘வின்னர்’, ‘திருடா திருடி’ உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாசமிக்க பாட்டி உள்ளிட்ட குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி ‘சித்தி’, ‘ஆனந்தம்’ போன்ற புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களிலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் வரவேற்பைப் பெற்றார்.
அவரது மறைவையொட்டி, சென்னை பல்லாவரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்களும் திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த வத்சலா ராஜகோபாலின் மறைவு தமிழ்த் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
