16,000 பாடல்களைப் பாடிய பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு

2 mins read
71bcb9ba-b5ca-4389-a183-a300962389bd
பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன். - படம்: ஊடகம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலமானார். அவருக்கு வயது 80.

உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவின் திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு படவுலகினரும் அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் பிறந்த ஜெயச்சந்திரன், தனது மென்மையான குரலால் இசை ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டவர்.

தமிழில் ‘வசந்தகால நதியினிலே’, ‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘காத்திருந்து காத்திருந்து’, ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’, ‘கொடியிலே மல்லிகைப்பூ’, ‘மாஞ்சோலை கிளிதானோ’, ‘தாலாட்டுதே வானம்’, ‘பூவை எடுத்து’, ‘சொல்லாமலே யார் பார்த்தது’, ‘கடவுள் வாழும் கோவிலிலே’, ‘வண்டி மாடு எட்டு வச்சி’, ‘காளிதாசன் கண்ணதாசன்’ போன்ற பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

ஜெயச்சந்திரனின் மென்மையான குரலில் இழைந்தோடும் துடிப்பான பாடல்கள் இன்றும் பலரின் இதயத்தை வருடி வருகின்றன. அவரது பாடல்கள் கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் பரவலாக கேட்கப்படுகின்றன. தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய திரைப்பட விருது, கேரள மாநிலத் திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

நான்குமுறை தமிழ்நாடு மாநில விருதுகளை பாடகர் ஜெயச்சந்திரன் வென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்