இந்தியத் திரையுலகில் 1950களிலும் 1960களிலும் கொடிகட்டிப் பறந்த பின்னணிப் பாடகி பி. சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையின் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சுசீலா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
88 வயதாகும் சுசீலா, சிறுநீரகக் கோளாற்றாலும் முதுமையாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
1950களிலிருந்து சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக 17,000க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் சுசீலா பாடியுள்ளார். சுசீலா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
பாரம்பரிய இசைக் குடும்பத்தில் பிறந்த சுசீலாவின் இசைப் பயணம் சிறு வயதிலேயே தொடங்கியது. திரைத்துறையில் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் அவர் பணியாற்றியிருக்கிறார்.