தரமான, தங்கமான ‘தாய் கிழவி’

படத்தைத் தூக்கி நிறுத்தும் ராதிகாவின் நடிப்புத் திறனும் வசனங்களும்

தரமான, தங்கமான ‘தாய் கிழவி’

2 mins read
333826f8-8426-45e5-8284-c971e7fafa61
நீண்ட காலத்துக்குப் பிறகு ராதிகாவின் நடிப்புக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் தீனி போட்டிருக்கும் படம். - படம்: எம்எஸ்என்

காசு வாழ்க்கையில மகிழ்ச்சி தருமா என்று தெரியாது, ஆனால் மரியாதையைத் தரும் என்று பவுனுத்தாய் சொல்வதே ‘தாய் கிழவி’ படத்தின் மையக்கருத்து.

ஆனால், அது மட்டுமன்று. பெண், குடும்பத்திலும் சமூகத்திலும் அவளின் பங்கு, தாய்மை, பெற்றோர் சார்ந்த பிள்ளைகளின் பொறுப்பு என்று அடிப்படையான பல விஷயங்களில் சமூகம் கொண்டிருக்கும் பழைமைவாதக் கருத்துகளைப் படம் நகைச்சுவையோடும் அறிவுக்கூர்மையோடும் உடைத்தெறிகிறது.

அதுவும், எப்போதும் சமூக அழுத்தங்களும் கட்டுப்பாடுகளும் நிறைந்ததாகத் தமிழ் சினிமா காட்டும் ஒரு குக்கிராமத்தைக் களமாக வைத்து அதைச் சாதித்திருக்கிறார் இயக்குநர் சிவகுமார் முருகேசன். அதைச் சாத்தியமாக்கி இருக்கிறார் ராதிகா. பவுனுத்தாயி பாத்திரத்தை வேறு யார் ஏற்றிருந்தாலும் தமிழ்ச் சமூகம் ஒத்துக்கொண்டிருக்குமா என்பது சந்தேகமே.

கிழக்கே போகும் ரயிலில் கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசிய மாஞ்சோலைக் கிளி, தண்டட்டி கிழவியாகப் பின்னிவிட்டார். ராதிகா இதுவரை நடித்திராத, தாய்க்கிழவி வேடம் அவரது திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனை எனலாம்.

ஒப்பனை, பாவனை, பேச்சு, உடல்மொழி என்று எல்லாவற்றிலும் நடிக்க முடிந்த மிகச் சில நடிகர்களில் ஒருவர் என்பதை ராதிகா மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு வலுசேர்க்கிறது சிவகுமார் முருகேசனின் வசனங்கள். ‘தவெக’ முதல் தாலியின் புனிதம் வரையில் பல விஷயங்கள் சார்ந்து பிரசார நெடியில்லாமல் போகிறபோக்கில் நெற்றிப்பொட்டில் ஒரு தட்டுத் தட்டிவிடுகின்றன.

மூன்று மகன்கள், அவர்களின் மனைவி, பவுனுத்தாயின் மகள், அவள் கணவன், அவளது பிள்ளை, மகன்களுக்கு உதவும் பென்னிகுவிக், குடிகாரர்கள், ஊர் மக்கள் என்று படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் சிறப்பாகத் தங்கள் பங்கைச் செய்துள்ளனர், கமல்ஹாசன் பாடல்கள் உட்பட.

பேருந்தில் காதல் செய்யும் மாணவர்களைப் பவுனுத்தாயி ஏசுவதில் தொடங்கி, பூசாரி ஊர்சாமியிடம் வேண்டிக்கொள்ளும் தருணம், கல்யாணம் பண்ணத் துடிப்பதற்கான காரணத்தை பென்னிகுவிக் சொல்லுமிடம், தலைமை மருத்துவர் சக மருத்துவர்களை கடிந்துகொள்ளும் இடம் என்று காட்சிக்குக் காட்சி கைதட்டல் தருணங்கள் நிறைந்த படமாக இருந்தது.

அந்த நேர்த்தி, ராதிகாவின் ஒப்பனை, நடுவில் ஏற்படும் தொய்வு உள்ளிட்ட படத்தின் ஒரு சிலகுறைகளை மறைத்துவிட்டது.

குறைந்த செலவில், அதிக அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து ஒரு சிற்றூர், ஒரு மருத்துவமனைக்குள் அழகாகக் கதைசொல்லி இருக்கிறார்கள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும்.

கதையில் சொல்லப்படும் கருத்துகளுக்கான தேவை சிங்கப்பூர் சூழலில் மிகக் குறைவு எனத்தோன்றலாம். எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மனத்துக்குள் வேரூன்றிவிட்ட பழைமையை உடைத்தெறியும் படத்தின் இறுதிக்காட்சிக்காகவே படத்தைப் பார்க்கலாம், பாராட்டலாம்.

குறிப்புச் சொற்கள்