காப்பீடு குறித்து தென்னிந்தியத் திரையுலகில் விழிப்புணர்வும் புரிதலும் குறைவாக உள்ளதாகச் சொல்கிறார் சினிமா காப்பீடு ஆலோசகரான அபிஷேக் பாரதி.
கடந்த சில ஆண்டுகளாகவே வசூலில், விமர்சன ரீதியில் இந்திப் படங்களை விஞ்சி இருக்கின்றன தென்னிந்தியத் திரைப்படங்கள். ‘பாகுபலி’, ‘கேஜிஎப்’ ஆகியவை பெற்ற வசூல் இந்தித் திரையுலகத்தினரைப் பிரமிக்க வைத்துள்ளது எனலாம்.
இதெல்லாம் சரிதான். நாம் வாழும் வீடு, வாகனங்கள், மேற்கொள்ளும் பயணம், உடல்நலம், வணிகம் எனப் பலவற்றுக்கு காப்பீடுகள் உள்ளன. ஆனால், திரைப்படத்துறையில் காப்பீட்டுக்கு இடம் உள்ளதா என்பதுதான் உங்களது கேள்வி என்றால், அதற்கான விரிவான விளக்கங்களைத் தருகிறார் அபிஷேக் பாரதி.
‘இந்தியன்’, ‘பாகுபலி’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட பல படங்களுக்கு பல காரணங்களுக்காக இழப்பீடு பெற்றுக்கொடுத்தது இவர்தான்.
பொதுவாக நடிகர், நடிகைகள், இயக்குநர்களுக்குப் படப்பிடிப்பின்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்படலாம் அல்லது படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கி காயமடையலாம்.
மேலும் திடீர் மரணம், இயற்கை பேரிடரால் ஏற்படக்கூடிய எதிர்பாரா இழப்புகளும் கவனத்தில் கொள்ளத்தக்கவை. இதுபோன்ற தருணங்களில் கைகொடுக்கிறது திரைத்துறை காப்பீடு.
இதுகுறித்து தமிழ்த் திரையுலகத்தினரிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்று வருத்தப்படும் அபிஷேக் பாரதிக்கு, இத்துறையில் 43 ஆண்டுகால அனுபவம் உள்ளது.
திரைத்துறை காப்பீடு என்பது தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். பொதுவாக இதனை ஊடக காப்பீடு என்று குறிப்பிடுவோம்.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல், குறும் படங்கள், தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தப் பிரிவில் அடங்கிவிடும் என்று அபிஷேக் சுட்டிக்காட்டுகிறார்.
கடந்த 2024ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படம் மலையாளத்தில் வெளியானது. படப்பிடிப்பின்போது மோகன்லால் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டதாம். அவரால் படப்பிடிப்பில் தங்கியிருக்க முடியவில்லை.
படத்தின் தயாரிப்பாளர் நஷ்டத்தைச் சந்தித்தபோதும் கவலைப்படவில்லை. காரணம், இப்படத்தின் நடிகர்களுக்காக அவர் உரிய காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்தார். அதனால் அதற்குரிய இழப்பீட்டைப் பெற்றுத்தர முடிந்ததாம்.
‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு கடும் மழையால் பாதிக்கப்பட்டதாக அச்சமயம் பல்வேறு செய்திகள் வெளியாயின. ஆனால் அதன் தயாரிப்பாளரும் காப்பீடு செய்திருந்ததால் உரிய இழப்பீடு கிடைத்தது.
இந்தப் பாதுகாப்பு இருந்தும் பல தயாரிப்பு நிறுவனங்கள் இதைக் கண்டுகொள்வதில்லை என்பதுதான் தனது வருத்தம் என்கிறார் அபிஷேக் பாரதி.
ஏறக்குறைய 50 விழுக்காடு தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே காப்பீடுகளுக்கு உரிய விழிப்புணர்வைப் பெற்றிருப்பதாக அவர் சொல்கிறார்.
‘புறம்போக்கு’ தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது திடீரென கேமராவில் ஏற்பட்ட பிரச்சினையால் மூன்று நாள்கள் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் பல காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டியிருந்ததாம்.
அதேபோல் ‘கபாலி’ படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கு கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்தது. இந்த இரு நிகழ்வுகளின்போதும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிய இழப்பீடுகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் அளித்துள்ளன.
“ஒரு நாள் படப்பிடிப்பு ரத்தானால் தயாரிப்பாளருக்குப் பல லட்சங்கள் இழப்பீடு ஏற்படும். கேமரா சிக்கல், அரங்குகள் சேதமடைதல் போன்றவற்றால் பிரச்சினை ஏற்படும்போது தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற காப்பீடு உதவும். மேலும், ரூ.100 கோடி செலவில் திட்டமிட்டு எடுக்கப்படும் ஒரு படம் ரூ.50 கோடி செலவழித்த பிறகு திடீரென நின்று போகக்கூடும்.
“படக்குழுவைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் எதிர்பாராமல் இறந்துபோவது, படுகாயமடைவது போன்ற தருணங்களில் படத்தயாரிப்பு கைவிடப்பட்டால் தாங்கள் செலவிட்ட தொகையைத் தயாரிப்பாளர்கள் பெற முடியும்,” என்று விவரிக்கும் அபிஷேக், ஒரு சம்பவத்தையும் விவரிக்கிறார்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்குத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, ரூ.4 கோடி முன்பணம் கொடுத்திருந்த நிலையில், அவர் திடீரெனக் காலமானார். தயாரிப்பு நிறுவனம் காப்பீடு செய்யாததால் இழப்பீடு பெறமுடியாமல் போனதாம்.
அதேசமயம் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பின்போது மூன்று பேர் விபத்தில் சிக்கி இறந்தனர். தயாரிப்பாளர் திரைத்துறைக்கான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்ததால் உரிய இழப்பீடு கிடைத்தது.
“ஒளிப்பதிவு உதவியாளர்கள், துணை நடிகர்கள், சண்டைக் கலைஞர்கள் என எல்லாருக்கும் ஏற்ற காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவது நல்லது.
“இந்தித் திரையுலகில் ஊடகக் காப்பீடு குறித்து நல்ல விழிப்புணர்வு உள்ளது. அனைத்து இந்திப் படங்களுக்குமே முன்கூட்டியே காப்பீடு செய்துவிடுகிறார்கள். அதேபோல் தென்னிந்தியாவிலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும், என்று வலியுறுத்துகிறார் அபிஷேக் பாரதி.

