30 ஆண்டு லட்சியக் கனவு: சாங்கி விமான நிலையத்தில் ஒலிக்கும் தமிழ்க் குரல்

30 ஆண்டு லட்சியக் கனவு: சாங்கி விமான நிலையத்தில் ஒலிக்கும் தமிழ்க் குரல்

1 of 3
படம்: காஞ்சனா
படம்: பே.கார்த்திகேயன்
படம்: பே கார்த்திகேயன்

25 Oct 2026 - 5:30 am

4 mins read

சாங்கி விமான நிலையத்துக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் அறிவிப்பு நேரங்களில் ஒலிக்கும் அந்தக் குரல். உலகின் லட்சக்கணக்கான பயணிகளை விமான நிலைய முனையத்துக்கு வழிநடத்தும் அந்தக் கம்பீரமான, கணீர் குரலை நாளும் கேட்கிறோம், ஆனால் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யாரென்று யோசித்திருக்கிறோமா? அது ஒரு தமிழ்ப் பெண்ணின் குரல். 

கடந்த 30 ஆண்டுகளாக சாங்கியின் ஒவ்வொரு மூலையிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு மாயக் குரல் என்றே சொல்லலாம். அந்தக் குரலுக்கு உரியவர் திருவாட்டி காஞ்சனா தர்மலிங்கம், 52. 

தமிழ் முரசிடம் இவர் பகிர்ந்துகொண்டது வெறும் வேலை அனுபவமன்று, அது ஒரு வாழ்க்கைப் பயணம்.

14 வயது சிறுமியின் கனவு

தமக்கு 14 வயதானபோது தாத்தா-பாட்டியை வழியனுப்ப முனையம் 1க்குச் சென்றார் திருவாட்டி காஞ்சனா.

அங்கே சீருடையில் பரபரப்பாக இயங்கிய வருகைப்பதிவுப் பிரிவு (check-in) ஊழியர்களைப் பார்த்த அந்தச் சிறுமிக்குள் ஒரு பொறி தட்டியது .

“நானும் ஒருநாள் இங்கே வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனம் முழுக்க நிரம்பியிருந்தது,” என்று திருவாட்டி காஞ்சனா சிரித்தவாறே கூறினார்.

அந்தப் லட்சியப் பயணத்திற்காக இவர் மேற்கொண்ட பயிற்சியும் முயற்சியும் கைகொடுக்க, படிப்பு முடிந்ததும் அவர் முதலில் விண்ணப்பித்த வேலையும், கிடைத்த வேலையும் அதுவேதான். 

வருகைப்பதிவுப் பிரிவு ஊழியராக மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தபோது, விமான நிலையத்தில் ஒலிக்கும் கம்பீரமான அறிவிப்புகள் இவரை ஈர்த்தன. குரல் தேர்வு நேர்காணலில் பங்கேற்றுத் தேர்வான அவர், கடந்த 1997ம் ஆண்டு முதல் இன்றுவரை சாங்கியின் அதிகாரபூர்வ ‘அறிவிப்பாளராக’ கம்பீரமாக முழங்கி வருகிறார்.

ஒலிவாங்கியைப் பிடித்ததும் மாறும் ‘மாயக் குரல்’

ஆங்கிலம், தமிழ், மலாய் ஆகிய மூன்று மொழிகளிலும் திருவாட்டி காஞ்சனா அறிவிப்பு செய்கிறார். 

தொடக்கத்தில் மலாய் மொழி தெரியாதபோதும், தம் தந்தையின் வழிகாட்டுதலோடும் கடுமையான பயிற்சியினாலும் அதனைக் கற்றுத் தேர்ந்தார்.

‘உங்கள் குரலை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்? குளிர்நீர் அருந்த மாட்டீர்களா? என்பதுதான் இவரை அறிந்தவர்கள் பலரும் பரவலாகக் கேட்கும் கேள்வி.

கணவர், பிள்ளைகளுடன் திருவாட்டி காஞ்சனா
கணவர், பிள்ளைகளுடன் திருவாட்டி காஞ்சனா - படம்: காஞ்சனா

“சாதாரணமாக நான் வீட்டில் பேசும்போது என் குரல் வேறு மாதிரி இருக்கும். ஆனால், ஒலிவாங்கி முன்னால் நின்று அறிவிப்பைத் தொடங்கும் கணத்தில் என் குரல் தானாகவே கம்பீரமாக மாறிவிடும். 

“இதற்கு நான் எந்தத் தனிப்பட்ட குரல் பயிற்சிகளையோ, குளிர்நீரைத் தவிர்க்கும் உணவுப் பழக்கங்களையோ மேற்கொள்வதில்லை. அது இறைவன் கொடுத்த வரம்,” என்கிறார் திருவாட்டி காஞ்சனா.

மறக்க முடியாத நினைவுகள்

இத்தனை ஆண்டுகாலப் பணியில் எண்ணற்ற உணர்ச்சிபூர்வமான தருணங்களை இவர் எதிர்கொண்டுள்ளார்.

ஒருமுறை வெளிநாட்டுப் பயணி ஒருவர், தன் தாயார் இறந்த துக்கத்தில், தாயார் தனக்குக் கடைசியாகக் கொடுத்த கைக்கடிகாரத்தைத் தவறவிட்டதால் கண்ணீருடன் கதறினார். 

“விமான நிலைய ஊழியர்கள் அந்தக் கடிகாரத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அதனை அப்பயணியிடம் ஒப்படைத்தபோது, அவர் தரையில் அமர்ந்து கதறி அழுது நன்றி தெரிவித்த தருணம் இன்றுவரை என் மனத்தைவிட்டு அகலவில்லை,” என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் திருவாட்டி காஞ்சனா.

‘டெர்மினேட்டர்’ நகைச்சுவை

‘டெர்மினல் 1’ (முனையம்) என்பதற்குப் பதிலாக, பிரபல ஆங்கிலப் பட பாணியில் ‘டெர்மினேட்டர் 1’  எங்கே இருக்கிறது என்று கள்ளம் கபடமில்லாமல் வந்து கேட்கும் பயணிகளின் சுவாரசியமான கேள்விகளையும் எண்ணி, இன்றும் சிரிப்பை அடக்கமுடியாமல் நினைவுகூர்கிறார்.

அதேபோல, பணி என்று வந்துவிட்டால் வழிகாட்டவும் மட்டுமன்று, உயிர்காக்கவும் துணிய வேண்டும் என்பது தம் கருத்து என்ற திருவாட்டி காஞ்சனா, 2017ல் நிகழ்ந்தவற்றை கூறத்தொடங்கினார்.

2017ம் ஆண்டு மே மாதம் ஒருநாள் சாங்கி முனையம் 2ல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமானங்கள் அனைத்தும் முனையம் 3க்கு மாற்றப்பட்டன. நல்லவேளையாக தீ அணைக்கப்பட்டது, நிலையம் பாதுகாப்பு நிலைக்கு திரும்பியதாக அறிவிப்பு வெளியானது.

“அவ்விபத்தால் ஏறத்தாழ 40 விமானங்கள் பாதிக்கப்பட்டன. சிலருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. அந்தப் பதற்றமான சூழலில், வெறிச்சோடிப் போன முனையத்தில் கட்டுப்பாட்டு அறையில் முக்கிய அறிவிப்புகளைக் கூற நான் அங்கே இருந்தேன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை,” என்று கண்கள் மின்னச் சொன்னார் திருவாட்டி காஞ்சனா.

“கிட்டத்தட்ட மூன்று, நான்கு மணி நேரம், பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து அறிவித்துக்கொண்டே இருந்தேன். என் தொண்டை வறண்டுபோகும்வரை அறிவித்தேன். பயணிகள் யாருமே இல்லாத விமான நிலையத்தை நான் அன்றுதான் முதல்முறை பார்த்தேன். உள்ளே காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் மட்டுமே இருந்தனர். அந்த நாளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்,” என்று இவர் சொன்னார்.

இளையர்களுக்கு அறிவுரை

பொறுமை, அர்ப்பணிப்பு, வேலையை நேசிப்பது - இவைதான் இளையர்களுக்கான திருவாட்டி காஞ்சனாவின் அறிவுரைகள்.

“எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும், ‘உலகின் சிறந்த விமான நிலையத்தின் குரல்’ என்று சொல்லும்போது வரும் அந்த பெருமை இருக்கிறதே, அதற்கு ஈடே இல்லை,” என்று பெருமிதம் பொங்க, புன்னகையோடு விடைபெற்றார் இந்தப் பெண்மணி.

இனி நீங்கள் சாங்கி விமான நிலையத்தில் ‘பயணிகள் கவனத்திற்கு’ என்ற குரலைக் கேட்க நேர்ந்தால், அது வெறும் அறிவிப்பு மட்டுமன்று, அது தலைமுறை தாண்டியும் நீடிக்கும் கனவு, உழைப்பு, அன்பு கலந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் குரல் என்பது நினைவிற்கு வரலாம்.

குறிப்புச் சொற்கள்