சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கம்(Civilians Association (Singapore) அதன் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவை டிசம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடியது.
ஹில் வியூ சமூக மன்றத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் எழுதிய ‘ஒரு விளையாட்டு அணியின் மனிதநேயப் பயணம்’ மற்றும் முனைவர் ராஜி சீனிவாசனின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Humane Journey of a Soccer Team’ ஆகிய இரண்டு நூல்களும் வெளியீடு கண்டன.
1964ஆம் ஆண்டில் ஒரு காற்பந்து அணியாகத் தொடங்கி, பிறகு ஒரு இலாப நோக்கமற்ற சமூக அமைப்பாகிய சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் இந்த நூல் திரு யூசுப் ராவுத்தர் ரஜித்தின் 14ஆவது தமிழ் புத்தகம்.
“தொடர்ந்து சமுதாயத்திற்கு ஆதரவளிப்பது சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். இச்சங்கத்தின் வளர்ச்சியை ஒரு புத்தகமாகப் பதிவுசெய்ததில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் திரு யூசுப்.
இந்த நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத்தின் மூலம் சமுதாயத்திற்குத் தொண்டாற்றிய முக்கியமானவர்களை இந்த நூல் சிறப்பிக்கிறது,” என்று கூறினார் திருவாட்டி லோ.
வசந்தம் கலைஞர்கள் மற்றும் மணிமாறன் நடனக் குழுவினர் படைத்த ஆடல்-பாடல் அங்கங்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஏறக்குறைய 200 பேரைக் களிப்பில் ஆழ்த்தியது. அவர்களுக்கு நூல்களுடன் சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத்தின் 60ஆம் ஆண்டு நினைவுப் பதக்கமும் வழங்கப்பட்டது.