காலஞ்சென்ற கணவரின் கனவு கலையாது தொடரும் பயணம்

3 mins read
அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு சவால்களைத் துணிந்து சந்தித்து அவற்றை மீள்திறனுடன் எதிர்கொண்டு வீறுநடை போடும் சுபாஷினியின் வாழ்க்கை அனுபவம் இது. 
5c8e4581-03a4-4fef-8d40-5035741ad8fc
சிங்கப்பூர் டவர் டிரான்சிட் பேருந்து செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் ஒரே இந்தியப் பெண் சேவைக் கட்டுப்பாட்டாளர் திருமதி சுபாஷினி சந்தனம். - படம்: பே. கார்த்திகேயன்
multi-img1 of 2

சிங்கப்பூரின் டவர் டிரான்சிட் நிறுவனத்தில் கணவர் நவீன் ஜீவானந்தன் பேருந்து ஓட்டுநராக இருந்தார். இன்று அவர் இல்லை என்றாலும் அவரது கனவுகளை நனவாக்கும் ஒரே இலக்குடன் அனுதினமும் ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம் செய்கிறார் திருமதி சுபாஷினி சந்தனம், 32.

சிங்கப்பூர் டவர் டிரான்சிட் பேருந்து செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் ஒரே இந்தியப் பெண் சேவைக் கட்டுப்பாட்டாளர் இவர். இவரது பொறுப்பின்கீழ் வரும் பேருந்துச் சேவைகளின் முதல் பேருந்து, அதிகாலை இயங்கத் தொடங்கியதிலிருந்து கடைசிப் பேருந்து இரவில் பணிமனைக்குச் செல்லும் வரை பரபரப்பாக நீள்கிறது திருமதி சுபாவின் வேலை நேரம்.

பணியில் சேர்ந்த முதல் நாளில் வேலையிடம் வரை கரம்பிடித்து அழைத்துவந்த கணவர்,  சிங்கப்பூரில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தபோது அந்தத் துயரைத் துணிவுடன் கடந்து செல்கிறார் திருமதி சுபா.

ஆர்வத்துக்கு வித்து கணவர்

பேருந்தில் தாம் சந்திக்கும் மக்கள், அவர்களுக்கு இடையே நிகழும் உரையாடல்கள் போன்றவற்றைக் கணவர் தம்மிடம் சொல்லும்போது தமக்கும் இத்துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டார் அவர்.  

“ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. இத்துறைக்குத் தேவையான குணநலன்கள், திறன்கள் குறித்து தமது அனுபவங்களிலிருந்து நவீன் பொறுமையாக எனக்கு எடுத்துக்கூறுவார். 

“குறிப்பாக, வேலைப்பளுவை நான் உணரக்கூடாது என்பதற்காக வீடு திரும்பிய பின்னும் எனக்காக உணவு தயாரித்துக் கொடுப்பார். இப்பணியில் நான் உற்சாகத்துடன் தொடரத் தன்னால் ஆன அனைத்தையும் செய்தவர் என் கணவர்,” என்றார் திருமதி சுபா.

ஒரு பேருந்துச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டாளராகப் பேருந்துச் சேவை துல்லியமாக இயங்குவதைக் கண்காணித்தல், சேவைகள் தடைப்பட்டால் அதற்கேற்ப பேருந்து ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து சேவைகள் தொடர்ந்து இயங்குவதை உறுதிசெய்தல், பேருந்து விபத்து அல்லது பயணி எவரேனும் பேருந்தில் காயமுற்றால் உடனடியாக அதற்கேற்ப நடவடிக்கைகளைத் துரிதமாக முடுக்கிவிடுதல் என ஒவ்வொரு மணிநேரமும் மிகவும் கவனமாகச் செயல்பட்டு வருகிறார் திருமதி சுபா.

அவர் ஞாபகம் என்றுமே...

“வேலையில் சேர்ந்த காலத்தில் சவால்கள் இருந்தன. சில நேரம் திகைத்துப் போயிருக்கின்றேன். ஆனாலும் ‘அடுத்து என்ன? யோசி சுபா!’ என்று என் கணவர் உயிருடன் இருந்தபோது சொன்ன சொற்களே இன்றுவரை என்னைக் கடப்பாட்டுடன் இயங்க வைக்கின்றன,” என்று குறிப்பிட்டார் சுபா.

“ஜனவரி 30ஆம் தேதி வழக்கம்போல வீட்டிலிருந்து கிளம்பினோம். கணவர் எனக்குக் கடைசியாகக் காலை உணவாக இட்லி வாங்கிக் கொடுத்தார். பிறகு சந்திப்போம் என்று அன்பு முத்தமிட்டுச் சென்றவர், மீண்டும் வரவில்லை.

கணவருடன் சுபாஷினி.
கணவருடன் சுபாஷினி. - படம்: சுபாஷினி சந்தனம்

“எனது கைப்பேசிக்கு அழைத்தவரிடம் நவீன் விபத்தில் சிக்கிவிட்டாரா என்று கேட்டேன். ஆனால், ‘அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்’ என்ற பதிலைக் கேட்டதும் எனக்குத் தலை சுற்றிப் போனது,” என்றார் சுபா.

நினைவிழந்த நிலையாக இருக்கும் என்ற பிரார்த்தனையுடன் விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற சுபா, “காலை நேரப் பணி முடிந்து சென்றவர் உயிரிழந்துவிட்டார் என்பதை அங்கு கிடந்த அசைவற்ற அவரின் உடல் உணர்த்தியது,” என்றார்.

“இதுவரை எல்லாவற்றிலும் உறுதுணையாக இருந்த கணவர் திடீரென உயிருடன் இல்லை. குடும்பத்தினர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் வரை என்ன செய்யப் போகிறோம் என்று நின்றபோது நான் பணியாற்றிய நிறுவனம் முன்வந்து உதவியதற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என்றார் திருமதி சுபா.

கணவரின் உடலை மலேசியாவிற்கு அனுப்பும் ஏற்பாடுகளை டவர் டிரான்சிட் நிறுவனம் செய்துகொடுத்து கணவரின் ஈமச்சடங்கு காரியங்களில் பெருந்துணையாகத் தோள்கொடுத்ததை விவரித்தார் சுபா.

“உறங்காமல் உண்ணாமல் அவர் அருகில் இருந்ததே, ஈமச்சடங்குகளை நானே செய்துமுடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒருவேளை அழுது சோர்ந்துபோனால் அந்தச் சடங்குகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற ஒரே குறிக்கோளில் துணிவுடன் நின்றேன்,” என்றார் திருமதி சுபா.

தொடரும் பயணம்

துணையோடு சிங்கப்பூர் சாலைகளில் வலம்வந்த நாள்கள், இன்று தனியாகச் செல்லும் சூழலாக மாறிவிட்டது. எனினும், பணிக்குச் செல்லத் தாம் கொண்டுள்ள உத்வேகம் குறித்துப் பேசினார் திருமதி சுபா.

“இது என் கணவர் பணியாற்றிய துறை. நான் வகிக்கும் இந்தப் பொறுப்பு வெறும் பணி மட்டுமன்று, இதுதான் என் அடையாளம் என்று என் கணவர் கூறிச் சென்றது இன்றுவரை என்னை சிங்கப்பூருக்கு வரவைக்கிறது,” என்றார் திருமதி சுபா.

திருமதி சுபாஷினி சந்தனம்.
திருமதி சுபாஷினி சந்தனம். - படம்: பே. கார்த்திகேயன்

“வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும்போது பயணிகள் சிலர் பேசுவதைச் சில சமயம் கவனித்திருக்கிறேன். பேருந்து சரியான நேரத்தில் வந்து நிற்கும்போது  அவர்கள் பாராட்டுவதைக் கேட்கும் எனக்கு ‘இந்த சேவையின் கட்டுப்பாட்டாளர் நானல்லவா?’ என்ற பெருமிதம் தம்முள் எழும் என்றார் திருமதி சுபா.

குறிப்புச் சொற்கள்