‘ஏஐ’ தமிழ் கற்பித்தலின் புதிய மைல்கல்: சஞ்சய் முத்துகுமரன்

‘ஏஐ’ தமிழ் கற்பித்தலின் புதிய மைல்கல்: சஞ்சய் முத்துகுமரன்

படம்: த.கவி

29 Oct 2026 - 5:30 am

3 mins read

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சி கண்டுவரும் இன்றைய சூழலில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்பது வணிக வாய்ப்பாக மட்டுமன்றி, கல்வி, சமூக மாற்றத்திற்கான பெரும் கருவியாகவும் உருவெடுத்துள்ளது என்கிறார் ‘ஸ்டோரிலேப்’, ‘எடுவில்’ ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர் சஞ்சய் முத்துகுமரன்.

குறிப்பாக, மின்னிலக்கத் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிப்பதிலும் பாரம்பரியக் கலைகளை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதிலும் அது முக்கியப் பங்காற்றுவதாகத் தமிழ் முரசின் ‘என்ன செய்யும் ஏஐ?’ வலையொளித் தொடருக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

கல்வித் தொழில்நுட்பமும் தமிழ் கற்பித்தலும்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மாணவர்களுக்கு மின்னிலக்கப் பொம்மலாட்டம் போன்ற, ஈர்க்கக்கூடிய முறைகளில் கலைகளைக் கொண்டுசேர்ப்பதில் ‘ஸ்டோரி லேப்’ (Story Lab) நிறுவனம் தன் பயணத்தைத் தொடங்கியது.

வரைகலைத் திறன் இல்லாத மாணவர்கள்கூட ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்களின் கற்பனைக்கேற்பப் படக்கதைப் (Comics) புத்தகங்களை உருவாக்கவும் கதைகளைச் சொல்லவும் இயலும் நிலை இதன் மூலம் சாத்தியமானது என்றார் சஞ்சய்.

“இதன் தொடர்ச்சியாக உருவாகிய ‘எடுவில்’ (Eduwill) நிறுவனம், தமிழ் மொழிக் கற்றலுக்காகவே தனிப்பட்ட செயலியை வடிவமைத்துள்ளது. கஹூட் (Kahoot), புளூக்கெட் (Blooket) போன்ற செயலிகள் வகுப்பறையில் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், அவை தமிழ் மொழிக்காகச் சிறப்புற உருவாக்கப்பட்டவை அல்ல.

“இந்தக் குறையைப் போக்க ‘எடுவில்’ செயலி ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆசிரியர்களின் வேலைப்பளுவைக் குறைக்கிறது. தமிழ் விளையாட்டுப் பயிற்சிகளுக்கான கேள்விகளை விரைவாக உருவாக்கும் முதல் வரைவை அது தருவதால், ஆசிரியர்களின் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது,” என்று சஞ்சய் கூறினார்.

மாணவர்களின் மொழி ஆர்வம் பெருக நவீன உத்திகள்

வகுப்பறைகளில் தனிப்பட்ட கற்றல் சாதனங்களை (PLD) மாணவர்கள் திறக்கும்போதே அவர்களிடம் புதுவித உற்சாகம் தொற்றிக்கொள்வதைச் சுட்டிய சஞ்சய், மின்னிலக்கப் பொம்மலாட்டத்தின்போது, சாதனத்தின் திரையில் கதாபாத்திரங்களை விரல்களால் நகர்த்தி, உரையாடல் வசனங்களை எழுதும்போது மாணவர்களின் மொழித்திறனும் நடிப்புத் திறனும் இயல்பாகவே வளர்கின்றன என்றார்.

மேலும், திறம்பட ‘ஏஐ’ கருவிகளை இயக்க ‘கோஸ்டார்’ (CO-STAR) கட்டமைப்பு சார்ந்த ‘புரோம்ப்ட் இன்ஜினியரிங்’ (Prompt Engineering) முறைகள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

அதே வேளையில், ஒரே ‘புரோம்ப்ட்’டில் அனைத்தையும் கேட்காமல், சிறுகச் சிறுகக் கேள்விகளை உடைத்து ‘ஏஐ’யிடமிருந்து துல்லியமான காணொளிகள், கலைப் படைப்புகளைப் பெறும் ‘புரோம்ப்ட் செயினிங்’ (Prompt Chain) முறையிலும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது என்றார் அவர்.

‘நோட்புக்எல்எம்’ (NotebookLM) போன்ற கருவிகள், பாடக் குறிப்புகளை ஒலிப் புத்தகங்களாகவும் தகவல் வரைகலைப் (Infographics) படங்களாகவும் மாற்றி ஆழமான கற்றலுக்கு வழிவகுக்கின்றன என்று சஞ்சய் குறிப்பிட்டார்.

தமிழ் மொழியும் ‘ஏஐ’ எதிர்கொள்ளும் சவால்களும்

தமிழ் மொழியில் ‘ஏஐ’ பயன்பாடு அதிகரித்துவரும் போதிலும், சில சவால்கள் நீடிக்கத்தான் செய்கின்றன என்றார் அவர். “இணையத்தில் இருக்கும் தமிழ் சார்ந்த பிழையான தரவுகளையும் (Unclean Data) ‘ஏஐ’ உள்வாங்குவதால், சில நேரங்களில் எழுத்துப் பிழைகள் ஏற்படுகின்றன. ஜெமினை (Gemini) போன்ற ‘ஏஐ’ மாடல்கள் தமிழில் சிறப்பாகச் செயல்பட்டாலும், இலக்கணப் பிழைகளைத் தவிர்க்க, சரியான தரவுகளைக் கொடுத்து ‘ஏஐ’யை நாம் தொடர்ந்து மெருகேற்ற வேண்டும்,” என்று அவர் சொன்னார்.

மனிதர்கள் இணையத்தில் பதிவேற்றிய தகவல்களில் பிழைகள் இருப்பதால்தான் அவை இதில் எதிரொலிக்கின்றன என்றும் அவர் விளக்கினார்.

குறிப்பாக உச்சரிப்பு சார்ந்த பிழைகள் இப்போது அதிகம் இருப்பதாகவும் எதிர்காலத்தில் மொழித்திறன் வளர்க்கும் மேம்பட்ட உரையாடல் செயலிகள் தயக்கமின்றித் தமிழ் பேச உதவக்கூடும் என்றும் சஞ்சய் சொன்னார்.

ஆசிரியர்களின் வரவேற்பு

ஆசிரியர்களுக்கு ‘ஏஐ’ பயிலரங்குகளை நடத்திவரும் சஞ்சய், தொடக்கத்தில் ‘ஏஐ’ குறித்துத் தயக்கம் காட்டிய ஆசிரியர்கள், பயிலரங்குகளில் அதன் இயக்கம், நன்மைகள், எல்லைகளைப் புரிந்துகொண்ட பிறகு, ஆர்வத்துடன் வரவேற்பதாகக் கூறினார்.

‘ஏஐ’ ஆசிரியர்களுக்குப் போட்டியாக மாறாது; மாறாக, மனிதத் திறனுக்கு ஒரு வழிகாட்டியாகவும், கற்பித்தலுக்கு மேலும் சுவையூட்டும் பாலமாகவும் திகழும் என்றார் அவர்.

அதே நேரத்தில், ‘ஏஐ’யிடம் பெற்ற தகவல்களைச் சரிபார்க்க வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு இருப்பதையும் அவர் சுட்டினார்.

‘ஏஐ’ தவறான அல்லது போலித் தகவல்களைத் தரும் சிக்கலைத் (Hallucination) தவிர்க்க, அது வழங்கும் தகவல்களின் மூலச் சான்றைச் (Source Grounding) சரிபார்க்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ‘ஏஐ’ எங்கிருந்து அந்தத் தகவலை எடுத்தது என்று அதனிடமே கேட்கலாமென அவர் பரிந்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்