வெஸ்ட் கோஸ்ட்டில் ‘அமர்க்கள தீபாவளி’ கொண்டாட்டம்

2 mins read
3adc32be-1c01-421d-9aeb-db5346fa1739
‘அமர்க்கள தீபாவளி’ நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி அமைச்சரும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றம்
multi-img1 of 2

வெஸ்ட் கோஸ்ட் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த ‘அமர்க்கள தீபாவளி’ நிகழ்ச்சி நவம்பர் 9ஆம் தேதி வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றத்தில் களைகட்டியது.

அடித்தளத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், வெஸ்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்கள் என ஏறத்தாழ 1,020 பேர் ஒன்றுகூடி தீபாவளியைக் குதூகலமாகக் கொண்டாடினர்.

வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்ற நிர்வாகக் குழுவுடனும் வெஸ்ட் கோஸ்ட் குடிமக்கள் ஆலோசனைக் குழுவுடனும் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், தேசிய வளர்ச்சி அமைச்சரும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“அன்பான நண்பர்களே, மாலை வணக்கம். உங்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். கடந்த ஆண்டில் குடியிருப்பாளர்களுக்கு நாம் பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தோம். சுகாதார விழா, சமூக நிகழ்ச்சிகள், வீடுகளைச் சுத்தம் செய்தல், உணவு விநியோகம் ஆகியவை அவற்றில் அடங்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தந்து, உழைத்த அனைவருக்கும் எனது நன்றி. இன்றைய நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவுக்கும் எனது நன்றி,” என்று தமிழிலேயே திரு லீ உரையாற்றினார்.

சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றான தமிழில் பேசுவதில் திரு லீ மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றார் வெஸ்ட் கோஸ்ட் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவரும் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவருமான திரு நசீர் கனி.

“அவர் கூற விரும்பிய சில கருத்துகளை என்னுடன் பகிர்ந்தார். அவற்றைச் சுருக்கமாக தமிழில் மொழிபெயர்த்து, அவர் எளிதில் புரிந்துகொள்ள அவற்றை ஆங்கில உச்சரிப்புடன் எழுதிக் கொடுத்தேன். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று, நான்கு நாள்களுக்கு முன் தாம் தீவிரமாகப் பயிற்சி செய்ததாக அவர் என்னிடம் சொன்னார்,” என்றார் திரு கனி.

தமிழர் அல்லாத ஓர் அமைச்சர் முயற்சி எடுத்து தமிழில் உரையாற்றியது குடியிருப்பாளர்களுக்கு, குறிப்பாக தமிழ், இந்தியக் குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டக்கூடிய ஒரு செய்தியாக இருந்ததாக அவர் சொன்னார்.

தீபாவளி நிகழ்ச்சியில் உள்ளூர்க் கலைஞர்களின் மேடை நிகழ்ச்சிகளோடு சுவையான உணவு வகைகளும் பல்வேறு கலை நடவடிக்கைகளைக் கொண்ட கூடங்களும் அதிர்ஷ்டக் குலுக்கு நிகழ்வும் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்