வளரும் பருவத்தில் கல்வியாளர்கள், ராணுவ அதிகாரிகள் போன்றோரின் பணியைக் கண்டு வியந்த திருவாட்டி துர்கா ராஜேந்திரன், 34, இளவயதிலிருந்தே சமூகச் சேவையில் ஈடுபடத் தொடங்கினார்.
தேசிய இளையர் மன்றத்தின் ‘என்வைசி இன்ஸ்பிரிட்’ இளந்தலைவராகத் தற்போது செயல்பட்டுவரும் திருவாட்டி துர்காவின் சேவையை அங்கீகரித்து, தற்காப்பு அமைச்சு அவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது.
ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு அரங்க நிலையத்தில் நடைபெற்ற முழுமைத் தற்காப்பு விருந்து நிகழ்ச்சியில் இவருடன் சேர்த்து 145 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
வியாழக்கிழமை (நவம்பர் 13) நடைபெற்ற நிகழ்ச்சியில் 49 சிறிய, நடுத்தர நிறுவனங்கள், 20 பெருநிறுவனங்கள், 43 அமைப்புகள், 33 தனிமனிதர்கள் எனப் பல்வேறு தரப்பினர்க்கு விருதுகள் வழங்கப்பட்டன.
முழுமைத் தற்காப்புக்காக நல்கப்படும் உன்னத ஆதரவை அங்கீகரித்து விருதுகள் வழங்கப்படுவதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், தற்போதைய உறுதியில்லாச் சூழலில் முழுமைத் தற்காப்பின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.
மெத்தனமாக இருப்பதைத் தவிர்க்குமாறு எச்சரித்த அவர், நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பாகவே சிங்கப்பூரின் மீள்திறனை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
“அவசரமானவற்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முக்கியமானவற்றைப் பற்றியும் சிந்திப்பதைத் தற்காக்க பல்லாண்டுகள் ஆகலாம். நெருக்கடி தொடங்கிய பிறகு சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையையும் பிணைப்பையும் உருவாக்கிவிட முடியாது. அதேபோல, ஆபத்துகள் எழும்போது மட்டும் சிங்கப்பூரைப் பாதுகாக்கும் மனவுறுதியை உடனடியாக வரவழைத்துக்கொள்ள முடியாது. அவற்றுக்கான தேவை ஏற்படுவதற்கு முன்பாகவே நாம் அவற்றைக் கட்டமைக்க வேண்டும்,” என்று அமைச்சர் சான் விளக்கியுரைத்தார்.
ராணுவ வலிமை மட்டுமே ஒருபோதும் போதுமானதாக அமையாது எனக் குறிப்பிட்ட திரு சான், சோதனைகளை எதிர்கொள்ளும்போது ஒற்றுமையுடனும், தெளிவான சிந்தனையுடனும், மனவுறுதியுடனும் மக்கள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்
அந்தப் பண்புகளை கட்டிக்காக்கும் வகையில் திருவாட்டி துர்கா, புதிய குடிமக்களின் ஒருங்கிணைப்புக்காக மக்கள் கழகத்தின் சமூகப் பகிர்வு அங்கங்களுக்கும் பங்களித்தார்.
“ஒருங்கிணைப்பு என்பது இருவழிப்பாதையாகும். கதைசொல்லல், விளையாட்டுகள், உரையாடல்கள்மூலம் குடியிருப்பாளர்களும் புதிய குடிமக்களும் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளவும், நமது பல்வேறு பழக்கவழக்கங்களைப் பகிர்ந்துகொள்ளவும் நான் உதவி வருகிறேன்,” என்று அவர் கூறினார்.
சிண்டா இளையர் மன்றத்தில் சமூகச் சிந்தையுள்ள புதிய தலைமுறையினரையும் உருவாக்கப் பாடுபடும் திருவாட்டி துர்கா, அவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.
“இளையர்களே நம் எதிர்காலம். நாம் இணைப்புத்திறன் மிக்கதோர் உலகில் வாழ்கிறோம். ஆனாலும், இளையர்கள் பலர் தாங்கள் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவே உணர்கின்றனர்.
“இளைய சிங்கப்பூரர்களின் மனங்களுக்கு வளமூட்டி, அவர்கள் அதிக நம்பிக்கையுடனும் பிணைப்புடனும் சமூகத்திற்குப் பங்களிக்கக் கூடியவர்களாக மேம்பட்டால் அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீள்திறனையும் வலுப்படுத்தும்,” என்றார் திருவாட்டி துர்கா.
