தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் சிங்கப்பூர் எழுத்தாளரும் ‘செம்மொழி’ இதழாசிரியருமான எம். இலியாசுக்கு ‘தாய்மொழிக் காவலர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கம் சார்பில், கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 21) கொண்டாடப்பட்ட உலகத் தாய்மொழி நாள் விழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விருது வழங்கினார்.
அவருடன் மயிலாடுதுறை தமிழ்ச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெனிஃபர் ச.பவுல்ராஜ், ஐயங்கார் பேக்கரி உரிமையாளர் சிவா, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. சிவச்சந்திரன், மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவைத் தலைவர் தமிழ்ச்செம்மல் முனைவர் சி. சிவசங்கரன், கவிச்சுடர் கவிதைப் பித்தன், யுனெஸ்கோ பன்னாட்டு விருதாளர் வே. ஸ்ரீராம் சர்மா ஆகிய சான்றோர்களின் முன்னிலையில் அந்த விருது வழங்கப்பட்டது.
இந்திய மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது உலகினரால் அறியப்படும் திருவள்ளுவரின் உருவப்படத்தை வரைந்த ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மாவின் மகன், வரலாற்று ஆய்வாளர், இயக்குநர், எழுத்தாளர் வே. ஸ்ரீராம் சர்மா, வள்ளுவம் வரைந்த வரலாற்றுத் தூரிகை என்ற தலைப்பில் தொடக்கவுரை ஆற்றினார்.
திருவள்ளுவரின் உருவப்படத்தை மயிலாடுதுறையில்தான் வேணுகோபால் சர்மா வரைந்துள்ளார்.
விழாவில், ’மாமணி போற்றுதும்’ என்ற நூலை தருமபுரம் ஆதீனக் கல்லூரி முன்னாள் முதல்வர் மு. சிவச்சந்திரன் வெளியிட, மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் சி. சிவசங்கரன், ஏவிசி கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சு. தமிழ்வேலு, மயிலாடுதுறை தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் சா. மதியழகன், தமிழ்ச்சங்க சிறப்புத் தலைவர் சு.சிவலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
திரு இலியாசுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தனுக்கு தாய்மொழிக் காவலர் விருதும் வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கலைமணிக்கு பசுமைப் புரவலர் விருதும் மூவருக்கும் பொற்கிழி, பட்டயம் ஆகியவை வழங்கப்பட்டன.
செம்மொழி ஆசிரியர் எம். இலியாசும் வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கலைமணியும் ஏற்புரை நிகழ்த்தினர்.
தொடர்புடைய செய்திகள்
கவிஞர் கவிதைப்பித்தன், ‘உயிரின் ஒலி தமிழ்’ என்ற தலைப்பில் விழா பேருரையாற்றினார்.
விழாவிற்குத் தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழ்ச்செம்மல் ஜெனிபர் ச. பவுல்ராஜ் தலைமை வகித்தார்.
மணிமேகலை வரவேற்புரை ஆற்றினார்.

