பட்டொளி வீசிப் பறக்கிறது பாத்தாமில் தமிழ்க் கொடி

பாத்தாமில் தமிழ்க் கொடி பறக்குது

பட்டொளி வீசிப் பறக்கிறது பாத்தாமில் தமிழ்க் கொடி

5 mins read
தமிழ்ப் பள்ளி இல்லை. தமிழ் வகுப்பில்லை, தமிழ் செய்தித் தாள் இல்லை ஆனாலும் பாத்தாமில் தமிழ்க் கொடி உயரப் பறக்கிறது. பாத்தாம் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் திருவிழா 2026ல் முத்தமிழும் தித்தித்தது தனிச்சிறப்பு.
f99af0cd-1a2d-4e7b-908c-7f588b469463
சமூக விழாவாக மலர்ந்த பாத்தாம் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா. - படம்: பே கார்த்திகேயன்
multi-img1 of 3

பாத்தாம் தீவில் வசிக்கும் எண்ணற்ற தமிழ்க் குடும்பங்களை அரவணைக்கும் தாய்வீடாகத் திகழ்கிறது பாத்தாம் தமிழ்ச் சங்கம்

சங்கம் தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சங்கம் எதனால் அறுவடைத் திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடுகிறது என்று தமிழ் முரசிடம் விவரித்தார் சங்கத்தை நிறுவிய குழுவைச் சேர்ந்த திரு கார்த்திக் ராஜா, 38.

‘‘தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது பொங்கல். அவ்வகையில்தான் பொங்கல் விழாவைத் தமிழர் விழாவாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்தோம்,’’ என்றார் அவர்.

பாத்தாம் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட காரணத்தையும் பகிர்ந்துகொண்டார் திரு கார்த்திக்.

‘”பொங்கல் விழாவுடன் மட்டும் நிறுத்திவிடக்கூடாது. சமூகத்திற்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் நிறுவனர் குழுவினரிடம் மேலோங்கியதால்  சமூகத்தின் குரலாகத் திகழும் எண்ணத்துடன் இந்தோனீசிய அரசாங்கத்தின் வழிகாட்டுதலோடு பாத்தாம் தமிழ்ச் சங்கமாக இதனைப் பதிவுசெய்தோம்,” என்று அவர் விவரித்தார்.

கார்த்திக் ராஜா. 
கார்த்திக் ராஜா.  - படம்: பே கார்த்திகேயன்

‘‘முதலில் இருவர் மனத்தில் இந்த எண்ணம் உதித்தது. பிறகு இப்படி யோர் அமைப்பு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் மேலும் சிலர் சேர்ந்தனர். அப்படியே 15 பேர் குழுவாக இணைந்தோம். பிறகு பாத்தாம் தீவில் உள்ள தமிழ் மக்களிடம் இக்கருத்தைக் கொண்டுசேர்க்க விழைந்தோம்,’’ என்றார் அவர்.

அதன்படி, அயல்நாட்டில் வசித்தாலும் அக்கம்பக்கத்தில் ஒருவருக்கொருவர் உதவும் வகையில் ஒன்றாகச் செயல்படவேண்டும் என்ற எண்ணத்தை வீடு வீடாகக் கொண்டுசேர்த்ததாகக் கூறினார் திரு கார்த்திக்.

‘‘விழாக்களைக் கொண்டாடுவது மட்டும் நம் இலக்கன்று. நல்லது கெட்டது என்று எது நேர்ந்தாலும் ஒருவருக்கொருவர் சமூகமாகத் தோள்கொடுத்து உதவ வேண்டும் என்ற இலக்குடன் எப்போதும் தொடர்புடன் இருப்பது அவசியம் என்பதைக் குடும்பங்களிடம் விளக்கினோம். அதன்பிறகு இந்தோனீசிய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி, இக்குழு பாத்தாம் தமிழ்ச் சங்கமாகப் பதிவுசெய்யப்பட்டது,’’ என்று அவர் நினைவுகூர்ந்தார்.

தற்போது ஏறத்தாழ 300 குடும்பங்கள் ஒன்றுகூடும் இடமாகத் திகழும் சங்கம், தமிழ்ப் புத்தாண்டையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் என்றும் அவர் சொன்னார்.

விழாக்கள் மட்டுமல்லாது மக்களுக்குத் தேவையான எந்த உதவியையும் செய்துகொடுக்க தொண்டூழியர்களும் ஆர்வத்துடன் முன்வருவதைக் காண முடிந்தது.

பாத்தாம் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா.
பாத்தாம் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா. - படம்: பே கார்த்திகேயன்

மேலும், பாத்தாம் தமிழ்ச் சமூகத்தின் கோரிக்கைகளுக்கு இந்தியத் துணைத் தூதரகம், இந்தோனீசிய அதிகாரிகள் உட்பட உள்ளூர் சமூகத்தினரும்  பெரிதும் உதவுகின்றனர். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையேயான நல்லுறவுப் பாலமாக திகழ்வதிலேயும் சங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என்றும் நிர்வாகிகள் கூறினர். இது குறித்துப் பேசிய திரு கார்த்திக், ‘‘முன்பெல்லாம் கடப்பிதழைப் புதுப்பிக்க அல்லது ஏதாவது பதிவுசெய்ய வேண்டும் என்றால் ஜகார்த்தா, மேடான் ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். 

‘‘இதனால் பணியிலிருந்து விடுப்பு எடுத்து, வெகுதொலைவு பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதுபற்றி நம் அக்கறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, அவர்கள் நம் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்தனர். அதனால், தற்போது அத்தகைய  சேவைகளைப் பெறுவதற்கான ஒரு முகாம் பாத்தாமிலே நடத்தப்படுகிறது. 

‘‘எனவே, பண்டிகைக்கு ஏற்பாடு செய்வதுடன் சமூக மேம்பாட்டிற்கு வித்திடும் அமைப்பாகவும் விரிவடைவதற்கு சங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது,’’ என்று திரு கார்த்திக் கூறினார்.

குடும்பங்கள் கொண்டாடும் முத்தமிழ் 

பல ஆண்டுகளாக இத்தகைய விழா நடத்துவதற்கு $4,000 தேவைப்பட்டது. சவால்களும் இருந்தன. ஆனாலும், தமிழ்ப் பண்பாட்டைப் பேணும் இலக்குடனும் தமிழ்ச் சமூகத்தின் ஒன்றுகூடலை விட்டுவிடக்கூடாது என்ற இலக்குடனும் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று பல இன மக்கள் பங்கேற்று மகிழும் சமூகத் திருவிழாவாக மறுமலர்ச்சி அடைந்துள்ளது.

பாத்தாமில் உள்ள இந்தியத் தொழில் முனைவர்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசிய மக்களும் பேராதரவு தருகின்றனர். நிதியாக, தொண்டூழியமாக, வருகையளிப்பதன் வாயிலாக என இவ்விழாக்களின் உயிர்த்துடிப்பாகக் குடும்பங்கள் திகழ்கின்றன.

ஜெய்சங்கர் - ஜெயலட்சுமி இணையர்.
ஜெய்சங்கர் - ஜெயலட்சுமி இணையர். - படம்: பே கார்த்திகேயன்

தாயகம் கடந்து வந்தாலும் இந்தியாவிலிருந்து இங்கு குடியேறியிருக்கும் சொந்தங்களுடன் பண்டிகையைக் கொண்டாடுவது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது என்றனர் ஜெய்சங்கர், 37 - ஜெயலட்சுமி, 30, இணையர்.

இவ்விழாவில் பங்கேற்று ஆடல் பாடல் எனக் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருந்தனர் ரவிகுலராமன், 46 - ஸ்ரீதேவி, 38, இணையர்.

பல்லினக் குடும்பத்து பிள்ளைகளுடன் ரவிகுலராமன் - ஸ்ரீதேவி இணையர்.
பல்லினக் குடும்பத்து பிள்ளைகளுடன் ரவிகுலராமன் - ஸ்ரீதேவி இணையர். - படம்: பே கார்த்திகேயன்

தாய்நாட்டில் பங்கேற்க முடியாத குறையை இந்த விழா தீர்த்துவைக்கிறது என்றார் திருவாட்டி ஸ்ரீதேவி.

‘‘சொந்த ஊரில் இப்படி மேடையேறி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் இல்லை. ஆனால், இங்குத் தமிழ் மக்களாக ஒன்றுகூடி, நம் தமிழ்க் கலைகளை அரங்கேற்றி, அவற்றை நம் பிள்ளைகளிடமும் கொண்டுசேர்ப்பது சிறந்த அனுபவம்,’’ என்றார் அவர்.

‘‘சங்கம் இருப்பதால் எந்தப் பிரச்சினை வந்தாலும் உதவி கிடைக்கும். தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைக்கும் விழாக்கள் என்றாலும் மொழி, இனம் கடந்து பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்களும் வருவார்கள். பிள்ளைகளும் ஆர்வமாகப் பங்கேற்று நம் பண்பாட்டை அறிந்துகொள்கின்றனர். இதில் கிடைக்கும் மகிழ்ச்சி உணர்வுபூர்வமானது,’’ என்றார் திரு ரவிகுலராமன். 

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பொங்கல் விழாவால் ஊரைவிட்டுப் பிரிந்து இருக்கிறோம் என்ற எண்ணத்தைக் களைய முடிகிறது என்றனர் தினேஷ்குமார், 45 - ராஜேஷ்வரி, 40, இணையர்.

தினேஷ்குமார் - ராஜேஷ்வரி இணையர்.
தினேஷ்குமார் - ராஜேஷ்வரி இணையர். - படம்: பே கார்த்திகேயன்

‘‘இப்படி ஒருவரையொருவர் அவ்வப்போது சந்தித்துக்கொள்வதால், ‘எல்லைகள்தான் வேறு; மற்றபடி தமிழ் மக்களாக அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்’ எனும் நம்பிக்கையைச் சமூகத்திடம் தழைக்கச் செய்கின்றன இந்த நிகழ்ச்சிகள்,’’ என்று அவர்கள் கூறினர்.

இந்தியாவோடு நின்றுவிடாத தமிழ்ப் பண்பாடு 

பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, காலை முதல் மாலை வரை பாத்தாம் தமிழ் மக்களுடன் கலந்துரையாடினார் மேடானுக்கான இந்தியத் துணைத் தூதர் ரவி சங்கர் கோயல்.

மேடானுக்கான இந்தியத் துணைத் தூதர் ரவி சங்கர் கோயல்.
மேடானுக்கான இந்தியத் துணைத் தூதர் ரவி சங்கர் கோயல். - படம்: பே கார்த்திகேயன்

தமிழ் முரசுக்கு அளித்த நேர்காணலின்போது தமிழில் வாழ்த்து கூறிய அவர், “தமிழ்ப் பண்பாடு என்பது இந்தியாவோடு மட்டும் நின்றுவிடவில்லை, உலகம் முழுவதும் பரவியுள்ளது,” என்றார்.

‘‘பாத்தாம் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்துள்ள இந்தக் கலாசார விழா இந்தியாவிற்குரிய பண்பாட்டுப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றுகிறது. 

“அதற்கேற்றாற்போல, இந்தோனீசியாவும் துடிப்புமிக்க, பன்முக கலாசாரங்கள் மேலோங்கும் சமூகத்தைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. இந்தோனீசியாவும் (Bhinneka Tunggal Ika), அதாவது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் தத்துவத்தை நம்புகிறது.

“இதைப்போலவே இந்தியாவிலும் பல்வேறு கலாசாரங்கள் இருந்தாலும், அனைவரும் ஒன்றிணைந்து அமைதியுடன் வாழ்ந்து வருகின்றனர்,’’ என்றார் திரு கோயல்.

விருந்தோம்பலால் மெய்சிலிர்த்த மதுரை முத்து

விழாவின்போது நூற்றுக்கணக்கான மக்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. 

பொங்கல் விருந்து.
பொங்கல் விருந்து. - படம்: பே கார்த்திகேயன்

விழாவின் சிறப்பம்சமாக தமிழ்க் கலைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழா மேடையில் அணிவகுத்தன. இவற்றில் பங்கேற்க இந்தியாவில் இருந்து வருகையளித்திருந்தனர் மதுரை முத்து குழுவினர். 

விழா ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறிய நகைச்சுவைக் கலைஞர் மதுரை முத்து தொடர்ந்து பேசினார்.

மதுரை முத்து.
மதுரை முத்து. - படம்: பே கார்த்திகேயன்

தமிழ் மக்கள் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றிருப்பதாகக் கூறிய திரு மதுரை முத்து, இந்தோனீசியாவிற்குப் பலமுறை சென்றிருந்தபோதும் பாத்தாமிற்கு வந்திருப்பது இதுவே முதன்முறை என்றார்.

விழாவில் தம்மைக் கவர்ந்த அம்சம் குறித்து பேசிய அவர், தமிழ் மணம் பரப்பும்  உணவுகள் இடம்பெற்றிருப்பதைப் பாராட்டினார்.

‘‘பல இடங்களில் சமையல் நிறுவனங்களிலோ அல்லது உணவகங்களிலோ தயாரித்த பண்டங்கள விருந்தினர்களுக்குப் பரிமாறுவார்கள்.

“ஆனால், பாத்தாம் தமிழ்ச் சங்கத்தில், இதுவரை கண்டிராத வகையில், காய்கறிகள் நறுக்குவதில் தொடங்கி, அவற்றைச் சமைத்து வாழை இலையில் பரிமாறி தமிழ் வழிமுறைகளை மறக்காமல் பின்பற்றி வருவது பாராட்டிற்குரியது,’’ என்றார் அவர்.

இருபதுக்கும் மேற்பட்ட நாட்டுக் காய்கறிகள் இடம்பெற்றிருந்த அந்த உணவு வகைகளை எண்ணுவதற்கே ஏழு நிமிடங்கள் ஆகிவிட்டது என்று தமக்கே உரிய நகைச்சுவை பாணியில் குறிப்பிட்டார் திரு முத்து.

குணசேகர்.
குணசேகர். - படம்: பே கார்த்திகேயன்
குறிப்புச் சொற்கள்