புன்னகை பூக்கும் தொண்டு: வெளிநாட்டு ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றும் நல்லுள்ளங்கள்

புன்னகை பூக்கும் தொண்டு: வெளிநாட்டு ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றும் நல்லுள்ளங்கள்

1 of 2
படம்: தமிழ் முரசு
படம்: தமிழ் முரசு

24 Oct 2026 - 5:30 am

3 mins read

சிங்கப்பூரின் கட்டுமானத்திலும் நாட்டின் வளர்ச்சியிலும் தங்களின் வியர்வையைச் சிந்தும் வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வுக்காக ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ (ஐஆர்ஆர்) அறநிறுவனம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 

அண்மையில் நடைபெற்ற அதன் புதிய சமூக மையத் திறப்புவிழாவின்போது, அவ்வமைப்பில் இணைந்து பல ஆண்டுகளாகத் தங்களின் பொன்னான நேரத்தைச் சமூகத்திற்காக அர்ப்பணித்துவரும் முதன்மைத் தொண்டூழியர்கள் இருவர் தங்களின் அர்த்தமிகு பயணம் குறித்து தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.

செயல் எளிது! உவகை பெரிது!

கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் விளம்பரங்களைப் பார்த்துவிட்டு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு ‘ஐஆர்ஆர்’ அமைப்பில் தொண்டூழியராக இணைந்தவர் திருவாட்டி அகிலா. 

ஊரே முடங்கிப்போன காலத்தில் தனிமையில் வாடிய ஊழியர்களுக்கு உணவுகளையும், அத்தியாவசியப் பொருள்களையும் காரில் எடுத்துச் சென்று நேரில் வழங்கத் தொடங்கிய இவரது தொண்டூழியப் பயணம், இன்று ஊழியர்களின் முகங்களை மலரச் செய்யும் பல புதுமையான திட்டங்களாக உருவெடுத்துள்ளது.   

குறிப்பாக, பொதுமக்கள் தங்கள் இல்ல விழாக்கள் அல்லது பிறந்தநாள் விழாக்களை முன்னிட்டு ஊழியர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தைச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து வருகிறார் திருவாட்டி அகிலா. 

இத்திட்டத்தின்படி, மாதந்தோறும் 50 முதல் 100 ஊழியர்கள் வரை உணவகங்களுக்கோ வீடுகளுக்கோ அழைத்துச் செல்லப்பட்டு விருந்தளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர். 

மேலும், ஒவ்வொரு மாதமும் பிறந்தநாள் கொண்டாடும் ஊழியர்களைச் சேர்த்து, வார இறுதியி்ல் கேக் வெட்டி, அவர்களுக்குப் பிடித்த உணவுகளை வழங்கி, ஆடல் பாடலுடன் கொண்டாடும் திட்டமும் பெருவரவேற்பைப் பெற்றுள்ளது.   

“காலையில் கண் விழிப்பதே நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். நமக்கு இங்கேயே குடும்பம், வசதி எல்லாம் இருக்கின்றன. ஆனால், குடும்பத்தைப் பிரிந்து, வெளிநாட்டில் உழைக்கும் இந்த ஊழியர்களுக்கு நாம்தான் குடும்பம்.

‘‘ஒரு சமோசாவையோ, பீட்சாவையோ சாப்பிடும்போது அவர்களின் முகங்களில் தோன்றும் மலர்ச்சிதான் என் வாழ்வின் மிகப்பெரிய மனநிறைவு,” என்கிறார் திருவாட்டி அகிலா. 

தொண்டூழியத்திற்கு முன், பின் என்று வாழ்வை யோசிக்கலாம் என்ற அவர், எதையும் குறைசொல்லாமல், இருப்பதைக் கொண்டு நன்றியோடு வாழவேண்டும் என்ற உயரிய பாடத்தை வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்தே கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

பரிவை அடித்தளமாக்கும் ஆழமான அர்ப்பணிப்பு

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ‘ஐஆர்ஆர்’ அமைப்பில் முதன்மைத் தொண்டூழியராகவும் வழிகாட்டியாகவும் இயங்கி வருபவர் திருவாட்டி உஷா சுப்பிரமணியம். 

அமைப்பின் தொடக்கக் காலத்தில், தமது வீட்டையே அத்தியாவசியப் பொருள்களைச் சேமித்து வைக்கும் கிடங்காக மாற்றிச் சேவையாற்றியவர் இவர்.

அண்மையில் ஐஆர்ஆர் அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களுக்காகப் பல ஆண்டுகளாக இயங்கிவரும் தனது இலவசக் கடையான ‘இன்ஸ்பையர் சேவையை விரிவுபடுத்தியது. 

அது பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய திருவாட்டி உஷா, வெறும் உதவிகளோடு நின்றுவிடாமல், ஊழியர்களின் தனிப்பட்ட, மருத்துவப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டறியும் ‘கேஸ் வொர்க்’ ஊழியராகவும் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார். 

‘‘சம்பளப் பிரச்சினைகள், கண், பல் மருத்துவத் தேவைகள், வேலை இடத்தில் ஏற்படும் காயங்களுக்கான இழப்பீடுகள் எனப் பல்வேறு உணர்வுபூர்வமான சிக்கல்களில் ஊழியர்களுக்கு முறையான வழிகாட்டுதலையும் உதவியையும் அளித்துவரும் தொண்டூழியராகப் பணியாற்றுவது ஒரு வேலையன்று, அது எனக்கு வாழ்க்கை,” என்றார் திருவாட்டி உஷா.   

கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தில் ஊழியர்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருள்களை வழங்க எக்ஸ்போ போன்ற தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்குச் சென்று களப்பணியாற்றிய தருணங்களையும் இவர் நினைவுகூர்ந்தார். 

“அச்சமயத்தில் அமைப்பின் மூலமாக உணவளித்து உதவிய ஊழியர்கள் சிலர், பெருந்தொற்று ஓய்ந்த பிறகும் எங்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தங்கள் தாயாருக்குச் சேலை வாங்குவதுபோல எனக்கும் வாங்கியதாகக் கூறி அதை அன்பளிப்பாகக் கொடுத்தபோது கண்கலங்கிவிட்டேன். ‘நீங்கள் எங்களுக்குத் தாய் போன்றவர்’ என்ற அவர்களின் சொற்கள், எந்தச் செல்வத்திற்கும் ஈடாகா,” என்று திருவாட்டி உஷா உணர்ச்சிமேலிடக் கூறினார்.   

ஐஆர்ஆர் அமைப்பின் தலைமைத்துவமும் சக ஊழியர்களின் அர்ப்பணிப்புமே சோர்வின்றி இயங்க வைப்பதாகக் கூறும் இவர், குடும்பத்தின் முழு ஆதரவோடு வெளிநாட்டு ஊழியர்களின் ஒவ்வொரு சிறுதேவையையும் பெருந்தேவையாகக் கருதி, தொடர்ந்து சேவையாற்றி வருகிறார்.  

குறிப்புச் சொற்கள்