‘தமிழோடு இசைந்த என் வாழ்வு’ நூல் வெளியீடு

‘தமிழோடு இசைந்த என் வாழ்வு’ நூல் வெளியீடு

படம்: ஷிவாணி சக்திவேல்

01 Nov 2026 - 6:30 am

2 mins read

சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய மூத்த கல்வியாளர் முனைவர் எஸ்.பி. ஜெயராஜதாஸ் பாண்டியன் எழுதிய ‘தமிழோடு இசைந்த என் வாழ்வு’ நூல் வெளியீடு கண்டுள்ளது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் அக்டோபர் 24ஆம் தேதி சனிக்கிழமை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழோடு தாம் கொண்ட ஆழமான பிணைப்பை நூலாசிரியர் பகிர்ந்துகொண்டார்.

தனது ஆரம்பகால ஆசிரியர் பணி குறித்த நினைவுகள் பற்றிப் பேசிய திரு ஜெயராஜதாஸ் பாண்டியன், குறிப்பாகக் கற்பித்தல் நுணுக்கங்களையும் மாணவர்களிடம் அன்பாகப் பழகும் முக்கியத்துவத்தையும் மூத்த ஆசிரியர்கள் தமக்குப் பாடம் கற்பித்த முறையையும் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.

நூலைப் படித்த முனைவர் சுப.திண்ணப்பன், அதன் தலைப்பின் பொருத்தத்தையும் அதில் நூலாசிரியர் சேர்த்திருக்கும் இலக்கியக் கூறுகளையும் சுட்டிக்காட்டிப் பாராட்டினார்.

“சாந்துணையுங் கல்லாதவாறு என்று சொல்வதுபோல படிக்கின்ற காலம் முழுவதும், கடைசி வரைக்கும், படிக்க வேண்டும் என்ற துடிப்போடு படித்தவர் இவர்,” என்று எதைக் கற்றாலும் எப்படிக் கற்பிக்கலாம் என்ற நோக்கத்திலேயே எதையும் பார்க்கும் நூலாசிரியரின் புத்தாக்கத்தை அவர் புகழ்ந்தார்.

வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி, மாடர்ன் மாண்டிசோரி இன்டர்நேஷனல் குழுமத்தின் தலைவரும் தமிழ் வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவருமான முனைவர் டி. சந்துரு, தேசியக் கல்விக் கழக இணைப் பேராசிரியர் முனைவர் சீதாலட்சுமி, தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் த. ராஜசேகர், இந்திய மரபுடைமை வாரியத்தின் ஆலோசக தலைவர் ராஜாராம் உள்ளிட்ட பல சமூகத் தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மாணவர்களிடம் கற்றல் கற்பித்தல் தொடர்புடைய பல நூல்களைப் பகிர்ந்துகொண்ட தம் ஆசிரியர், தற்போது அவருடைய புத்தகம் ஒன்றை வெளியிடுவதைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார் மாணவ ஆசிரியர் ராகலட்சுமி ரஜிதா, 43.

நூல் வெளியீட்டு விழாவில் ‘எஸ்பிஜே லெகசி’ (SPJ Legacy) என்னும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

நூலில் இடம்பெறாத சில கருத்துகளும் முனைவர் ஜெயராஜதாஸ் பாண்டியன் எதிர்காலத்தில் சமூகத்தில் பதிவுசெய்ய விரும்பும் செய்திகளும் அச்செயலியில் பதிவேற்றப்படும் என்று அச்செயலியை உருவாக்கியவரும் நூலாசிரியரின் மகனுமான திரு அரவிந்தர குமரன், 28, தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்