நல்லிணக்கம் மிளிரும் பன்முகத்தன்மைமிக்க சமுதாயத்தை அமைக்கும் நாட்டின் இலக்குடன் அஃப்லாக் ஸ்டார்ஸ் கல்வி, கலாசார மன்றத்தின் சேவைப் பயணம் இணக்கமாக ஒத்துப்போவதாக சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை கூறியுள்ளார்.
அஃப்லாக் ஸ்டார்ஸ் கல்வி, கலாசார மன்றத்தின் 15வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர், “கடந்த 15 ஆண்டுகளில் வசதி குறைந்தோரைப் பராமரிக்கவும் சமூகத்திற்குக் கல்வி, கலாசார நிகழ்வுகளை நல்கி ஊக்குவிக்கவும் என்ன செய்ய இயலும் என்பதை அஃப்லாக் மன்றமும் அதன் தொண்டூழியர்களும் காட்டியுள்ளனர்,” என்றார்.
இவ்விழாவில் ‘அஃப்லாக் திருமணச் சேவை’, ‘அஃப்லாக் வலையொளி’ எனும் இரு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
‘அஃப்லாக் வலையொளி’ நிகழ்ச்சிகள் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் இணையம் வழி கிடைக்கவுள்ளன.
இத்திட்டங்கள் குறித்துப் பேசிய திரு முரளி, “சமூகத்தில் அதிகரித்துவரும் தேவைகளை இவ்விரு முயற்சிகளும் பூர்த்திசெய்யும். சமூகப் பிணைப்பையும் வலுவாக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எளியோருக்கு மருத்துவப் பரிசோதனை, முதியோர் இல்லங்களுக்குச் செல்வது, உம்ரா யாத்திரைகள், தேவையுள்ளோருக்கு உதவுதல் உட்பட சமூகத்திற்குப் பயனளிக்கும் பல்வேறு நேரடிச் சமூகச் சேவைகளில் ஈடுபட்டு வருகிறது அஃப்லாக்.
மெண்டாக்கி, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்), லோட்டஸ் லைட் அறக்கட்டளை உள்ளிட்ட பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த, ஒற்றுமையான சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப அஃப்லாக் மேற்கொண்டு வரும் பணிகள் மகிழ்ச்சி அளிப்பதாக திரு முரளி கூறினார்.
விழாவில் பங்கேற்ற சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன், வருங்காலத்தில் சமூகத்தை மேம்படுத்தும் நோக்குடன் மேலும் பல புதிய முயற்சிகளில் அஃப்லாக் மன்றத்துடன் இணைந்து செயல்படுவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
விழாவில் பாராட்டுச் செய்தி பகிர்ந்த சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் ஹாஜி அ.முஹம்மது பிலால், சமூக முன்னேற்றத்திற்கான மன்றத்தின் நற்செயல்கள் வளமாகத் தொடர்ந்திட வாழ்த்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அஃப்லாக் ஸ்டார்ஸ் கல்வி, கலாசார மன்றத் தலைவர் ஷேக் அலாவுதீன் பின் ஒஸ்மான், எதிர்வரும் நாள்களில் இன்னும் பலரைச் சென்றடையும் இலக்குடன் பேரளவிலான நிகழ்ச்சிகளை இந்திய முஸ்லிம் பேரவையுடன் இணைந்து நடத்த நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
விழாவின் ஓர் அங்கமாக, மன்றத்தின் சாதனை பயணத்தை விவரிக்கும் காணொளி திரையிடப்பட்டது. இவ்விழாவையொட்டி நடைபெற்ற விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.