வீட்டுக்கு அருகிலேயே தீபாவளி ஒளியூட்டை மகிழ்வோடு காணும் வாய்ப்பை புக்கிட் கோம்பாக் குடியிருப்பாளர்கள் பெற்றனர்.
புளோக் 372 புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31 அருகே அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற கொண்டாட்டங்களில் ஏறக்குறைய 600 பேர் பங்கேற்றனர்.
ஹில்வியூ சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் கோம்பாக் வணிகர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், ‘லவ் லைவ்’, இன, சமய நல்லிணக்க வட்டம் ஆகியவற்றின் ஆதரவோடு நடந்தேறியது.
எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை; கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சரும் புக்கிட் கோம்பாக் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான லோ யென் லிங் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேடை நிகழ்ச்சிகளுடன் மக்களுக்கு இலவசமாக சுடச்சுட பராட்டா பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சிக்கான தமது பாராட்டைத் தெரிவித்த திருவாட்டி லோ, சீன, மலாய் பெண்கள் பங்கேற்ற சேலை அழகுப் போட்டியைக் குறிப்பிட்டுப் பேசினார்.
“இதுவே நமது சமூகத்தை மிகவும் சிறப்பானதாக்குகிறது. நாம் நமது சொந்த பண்டிகைகளை மட்டும் கொண்டாடுவதில்லை. ஒருவருக்கொருவர் மற்றவர்களின் பண்பாடுகளையும் மரபுகளையும் ரசிக்கவும் அனுபவிக்கவும் நாம் ஒன்றிணைகிறோம்,” என்று அவர் கூறினார்.
நிறைவளிக்கும் நினைவுகள்
நிகழ்ச்சி தங்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிப்பதாக ஆசிரியை சித்தி ஆயிஷா, 48, தெரிவித்தார்.
“சிறப்பான உணவு, நடன நிகழ்ச்சிகள் என அனைத்தும் அடங்கிய ஒரு முழுமையான தொகுப்பு வழங்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
திருவாட்டி சித்தியின் கருத்தை எதிரொலித்த அவரின் கணவர் அஸ்மான் இப்ராஹிம், 53, “நான் 1986லிருந்து கோம்பாக் பகுதியில் வசித்து வருகிறேன். ஆண்டுக்காண்டு மேம்படும் இச்சமூகம், இத்தகைய நிகழ்ச்சிகளால் சிறப்பு பெறுகிறது,” எனத் தெரிவித்தர்.
நிகழ்ச்சியின்போது கிட்டத்தட்ட 1,000 பராட்டாவை கேஎன்எஸ் உணவகம் வழங்கியது. அத்தனைப் பேருக்கும் பரிமாறிய அனுபவம் இன்பகரமாக இருந்ததாக அதன் இயக்குநர் குணசேகரன் நளாயினி கூறினார்.
“ஹில்வியூ சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் பல்லின மக்கள் ஒன்றிணைந்து வாழும் சமூகத்தில், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி ஒற்றுமையாக இருப்பது முக்கியம்,” என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சிக்காக ஹில்வியூ சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் குணசேகரனின் வழிநடத்துதலில் மூன்று மாதங்களாக திட்டமிடுதல் நடந்துவந்ததாக மூத்த அடித்தள ஆலோசகர் பிரமிளா கிலிட்டஸ் தெரிவித்தார்.
“நிகழ்ச்சியைப் பற்றி குடியிருப்பாளர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் தெரிவித்து அவர்களை அழைத்து வந்தது அதன் வெற்றிக்குப் பெரிதும் துணைபுரிந்தது,” என்று அவர் கூறினார்.
