உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி சிங்கப்பூரில் இன்று செயல்படாவிட்டாலும் அதன் முன்னாள் மாணவர்களின் இதயங்களில் அப்பள்ளியின் நினைவுகளும், அங்கு உருவான நட்பும் என்றும் அழியாதவை என்பதை இவ்வாண்டின் ‘நட்பின் கலை விழா’ மீண்டும் மெய்ப்பித்துள்ளது.
பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்துவரும் இவ்விழா நட்பு, பாரம்பரியம், தமிழ் உணர்வு ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக சனிக்கிழமை (நவம்பர் 8) ‘சிவில் சர்வீஸ் கிளப் @ சாங்கி’ வளாகத்தில் உற்சாகமாக நடைபெற்றது.
கிட்டத்தட்ட 300 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற திருக்குறள்தான் உங்கள் அனைவரையும் பார்க்கும்போது என் நினைவிற்கு வருகிறது. இது உண்மையிலேயே அன்பாலும் நட்பாலும் சேர்ந்த ஒரு கூட்டம்,” என்றார் அவர்.
செயல்பாட்டில் இல்லாத ஒரு பள்ளியின் மாணவர்கள் ஆண்டுதோறும் இணைந்து கொண்டாடுவது சிறிய விஷயமன்று என்று குறிப்பிட்ட டாக்டர் ஹமீது, தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கும் உயிரோட்டத்துடன் கொண்டுசெல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பழைய நினைவுகளைத் தூண்டும் சிறப்புப் புகைப்படக் காட்சியுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆடல் பாடல் மேடைநிகழ்ச்சிகள், நினைவுப் பகிர்வுகள், விளையாட்டுகள், இரவு உணவு விருந்து முதலியவையும் இடம்பெற்றன.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக தமிழ், கல்வி துறைகளுக்கு ஆற்றிய நீண்டகால பங்களிப்புக்காக முன்னாள் மாணவர்களும் மூத்த கல்வியாளர்களுமான திரு பொன் சுந்தரராசுவும் திரு மு.அ.மசூதும் விருதுகளுடன் சிறப்பிக்கப்பட்டனர்.
சிங்கப்பூரின் ஒரே தமிழ் உயர்நிலைப்பள்ளி என்ற பெருமையையும் பெற்ற இப்பள்ளி, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பினால் 1946ஆம் ஆண்டு உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பின்னர், இது 1960ஆம் ஆண்டு உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளியாகச் செயல்படத் தொடங்கி, மொத்தம் 36 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயங்கியது.
பள்ளி 1982ல் மூடப்பட்டாலும், அதன் மாணவர்கள் தங்கள் பற்றை விட்டுவிடாமல் ஆண்டுதோறும் ஒன்றுகூடுவது வேறு எந்தச் சங்கமும் செய்யாத அரிய செயல் என்று சங்க ஆலோசகராகவும் செயல்படும் திரு பொன் சுந்தரராசு, 75, கூறினார்.
மேலும், 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் உறுதிமொழியைத் முதன்முதலில் தமிழில் வாசித்தவர் தாம் என்றும் அது தமது பள்ளிக்காலத்தின் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
“ஆண்டிற்கு ஒருமுறை நண்பர்களைச் சந்திப்பதில் கிடைக்கும் இன்பமே தனி. நம் பள்ளியானது கல்வி, பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றைப் பல தலைமுறைகளுக்கு வழங்கிய பெருமைமிக்க நிறுவனம். அதன் முன்னாள் மாணவர்கள் இன்று பல துறைகளிலும் சிறந்து விளங்கி, உலகம் முழுவதும் மின்னுகிறார்கள்,” என்றார் சங்கத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ்.
ஸ்ரீ நாராயண மிஷனிலிருந்து முதியோர் சிலரும் விழாவில் கலந்துகொண்டு அதற்கு மேலும் சிறப்பளித்தனர்.
செயற்குழு உறுப்பினரான திருவாட்டி சிவபாக்கியம் சிதம்பரம், 77, இது போன்ற ஒன்றுகூடல்களில் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பற்றி விவரிக்கையில், “நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது எங்கள் முதிய வயதை மறந்துவிடுகிறோம். 15-16 வயதில் நாங்கள் செய்த அட்டகாசம், ஆசிரியர்கள் எப்படியெல்லாம் கடிந்துகொண்டனர் போன்றவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து சிரித்து மகிழ்வோம்,” என்றார்.
அவர், 1964ல் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து இருந்தபோது நடைபெற்ற இனக்கலவரத்தால் பள்ளியில் ஏற்பட்ட சிரமமான அனுபவங்களையும் 1965ல் சுதந்திரம் கிடைத்ததையும் தமது பள்ளிக்கால மறக்க முடியாத நினைவுகளாகப் பகிர்ந்துகொண்டார்.
சங்கச் செயற்குழுத் துணைத் தலைவரும் பள்ளியின் இறுதி ஆண்டில் படித்த முன்னாள் மாணவருமான திருவாட்டி நாகரத்தினம் அருஞ்செல்வி, 59, பெரும்பாலும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களே இதில் பங்கேற்பதாகக் குறிப்பிட்டார்.
“அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேவந்து, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது மட்டுமல்லாமல், தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்து இதை ஒரு குடும்ப விழாவாக மாற்ற வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்,” என்றார் அவர்.
நட்பின் கலை விழா தலைமுறைகளை இணைக்கும் இதயப் பிணைப்பாகும் என்ற சங்கச் செயலாளரும் நிகழ்ச்சி மேலாளருமான திரு சி. குணசேகரன், தமிழ் மொழி, பண்பாடு, கல்வியின் மதிப்பை அது மீண்டும் நினைவூட்டுவதாக குறிப்பிட்டார்.
“உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி, அதன் மாணவர்களுக்கு ஒழுக்கம், மனிதநேயம், தமிழின் மீது பெருமைகொள்ளும் மனப்பாங்கை உருவாக்கியது. கல்வியிலும் குணத்திலும் சிறந்த அடித்தளத்தை அமைத்தது. அதனால் தான் நாம் இன்று பல துறைகளில் சிறந்து விளங்குகிறோம்,” என்று பெருமையுடன் அவர் கூறினார்.
ஆறு மாதத் தயாரிப்பில் இளந்தலைமுறை முன்னாள் மாணவர்களையும் தொழில்நுட்பக் குழுக்களையும் இணைத்தது இவ்வாண்டு நிகழ்ச்சிக்குப் புத்துயிரூட்டியதாக அவர் சொன்னார்.

