தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முருகு சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா

2 mins read
85898eaf-8836-41d0-b72f-6bc482dfe35a
திரு முருகு சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து முருகு குடும்பத்தினர் கோலாலம்பூரில் அதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். - படம், செய்தி: நா.ஆண்டியப்பன்

சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழின் துணையாசிரியராகவும் மலேசியாவின் தமிழ்நேசன் நாளிதழின் ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய திரு முருகு சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து முருகு குடும்பத்தினர் கோலாலம்பூரில் அதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் கடந்த ஜூன் மாதம் கதைக்களத்துடன் இணைத்து திரு முருகு சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது.

பேராசிரியர் சுப. திண்ணப்பன், முனைவர் அ. வீரமணி, கவிஞர் க.து.மு. இக்பால், திருவாட்டி கமலாதேவி அரவிந்தன் ஆகியோர் அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோனாப்பட்டு என்னும் ஊரில் 1924ஆம் ஆண்டு அக்டோபர் 5ல் பிறந்து, பல்கலைக்கழக முதலாமாண்டு வரை அவர் கல்வி கற்றார்.

1953ஆம் ஆண்டு திரு முருகு சுப்பிரமணியம் மலாயா சென்றார். ‘தமிழ்நேசன்’ இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார்.

1954ல் சிங்கப்பூர் வந்த அவர் ‘தமிழ் முரசு’ நாளிதழில் துணையாசிரியரானார். 1962ல் மீண்டும் மலாயா சென்ற திரு முருகு சுப்பிரமணியன் ‘தமிழ்நேசன்’ நாளேட்டின் முதன்மை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

தமிழ் முரசில் பணியாற்றியபோது அப்பத்திரிகையில் வெண்பாப் போட்டி, கவிதைப் பக்கம், எழுத்தாளர் அறிமுகம், ஆண்டு மலர்கள் போன்றவற்றை உருவாக்கிப் பலரது கவனத்தைப் பெற்றார்.

மலேசியாவில் இளம் எழுத்தாளர்கள் உருவாக முருகு சுப்பிரமணியம் முனைப்பாகச் செயல்பட்டார்.

தமிழ் நேசனில் முருகு சுப்ரமணியன் ஆசிரியராக இருந்தபோது அறிமுகப்படுத்திய ‘பவுன் பரிசுத் திட்டம்’ மலேசிய எழுத்தாளர்களுக்கு உந்துதல் கொடுத்ததோடு மலேசியாவில் தமிழ் இலக்கியம் செழித்து வளர்வதற்கான வழி வகையையும் செய்தது.

1976ல் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தமிழ் நேசனை விட்டு விலகினார்.

1977 மார்ச் மாதம் அவர் தொடங்கிய ‘புதிய சமுதாயம்’ மாத இதழில் இளைஞர்களுக்கு எழுத வாய்ப்பளித்தார்.

அவர் 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி காலமானார்.

அவரது நினைவாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் விருது வழங்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்