தனித்துவமான பாரம்பரியம்: செட்டிக் காவடி

தனித்துவமான பாரம்பரியம்: செட்டிக் காவடி

3 mins read
02bebd2a-da87-4426-8976-e2ca889424b9
திரு வயி. வயிரவன் (இடது) அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில், தமது குடும்பத்தினருடன் இணைந்து தமது காவடியை அமைக்கிறார். - படம்: த.கவி
multi-img1 of 3

தைப்பூசத் திருநாளன்று நாம் பொதுவாகக் காணும் பால் காவடிகளுக்கு அப்பால், செட்டிக் காவடி என்பது தனித்துவமான அடையாளமும் ஆழமான வரலாற்றுப் பின்னணியும் கொண்ட ஒரு பாரம்பரியமாகும்.

செட்டியார் சமூகத்தினரால் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்தக் காவடி செலுத்தும் வழக்கம், தைப்பூசத்துக்கு முந்தைய நாளான ‘புனர்பூச’ நட்சத்திரத்தன்று எடுக்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்.

வயிரவன் குடும்பத்தைப் பொறுத்தவரை, இக்காவடி எடுப்பது என்பது ஒரு நேர்த்திக்கடனாக மட்டுமல்லாமல், பரம்பரைத் தொடர்ச்சியின் சின்னமாகவும், தங்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு மரபாகவும் திகழ்கிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநரான 58 வயது வயி. வயிரவன், சிங்கப்பூரில் செட்டிக் காவடி எடுக்கும் தமது குடும்பத்தின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவர்.

அவரது கொள்ளுத்தாத்தா தொடங்கிய இந்த வழக்கம், தாத்தா, தந்தை வழியாகத் தொடர்ந்து, இப்போது அவரது மகனுக்கும் வந்தடைந்துள்ளது. தமது 12வது வயதில் காவடி எடுக்கத் தொடங்கிய திரு வயிரவன், கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து காவடி எடுத்து வருகிறார்.

காவடி எடுப்பது ஒரு நாள் நிகழ்ச்சியாக இருந்தாலும், அதற்கான தயாரிப்புகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிடுகின்றன. “தைப்பூசத்திற்கு ஒரு மாதம் முன்பே விரதத்தைத் தொடங்கிவிடுவோம். மெத்தையில் தூங்காமல் பாயில் உறங்குதல், அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவை உட்கொள்ளுதல் என மனத்தையும் உடலையும் தூய்மைப்படுத்திக் கொள்வோம்,” என்று திரு வயிரவன் கூறினார்.

காவடியின் அரைவட்ட வடிவச் சட்டத்தின் இரு புறங்களிலும் பொருத்தப்படவிருக்கும் மயில் தோகைகளைத் திரு வயிரவன் தயார்செய்கிறார்.
காவடியின் அரைவட்ட வடிவச் சட்டத்தின் இரு புறங்களிலும் பொருத்தப்படவிருக்கும் மயில் தோகைகளைத் திரு வயிரவன் தயார்செய்கிறார். - படம்: த.கவி

மற்ற காவடிகளிலிருந்து செட்டிக் காவடி சற்று மாறுபட்டது. இதில் பாலுக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை நிரப்பப்படுவதால், இது ‘சர்க்கரைக் காவடி’ எனவும் அழைக்கப்படுகிறது.

இதன் கட்டமைப்பு நுணுக்கமானது. அரைவட்ட வடிவச் சட்டம் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது என்றாலும், அதில் பயன்படுத்தப்படும் ஏழு குச்சிகள் உறுதியான மூங்கிலால் ஆனவை. இருபுறமும் தலா இரண்டு மயில் தோகைகள் என மொத்தம் நான்கு தோகைகளால் இது அலங்கரிக்கப்படுகிறது. காவடியின் மேல்பகுதி ‘பன்னாங்கு’ எனப்படும் பாரம்பரியத் துணியால் மூடப்பட்டிருக்கும்.

காவடியை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்கள்: பன்னாங்கு (வண்ணத் துணி), மயில் தோகைகள்.
காவடியை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்கள்: பன்னாங்கு (வண்ணத் துணி), மயில் தோகைகள். - படம்: த.கவி

காவடிச் சட்டத்தை இணைக்க, துண்டிக்கப்படாத ஒரே கயிற்றைப் பயன்படுத்தப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்.

“எந்தவொரு காரியமும் இடையூறின்றிச் சீராக நடைபெற வேண்டும் என்பதன் அடையாளமாகவே, கயிற்றை வெட்டாமல் ஒரே சீராகப் பிணைக்கிறோம்,” என்றார் திரு வயிரவன்.

அரைவட்ட வடிவ மரச் சட்டத்தில் மூங்கில் குச்சிகள் பொருத்தப்படுகின்றன. அந்த அமைப்பை மூட, ‘பன்னாங்கு’ என்று அழைக்கப்படும் வண்ணத் துணி பயன்படுத்தப்படும்.
அரைவட்ட வடிவ மரச் சட்டத்தில் மூங்கில் குச்சிகள் பொருத்தப்படுகின்றன. அந்த அமைப்பை மூட, ‘பன்னாங்கு’ என்று அழைக்கப்படும் வண்ணத் துணி பயன்படுத்தப்படும். - படம்: த.கவி

ஒவ்வோர் ஆண்டும் கோவில் வழங்கும் காவடியைப் பயன்படுத்துவது வழக்கம். அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலிலிருந்து மரச் சட்டங்கள், குச்சிகள், செம்புகளைப் பெற்று, சுத்தம் செய்து, புதுப்பித்து, அலங்காரங்களை மட்டும் ஆண்டுதோறும் புதிதாகச் செய்து பயன்படுத்துகின்றனர். விழா முடிந்த பிறகு, அவை மீண்டும் கோவிலில் ஒப்படைக்கப்படுகின்றன.

தயார் செய்யப்பட்ட செட்டிக் காவடிகள், அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
தயார் செய்யப்பட்ட செட்டிக் காவடிகள், அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. - படம்: த.கவி

தை மாதப் புனர்பூச நாளன்று காலையில் காவடிகள் லாரி மூலம் கியோங் சைக் சாலையில் உள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவிலுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு மாலையில் தொடங்கும் இந்த ஊர்வலம், சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்குச் சென்று, இறுதியில் தெண்டாயுதபாணி கோவிலை மீண்டும் வந்தடைகிறது.

இவ்வாண்டு மொத்தம் 179 செட்டிக் காவடிகள் எடுக்கப்படுகின்றன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி ரதம் வருவதற்கு முன்னரே காவடிகள் கோவிலைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் சன்னதியில் காவடி ஆட்டம் ஆடி, வழிபாட்டை நிறைவேற்ற முடியும் என்றார் திரு வயிரவன்.

கடந்த 40 ஆண்டுகளில் சிங்கப்பூரின் நிலப்பரப்பு, கட்டடங்கள், கோவில் அமைப்புகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், காவடி எடுக்கும் முறையும் அதன் பாரம்பரியமும் மாறவில்லை என்றார் அவர்.

“கோவிலுக்கு வரும்போது கிடைக்கும் மனநிறைவும், நேர்மறையான உணர்வும் நம் வாழ்க்கையை மேம்படுத்தும். இது வெறும் சடங்கன்று. நம் முன்னோர்களுடனான ஒரு தொடர்ச்சி,” என்று இளைய தலைமுறையினரிடம் அவர் கூற விரும்புகிறார்.

காவடியை அமைத்த பிறகு, அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் திரு வயிரவன் வழிபடுகிறார்.
காவடியை அமைத்த பிறகு, அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் திரு வயிரவன் வழிபடுகிறார். - படம்: த.கவி

திரு வயிரவனின் தந்தையான 84 வயது ஓய்வுபெற்ற மருத்துவர் ச. வயிரவனுக்கு, இப்பாரம்பரியம் 1950களில் தொடங்கியது. 1941ல் இந்தியாவில் பிறந்து, தமது தாத்தாவால் சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்ட அவர், மார்க்கெட் ஸ்திரீட்டில் இருந்த செட்டியார் கிட்டங்கியில் வாழ்ந்தபோது, தமது ஒன்பதாவது வயதில் முதல் காவடியை எடுத்தார்.

அக்காலத்தில் வெள்ளி ரதத்தைக் காளைகள் இழுத்து வந்ததையும், வீதிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் தடுப்பு வேலிகள் இல்லாமல் இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

“செட்டிக் காவடி என்பது எங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம். இது நேர்த்திக்கடனோ கோரிக்கையோ அன்று. இறைவனுக்கு நன்றி செலுத்தும் ஒரு கடமை,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்