ஹாங்காங்: ஈரானுடன் வலுவான உறவை வளர்த்துக்கொள்ள சீனா தயாராக இருப்பதாக மத்திய கிழக்கிற்கான சீனாவின் சிறப்புத் தூதர் சாய் ஜுன் தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் துணைச் செயலாளர் அலி பாகேரி கானியுடன் நடத்திய பேச்சின்போது அவர் இதனைக் கூறினார். திரு கானியைத் தூதர் சாய் ஜுன் ஈரானில் சந்தித்துப் பேசியதாக சீன வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை (நவம்பர் 9) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளைச் சீனா தீவிரப்படுத்தி வரும் நிலையில், திரு சாய் ஈரான், ஓமான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இம்மாதம் பயணம் மேற்கொள்கிறார்.
பகுத்தறிவுடனும் நடைமுறை நோக்கத்துடனும் அரசியல் தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வட்டாரத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் வளர்ச்சியையும் விரைவில் மீட்டெடுக்க உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கு மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் மீண்டும் ஆயுதங்களை ஏந்துவதைத் தவிர்த்து, அரசியல் தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஈரான், சவூதி தேசியப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய தனித்தனிச் சந்திப்புகளில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, மத்திய கிழக்கு மோதலின் பக்கவிளைவுகளைச் சமாளிக்க ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து பணியாற்றச் சீனா தயாராக இருப்பதாக அதிபர் ஸி ஜின்பிங்கும் தெரிவித்திருந்தார்.
