பெண்கள் தங்கள் உடற்பயிற்சியை முடித்துவிட்டுச் சில அடிகள் நடந்து சென்று சுவையான ‘மாச்சா லாட்டே’ பானத்தை புளோக் 122 வாட்டர்லூ ஸ்திரீட்டில் பருகலாம்.
அங்கு அடுத்தடுத்து அமைந்துள்ள சிறப்பு காப்பிக் கடைக்கும் பெண்களுக்கான தனித்துவ உடற்பயிற்சிக் கூடத்துக்கும் முதல் பார்வையில் தொடர்பில்லாததுபோல் தோன்றலாம். நடுவே உள்ள தடுப்புச் சுவரால் அவை பிரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்கு இடையே பெரும்பிணைப்பு உண்டு.
பெங்களூரில் பிறந்து சிறுவயது முதலே சிங்கப்பூரில் வளர்ந்த 25 வயது உமே உஸ்மா முய்ஸ், 30 வயது ஷிரீன் தாஜ் எனும் இரு சகோதரிகள் அவற்றை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இவர்கள் குடியிருப்புப் பகுதியின் ஒரு மூலையைக் காப்பி, உடற்பயிற்சி, சமூகம் சார்ந்த ஒரு குடும்பத் தொழிலாக மாற்றியுள்ளனர்.
நன்றாகப் படித்து, நிலையான அலுவலக வேலையில் சேர வேண்டும் என்ற குடும்ப எதிர்பார்ப்புகளுக்கிடையே இவர்கள் வளர்ந்தனர்.
இருப்பினும், தங்களின் சொந்தத் தொழிலைத் தொடங்க இருவரும் அலுவலக வாழ்க்கையிலிருந்து விலகினர். இன்று, அவர்கள் ‘ஸ்ட்ராங்கேர்ளிஸ் ஜிம்’ (StronGirlys Gym), ‘வாட்டர்லூ காப்பி’ (Waterloo Coffee) ஆகியவற்றை அருகருகே சொந்தமாக நடத்தி வருகின்றனர்.
வீட்டுச் சன்னலிலிருந்து காப்பிக்கடை வரை
உஸ்மாவுக்குத் தொழில்முனைவராகும் வாய்ப்பு எதிர்பார்த்ததைவிட விரைவாகவே கிடைத்தது.
எம்டிஐஎஸ் கல்வி நிலையத்தில் பட்டம் பெற்ற அவர், 2025ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒரு நிறுவனத்தில் மாநாட்டுத் தயாரிப்பாளராகப் (conference producer) பணியில் சேர்ந்தார். அந்த அனுபவம் ஒரு மாதம் மட்டுமே நீடித்தது. பெருநிறுவன வேலை தமக்கு ஒத்துவராது என்று முடிவெடுத்த உஸ்மா, அங்கிருந்து வெளியேற முடிவுசெய்தார்.
16 வயதிலிருந்தே பகுதிநேர ‘பரிஸ்டா’வாக (barista) வேலை செய்ததால் காப்பித் தயாரிப்புமீது அவருக்குத் தீராத ஆர்வம் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
2025 ஏப்ரலில் அந்த ஆர்வத்தை ஒரு குடும்ப வணிகமாக மாற்றி, வாட்டர்லூ நிலையத்தில் அமைந்திருந்த தமது 11வது மாடி வீட்டின் சன்னல்வழியாக நாள்தோறும் பானங்களை விற்பனை செய்யத் தொடங்கினார்.
விரைவிலேயே அந்தத் தொழில் பலரின் வரவேற்பைப் பெற்றது. காற்றுப்புகாத கலன்களில் அடைக்கப்பட்ட மேம்பட்ட தரத்திலான காப்பி, மாச்சா பானங்கள், செயற்கைச் சாறுகளுக்குப் பதிலாக உண்மையான பழக்கூழ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பானங்கள் என வாட்டர்லூ காப்பி தனித்து நின்றது.
அதுமட்டுமல்லாமல், உஸ்மாவின் தாயார் வீட்டில் இனிப்புகளைத் தயாரித்து, கடைக்கு வழங்கினார். தொடக்கத்தில் பானங்களுடன் இலவசமாக வழங்கப்பட்ட சிறிய ‘பிரௌனி’ (brownie) துண்டுகள், வாடிக்கையாளர்களின் பேராதரவால் விரைவில் கடையின் உணவுப்பட்டியலில் தனி இடத்தைப் பிடித்தன.
தொழில் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, புளோக்கின் தரைத்தளக் கடை காலியானதையடுத்து அவர் அந்தக் கடைக்கான குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதன்மூலம் வாட்டர்லூ காப்பி முழுமையான கடையாக வளர்ச்சியடைந்தது. முன்பு வாடிக்கையாளர்கள் உஸ்மாவின் வீட்டுக்கு வெளியே வரிசையில் நின்ற இடத்திலிருந்து சற்று தொலைவிலேயே அமைந்துள்ள இந்தக் கடை, வாடிக்கையாளர்கள் அமர்ந்து பானங்களைப் பருகும் வசதிக்காக இவ்வாண்டு ஜனவரியில் பக்கத்துக் கடையையும் இணைத்து விரிவுபடுத்தப்பட்டது.
27 வயது அலுவலகப் பணியாளரான ரேஷ்மா குமரவேலு, தமது நண்பகல் உணவு இடைவேளையின்போது ‘மாச்சா’ பானம் அருந்துவதற்காக வாட்டர்லூ காப்பிக்குச் செல்வதை மிகவும் விரும்புவதாகக் கூறினார்.
“வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அவர்கள் எப்போதுமே புதிய சுவைகளை பட்டியலில் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள்,” என்ற அவர், புதிய சுவைகளை எப்போதும் ஆவலோடு எதிர்நோக்குவதாக கூறினார்.
பெண்களுக்கான தனித்துவ உடற்பயிற்சிக்கூடம்
பக்கத்துக் கடையான ‘ஸ்ட்ராங்கேர்ளிஸ்’ உடற்பயிற்சி கூடம், முற்றிலும் மாறுபட்ட ஒரு தனிப்பட்ட அனுபவத்திலிருந்து உருவானது.
உயிர்மருத்துவ வேதியியலில் பட்டம் பெற்ற ஷிரீன், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கணக்கு மேலாளராக நாலரை ஆண்டுகள் பணியாற்றினார். சொந்தத் தொழில் தொடங்கும் எண்ணம் தமக்கு இருந்ததே இல்லை என்றார் அவர்.
ஆனால், உடலை வலுவாக்கும் பயிற்சிகள் (strength training) அவரது வாழ்க்கைப் பாதையை மெல்ல மெல்ல மாற்றின.
குழந்தைப் பருவத்தில் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஷிரீன் பெரிதும் சிரமப்பட்டார். பல்கலைக்கழகக் காலத்தில் அவர் உடல்வலுப் பயிற்சிகளைப் பழகியபோது, அது அவரது உடல்நலத்தை மேம்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையையும் வளர்த்தது.
இருந்தபோதிலும், பொதுவான உடற்பயிற்சிக்கூடங்களில் பயிற்சி பெறுவது அவருக்குச் சவாலாக இருந்தது.
“மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காமல் என்னால் புதிய பயிற்சிகளை முயன்றுபார்க்க முடியவில்லை. யாராவது எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பார்கள் அல்லது தேவையில்லாத ஆலோசனைகளை வழங்குவார்கள்,” என்று ஷிரீன் நினைவுகூர்ந்தார்.
அதிக தனிமையையும் தனியுரிமையையும் விரும்பும் பெண்களுக்கு, குறிப்பாக ‘ஹிஜாப்’ எனப்படும் தலையங்கியை அணியும் முஸ்லிம் பெண்களுக்கு, இந்த அனுபவம் பெருந்தடையாக இருந்ததாய் அவர் உணர்ந்தார்.
இந்தக் குறைகளைப் போக்கும் வகையில் ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்க வேண்டும் எனக் கனவுகண்ட அவர், தமது அலுவலக பணியைத் தொடர்ந்துகொண்டே 2019ல் பகுதிநேரப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றத் தொடங்கினார். வரவேற்பு அதிகரிக்கவே, முழுநேரமாக உடற்பயிற்சித் துறையில் கவனம் செலுத்துவதற்காக 2024ல் ‘கார்ப்பரேட்’ உலகிலிருந்து ஷிரீன் விடைபெற்றார்.
சொந்தமாக உடற்பயிற்சிக் கூடம் தொடங்கும் வாய்ப்பு எதிர்பாராத விதமாக அவரை வந்தடைந்தது. வாட்டர்லூ காப்பிக்குப் பக்கத்தில் இருந்த கடை காலியாக இருப்பதை அறிந்த ஷிரீன், அதைத் தமது கனவை நனவாக்கும் வாய்ப்பாகக் கருதி அந்த இடத்தைக் குத்தகைக்கு எடுத்தார்.
2026 ஏப்ரலில் திறக்கப்பட்ட ‘ஸ்ட்ராங்கேர்ளிஸ்’, பெண்களுக்கான 24 மணி நேர ‘ஜிம்பாட்’ (gympod) ஆகச் செயல்படுகிறது. உறுப்பினர்கள் தரமான கருவிகள், வசதியுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தனியார் இடத்தில் பாதுகாப்பாகப் பயிற்சி பெறலாம்.
நீண்ட கால ஒப்பந்தங்கள் இல்லாமல், பெண் தனிப்பட்ட பயிற்சியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இங்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கவும் இந்த வசதி அனுமதிக்கிறது. ஒட்டுமொத்தத்தில், இது முழுக்க முழுக்கப் பெண்களால் நிர்வகிக்கப்படும், பெண்களுக்கான தனித்துவ உடற்பயிற்சிக்கூடம் என ஷிரீன் பெருமிதத்துடன் கூறினார்.
டிக்டாக் சமூக ஊடகத்தின் வாயிலாக இந்த வசதியைப் பற்றி அறிந்துகொண்ட 21 வயது மைதிலி பாரதிதாசன், பெண்களின் உடல்நலம், மனநலம் ஆகிய இரண்டு முக்கியத் தேவைகளையும் கருத்தில்கொண்டு, மிகுந்த கவனத்துடன் இந்த இடம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அத்துடன், உடற்பயிற்சியைப் புதிதாகத் தொடங்குபவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, ‘ஸ்ட்ராங்கேர்ளிஸ்’ சமூக ஊடகப் பக்கங்களில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளும் வழிகாட்டிக் காணொளிகளும் நிறைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
குடும்ப ஆதரவும் கூட்டு வணிகமும்
சகோதரிகள் தங்கள் தொழில்களைத் தனித்தனியாகத் தொடங்கினாலும், அருகருகே அமைந்த கடைகள் காலப்போக்கில் சில விதங்களில் இணைந்து செயல்படத் தொடங்கின.
வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இவ்விரு இடங்களுக்கும் வந்து செல்கின்றனர். உடற்பயிற்சியை முடித்தபின் காப்பி குடிப்பது அல்லது ஒரு கடையின்மூலம் மற்றொன்றை அறிந்துகொள்வது என இது தொடர்கிறது.
இந்த அமைப்பு அவர்களது சகோதரப் பாசத்தையும் வலுப்படுத்தியுள்ளது. தொழிலை நடத்துவது சில நேரங்களில் தனிமையான பயணமாக இருக்கலாம். ஆனால், சகோதரிகள் ஒருவருக்கொருவர் உற்ற துணையாக இருந்து, புதிய யோசனைகளைப் பரிமாறிக்கொண்டு, பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
தொழில் வெற்றிகளுக்குப் பின்னால், இரு சகோதரிகளுக்கும் இடையிலான ஆழமான அன்பும் மதிப்பும் இருக்கின்றன. தமது வழிகாட்டியாகத் திகழும் அக்கா ஷிரீனை உஸ்மா முன்மாதிரியாகக் கருதுகிறார். மறுபுறம், வீட்டிலிருந்து தொடங்கிய தொழிலை குறுகிய காலத்தில் வெற்றிகரமான கடையாக வளர்த்த தங்கைமீது ஷிரீனுக்குப் பெருமை.
அடுத்த கட்டமாக, வாட்டர்லூ காப்பியை சிங்கப்பூரின் பிற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் விரிவுபடுத்த உஸ்மா திட்டமிட்டுள்ளார். பெண்களுக்கான உடல்திறன் மீட்பு வசதிகளுடன் ‘ஸ்ட்ராங்கேர்ளிஸ்’ உடற்பயிற்சிக்கூடத்தை மேலும் விரிவாக்க ஷிரீன் விரும்புகிறார்.
இருப்பினும், தற்போது இருவரின் கவனமும் வாட்டர்லூ ஸ்திரீட்டிலுள்ள தங்களது தொழில்களை மேலும் வலுப்படுத்துவதிலேயே உள்ளது. தொழில்முனைவோர் வாழ்க்கையில் சவால்கள் இருந்தாலும், தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையைத் தொடர்வதில் இருவரும் உறுதியாக உள்ளனர்.

