சமையலறை முதல் சமுத்திரத்தில் அலையோடும் கப்பல் வரை தமது கைவண்ணத்தால் இடம் எதுவாக இருந்தாலும் மணக்க மணக்கச் சமைத்து மக்களின் மனத்தை வென்று வருகிறார் சமையற்கலைஞர் டாக்டர் திரு குமரேசன் கோகுலநாதன், 38.
“ஆண்கள் சமையலறைக்குச் செல்லலாமா? வேலை பார்க்க உனக்கு வேறு துறையே இல்லையா?” என்று தம்மிடம் கேள்விக் கணைகள் தொடுத்தவர் மத்தியில் இன்று உலக கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரராக மிளிர்ந்து கொண்டிருக்கும் திரு குமரேசன், அவரது பணியின் தொடக்கக் காலத்தை நினைவுகூர்ந்தார்.
கோழிக்குள் முட்டை
“பல ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கிறேன். சமைக்கவா செல்கிறாய்? இதுதான் என்னிடம் சமூகம், சுற்றம் வைத்த முதல் கேள்வி. ஆனால் பதின்ம வயதிலேயே உணவுத் துறையில் தான் பணிபுரியவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.
மற்ற துறைகளில் பணிபுரிவோருக்குக் கணினி, கோப்புகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பற்பல தொழிற்கருவிகள் இருக்கும். ஆனால், சமையற்கூடத்தில் புழங்கும் சாதனங்கள் என்னவென்று சொல்ல வேண்டியதில்லை என்றார் திரு குமரேசன்.
“உடையில்லை என்றாலும் இலை தழைகளால் மாற்று உடைகளை வடிவமைக்க இயலும். இருப்பிடத்திற்கு மாற்று உண்டு. ஆனால் உணவருந்தாமல் வாழ இயலுமா? சோறுதானே முக்கியம்,” என்றார்.
“விளையாட்டாகப் பதின்ம வயதில் சமைக்கத் தொடங்கினேன். குறிப்பாக, கல்லூரியின் தொடக்க நாள்களில் நான் முதன்முதலாக சமைத்த ‘கோழிக்குள் முட்டை’, பச்சை மிளகாய் அல்வா’ ஆகிய உணவு வகைகளை இன்றும் மறக்க இயலாது,” என்று விவரித்தார்.
இயல்பாகத் துவங்கிய இந்தச் சமையல் பயணம், இவரை 19 வயதிலேயே முதல் உலக சாதனை புரிய வைத்தது. அந்த வயதில் 20 மணிநேரத்தில் 1012 ஐஸ்கிரீம் வகைகளைச் செய்துமுடித்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்தார் திரு குமரேசன்.
“நம் சமூகத்தின் உணவுப் பதார்த்தங்களைக் கவனத்துடன் ஒன்றிணைத்து அமெரிக்கா, மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகள் என அனைத்துலக அரங்கில் கொண்டுசெல்வதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு.
தொடர்புடைய செய்திகள்
“உணவே மருந்து, மருந்தே உணவு! என்றுரைக்கும் வழமை நம்முடையது. எனவே, நமது மரக்கறி வகைகளை அந்நாட்டினரும் சுவைக்கும் வகையில் சமைத்துத் தருவது என்னுடைய பிரதான இலக்கு,” என்றார் திரு குமரேசன்.
சமுத்திரத்தின் சீற்றத்திலும் குறையாத அறுசுவை விருந்து
பணிநிமித்தமாக பல்வேறு நாடுகளில் பயணம் செய்திருந்தபோதும் கப்பலில் சமையல் வல்லுநராகப் பணியாற்றியது சற்று சவால்மிக்கது என்றார் திரு குமரேசன்.
“கடலில் பணிபுரிவது பிடிக்கும் என்றாலும் அங்கு அலைகளின் சீற்றம் கடுமையாக இருந்தால் கப்பல் ஆடிக்கொண்டே இருக்கும். அதனால் நாம் எண்ணெய் ஊற்றும்போதும் சமைக்கும்போதும் அசைந்து கொண்டே இருப்போம். எனவே கூடுதல் கவனத்துடன் சமைக்க வேண்டும். அதற்கான பயிற்சியும் எங்களுக்குத் தரப்படும்,” என்றார் அவர்.
நடனமாடிக் கொண்டே சமைப்பது போன்ற உணர்வை அந்த நகரும் சமையற்கூடம் தந்திடும். என்றாலும் இப்பணியை நேசிப்பதால் அசைவாடிக்கொண்டே அறுசுவை விருந்தைப் பரிமாறுவதும் சுகமான சுமையே என்றார் திரு குமரேசன்.
கண்களைக் கட்டிக்கொண்டு சமையல்
சைவக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர் என்றாலும் அசைவ உணவு வகைகளும் இந்தச் சமையல் வல்லுநரின் கரத்திற்கு கட்டுப்பட்டுக் கிடக்கின்றன.
“அசைவ உணவைச் சமைப்பேன். ஆனால் ருசிக்க மாட்டேன்,” என்ற திரு குமரேசன், கண்ணைக்கட்டிச் சமைப்பதிலும் வல்லவர். காய்கறிகளை நறுக்குவது தொடங்கி அதனை அடுப்பில் ஏற்றிச் சமைத்துப் பரிமாறும் வரையில் பார்க்காமலேயே சமைத்து அதிலும் அனைத்துலக சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் இந்தத் திறனாளர்.
செம்பருத்திக்காக எதுவும் செய்வேன்
வாழ்நாள் முழுதும் மூன்றே மூன்று உணவுப் பொருள்கள் அல்லது உணவு வகைகளைத் தெரிவு செய்ய வேண்டும் என்றால் முடியுமா என்ற தமிழ் முரசின் கேள்விக்குப் பதிலளித்த திரு குமரேசன், “செம்பருத்திக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்,” என்று கூறிப் புன்னகைத்தார்.
“செம்பருத்திப் பூ மிகவும் பிடிக்கும். அதைவைத்து அநேக உணவு பானங்களைத் தயாரிக்க முடியும். அடுத்து என் மனதுக்குப் பிடித்த உணவுப் பொருள் என்றால் அது ஐஸ்கிரீம். மூன்றாவதாக ரசம்,” என்று விளக்கினார் திரு குமரேசன்.
என் தலைவருக்குப் பிடித்த தலைவர்
சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் அமரர் லீ குவான் யூவிற்குத் தம் கையால் சமைத்துத்தர ஆசைப்பட்டதுண்டு என்று விவரித்தார் திரு குமரேசன்.
“என் தலைவருக்குப் பிடித்த தலைவர் திரு லீ. காலஞ்சென்ற அவருக்கு என் கையால் சமைத்துப்போட முடியாமல் போய்விட்டது என்றாலும் என் தலைவர் ரஜினிகாந்த்திற்குப் பிடித்தமான தலைவர் திரு லீ. அதனால் ரஜினிகாந்த் சிங்கப்பூர் வந்தால் அவருக்குச் சமைத்துத் தர விழைகிறேன்,” என்று சொன்ன திரு குமரேசன் சமையல் தவிர பல்வேறு கலைகளிலும் தேர்ந்தவர்.
தற்போது சிங்கப்பூர் அப்போலோ புட் வில்லேஜ் உணவகத்தில் பணியாற்றி வரும் இவரது கைவண்ணத்தில் காய்கனிகள், பென்சில், இலைகள் என ஒவ்வொரு பொருளும் கலைச்சிற்பங்களாக மறுபிறப்பு எடுக்கின்றன.
“சமைப்பது தவிர வண்ணம் தீட்டுவது, வரைதல் ஆகியவற்றிலும் ஆர்வம் உண்டு. ஆனால், அந்தத் திறனையும் நான் ஈடுபட்டுவரும் சமையல் கலைக்காகவே அர்ப்பணிக்க நினைத்தேன்.
“காய்கனி, இலைகள், காகிதம் என எதிலும் ஓவியம் தீட்ட முடியும். குறிப்பாக, சிறப்பு விழாக்களின்போது தங்களுக்குப் பிடித்தமானவர்களின் முகத்தைச் செதுக்கி தரக் கேட்பார்கள். குறைந்தது 30 நிமிடங்களில் எந்தவொரு முகத்தையும் நுட்பமாக வரைந்திட முடியும். உணவு வகைகளிலும் உங்கள் அடையாளத்தைப் பதிவு செய்யமுடியும். இதனால் விருந்துபசரிப்புகளில் விருந்தினர்களின் முகத்தில் தனியொரு மகிழ்ச்சியைப் பார்க்க இயல்வது இப்பணியில் கூடுதல் நிறைவை எனக்குத் தருகிறது,” என்றார்.
திணைக்குத் துணை நின்ற நளன்
பலமணி நேரமாக அனலில் நிற்கவேண்டும், ஒவ்வொருநாளும் பணியின் முதல் நாள் போலவே பார்த்துப்பார்த்துச் செயல்பட வேண்டும். சமைக்கும் ஒவ்வொரு உணவிலும் தரமும் ருசியும் குறையக்கூடாது எனப் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும் இந்தத் துறையில் தாம் நீடித்திருப்பதற்குக் காரணம் உணவால் மனங்களைத் திருப்தியடையச் செய்யும் உன்னதம்தான் என்றார் திரு குமரேசன்.
‘திணைக்குத் துணை நின்ற நவீன நளன்‘எனும் சிறப்புப் பட்டத்துக்குச் சொந்தக்காரரான திரு குமரேசன், பொதுஜனம் முதல் பிரபலங்கள் வரை பார்த்துப் பார்த்து சமைத்துக்கொடுத்தாலும், தமக்கு பிடித்தமான உணவு என்ன என்ற ரகசியத்தையும் வெளியிட்டார்.
“சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? என்று சொல்வது போல எந்த உணவைச் சாப்பிட்டாலும், அம்மா செய்யும் ரசம் சாதத்துக்கும் இட்லிக்கும் ஈடு இணை உண்டா?,” என்று கூறி பேட்டியை நிறைவு செய்தார் அவர்.