துப்பரவுப் பணியாளரான தாயின் கனவை நனவாக்கிய பாசமிகு மகள்கள்

துப்பரவுப் பணியாளரான தாயின் கனவை நனவாக்கிய பாசமிகு மகள்கள்

4 mins read
c8d50289-5050-4b6e-8173-2ba6845a5e1d
தம் மகள்கள் (இடமிருந்து): ஹேமா, சந்தியா, பிரியதர்ஷினி, பாரதி ஆகியோருடன் திருவாட்டி கவிதா (நடுவில்). - படம் : ஹேமா
Google News Preferred Icon

பெற்றோரின் நிறைவேறாத கனவுகளை வாழ்வின் லட்சியமாக மாற்றிக்கொள்ளும் பிள்ளைகள் கிடைப்பது ஒரு வரம்.

மலேசியாவின் சிரம்பானைச் சேர்ந்த திருவாட்டி கவிதா, 50, அத்தகைய வரம் கிடைக்கப்பெற்ற தாய். ஒன்றல்ல இரண்டல்ல, நான்கு வரங்கள்.

திருவாட்டி கவிதா தனது 50ஆவது பிறந்தநாளில் கணவர் திரு லட்சுமணனுடன். 
திருவாட்டி கவிதா தனது 50ஆவது பிறந்தநாளில் கணவர் திரு லட்சுமணனுடன்.  - படம்: ஹேமா

பிள்ளைகள் பிறரை எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்றால், அதற்கு முன்மாதிரியாகத் தானும் யாருடைய தயவுமின்றி உழைக்க வேண்டும் என்பதில் திருவாட்டி கவிதா தெளிவாக இருந்தார். ஏறத்தாழ 30 ஆண்டுகளாக அவர் துப்புரவுப் பணியாளராக இருந்து வருகிறார்.

அவரின் கணவர் திரு லட்சுமணன் வாகனங்களுக்கு வண்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இருவரின் அயராத உழைப்பால், இன்று அவர்களின் நான்கு மகள்களும் பட்டதாரிகளாக வாழ்வில் உயர்ந்து நிற்கின்றனர்.

“நாங்கள் உடன்பிறந்தவர்கள் 11 பேர் என்றாலும் எனக்குத்தான் படிப்பின்மீது பெருநாட்டம் இருந்தது. என்னை ஒரு தாதியாக்க வேண்டுமென என் தந்தையார் பெரிதும் விரும்பினார். ஆனால், குடும்பச் சூழல் காரணமாக என்னால் படிப்பைத் தொடர முடியாமல் போனது,” என்றார் திருவாட்டி கவிதா.

படித்துப் பட்டம் பெறவேண்டும் என்ற இந்தத் தாயின் நிறைவேறாத அந்தக் கனவை நான்கு மகள்களும் இன்று நனவாக்கியுள்ளனர். 

மூத்த மகள் பாரதி, 34, தாய் ஆசைப்பட்டதைப் போன்றே தாதியாக இருக்கிறார். சிங்கப்பூரின் டான் டோக் செங் மருத்துவமனையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அவர், தற்போது மலேசியாவில் தாதியாகச் சேவையாற்றுகிறார்.

பாரதி, முதலில் விமானச் சிப்பந்தியாகவே விரும்பினார். ஆனால் இறுதியில் தாதியானார். தாயின் விருப்பத்தை மூத்த மகள் பூர்த்தி செய்ய, அக்காவின் ஆசையை இரண்டாவது மகள் ஹேமா, 32, சிங்கப்பூர் ஏர்லைன்சில் சிப்பந்தியாகி நிறைவேற்றினார்.

“நாங்கள் வசதியான சூழலில் வளரவில்லை. அம்மா ஒரு சோளக்கருதைக்கூட ஐந்தாக வெட்டித்தான் கொடுப்பார். ஆனால், படிப்பிற்காக எதைக் கேட்டாலும் உடனே வாங்கித் தருவார்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் ஹேமா.

தாயின் தியாகத்தையும் அவர் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடத்தையும் நினைவுகூர்ந்தார் மூன்றாவது மகள் சந்தியா, 29. 

“நாளைக்கு என்று ஒரு நாள் இருக்கிறது; அதனால் இன்றே எல்லாவற்றையும் முடித்துவிடாமல் நாளைக்கும் சேர்த்துவைக்க வேண்டும் என்பதை அம்மா எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர் அன்று சிக்கனமாக இருந்ததால்தான் இன்று எங்களால் உயர்ந்த நிலையை அடைய முடிந்திருக்கிறது,” என்றார் சந்தியா.

தொழில்முறைச் சீருடையில் மகள்கள் (வலமிருந்து) பாரதி (தாதி), ஹேமா (விமானச் சிப்பந்தி), சந்தியா (ஆசிரியை), பிரியதர்ஷினி (விமானி) ஆகியோருடன் திருவாட்டி கவிதா (நடுவில்).
தொழில்முறைச் சீருடையில் மகள்கள் (வலமிருந்து) பாரதி (தாதி), ஹேமா (விமானச் சிப்பந்தி), சந்தியா (ஆசிரியை), பிரியதர்ஷினி (விமானி) ஆகியோருடன் திருவாட்டி கவிதா (நடுவில்). - படம்: பாரதி

இதயம் தொட்ட காணொளி

கடந்த மாதம் (ஜூலை 5) திருவாட்டி கவிதாவின் 50ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, அன்புத் தாய்க்கு மறக்க முடியாத ஆச்சரியத்தைக் கொடுத்தனர் அவரின் ஆசை மகள்கள்.

கடைசி மகள் பிரியதர்ஷினியைச் சீருடையில் பார்க்க வேண்டும் என்பது திருவாட்டி கவிதாவின் நீண்ட நாள் விருப்பம். அதனால், நான்கு மகள்களும் தத்தம் தொழில்முறைச் சீருடைகளை அணிந்துகொண்டு தாயின் வேலையிடத்திற்கு நேரடியாகச் சென்றனர். தமது பிள்ளைகளை அந்த உடைகளில் ஒரே நேரத்தில் கண்ட திருவாட்டி கவிதாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

அந்த நெகிழ்ச்சியான தருணத்தை அவர் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.

“உணவு, தூக்கம், சொந்த விருப்பம் என அனைத்தையும் தியாகம் செய்து பிள்ளைகளுக்காக வாழத் தொடங்கினேன். என் பிறந்தநாளுக்குத் தங்கத்தையே கொண்டுவந்து என் கையில் கொடுத்திருந்தாலும் இந்த மகிழ்ச்சிக்கு ஈடாகியிருக்காது,” என்று பெருமிதத்தோடு கூறினார் திருவாட்டி கவிதா.

அக்காணொளி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் ஆகஸ்ட் 19ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில், பிள்ளைகளின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் திருமதி கவிதாவின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் பாராட்டிப் பதிவிட்டிருந்தார்.

கவிதாவின் உழைப்பைப் பாராட்டி மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு.
கவிதாவின் உழைப்பைப் பாராட்டி மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு. - படம் : பிரதமர் அன்வார் இப்ராஹிம்/ஃபேஸ்புக்

இருப்பினும், பிள்ளைகள் நல்ல நிலையில் இருந்தும் தாய் ஏன் இன்னும் சிரமப்பட்டு உழைக்கிறார் எனச் சிலர் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த திருவாட்டி கவிதா, “என் பிள்ளைகள் என்னை நாட்டிற்கே அரசியாக்கினாலும் என் சொந்த உழைப்பிலேயே நான் வாழ விரும்புகிறேன்,” என்றார்.

விமானிப் பயிற்சியின் இறுதி ஆண்டில் பயிலும் பிரியதர்ஷினி, தாய் கவிதாவுடன் சீருடையில் படம் எடுத்துக்கொண்ட தருணம்.
விமானிப் பயிற்சியின் இறுதி ஆண்டில் பயிலும் பிரியதர்ஷினி, தாய் கவிதாவுடன் சீருடையில் படம் எடுத்துக்கொண்ட தருணம். - படம்: பாரதி 

தாயின் அடுத்த கனவு

தாய் 60 வயதுவரை உழைக்க நினைத்தாலும் தான் விமானியாக வேலைக்குச் சேர்ந்ததும் அம்மாவை ஓய்வெடுக்க வைப்பதில் கடைசி மகள் பிரியதர்ஷினி, 21, உறுதியாக உள்ளார்.

திருவாட்டி கவிதாவின் அடுத்த கனவு, மகள் பிரியதர்ஷினி செலுத்தும் விமானத்தில் ஒருமுறையாவது பயணம் செய்ய வேண்டும் என்பதுதான்.

திருவாட்டி கவிதாவிற்குப் பிள்ளைகளே உலகமாகவும் சிறந்த தோழிகளாகவும் திகழ்கின்றனர். 

“நான் நண்பர்களுடன் வெளியில் சென்றதில்லை. 16 வயதில் என் மூத்த மகள் பாரதியும் 18 வயதில் இரண்டாவது மகள் ஹேமாவும் பிறந்தார்கள். என் இளமைக் காலம் முழுதும் அவர்களோடுதான் கழிந்தது. என் பிள்ளைகள்தான் எனக்குச் சிறந்த நண்பர்கள்!” என்று அவர் பூரிப்போடு கூறுகிறார்.

மகன் யுமல் ராஜ் (இடக்கோடி), கணவர் திரு லெட்சுமணன் (இடமிருந்து இரண்டாவது), மகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகளுடன் திருவாட்டி கவிதா (இடமிருந்து நாலாவது).
மகன் யுமல் ராஜ் (இடக்கோடி), கணவர் திரு லெட்சுமணன் (இடமிருந்து இரண்டாவது), மகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகளுடன் திருவாட்டி கவிதா (இடமிருந்து நாலாவது). - படம்: பாரதி 

வாழ்க்கையின் அழகு

ஒரு தாயின் உழைப்பு வீண்போவதில்லை என்பதற்கும் வறுமை என்பது லட்சியத்திற்கு என்றுமே தடையன்று என்பதற்கும் திருவாட்டி கவிதாவின் குடும்பம் சிறந்த எடுத்துக்காட்டு. 

வியர்வை சிந்திய தாயின் கனவுப்பறவைக்குச் சிறகுகள் முளைக்கச் செய்து தொடுவானில் அதனைப் பறக்கவிட்டுள்ளது பாச மகள்களின் நேசம். அந்த அன்புதான் அவர்கள் வாழ்க்கையின் அழகு. அதுவே ஆணிவேர்!

குறிப்புச் சொற்கள்