மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் (பிசிஎஃப்), இயூ டீ வட்டாரத்தின் ‘ஸ்பார்க்கல் கேர்’ மூத்த பராமரிப்பு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) பிற்பகல் கோலாகலமாக தீபாவளியைக் கொண்டாடியது.
‘பிசிஎஃப்’ பாலர் பள்ளி மாணவர்கள் ஆடிப்பாடி, மூத்த குடியிருப்பாளர்களை மகிழ்வித்தனர். இரு தலைமுறையினரும் ஒன்றிணைந்து வண்ண அரிசியில் ரங்கோலிக் கோலங்களிட்டு, தீபாவளிக் குதூகலத்தில் திளைத்தனர்.
2017ஆம் ஆண்டு இயூ டீ வட்டாரத்தில் தொடங்கப்பட்ட ‘ஸ்பார்க்கல் கேர்’ மூத்தோர் பராமரிப்பு நிலையத்தில் ஒவ்வொரு பண்டிகையின்போது மூத்த குடியிருப்பாளர்களுக்கென கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.
சிங்கப்பூர் முழுவதும் அமைந்துள்ள ‘ஸ்பார்க்கல் கேர்’ மூத்தோர் பராமரிப்பு நிலையங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டின் தீபாவளிக் கொண்டாட்டங்களில் மூத்த குடியிருப்பாளர்கள், பாலர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட ஏறக்குறைய 80 பேர் கலந்து கொண்டனர்.
இருளை அகற்றி ஒளி சேர்க்கும் திருநாளான தீபாவளியை முன்னிட்டு, மூத்தோரின் முகங்களில் புன்னகை மலர்வதும் பண்டிகைக்கு மெருகூட்டுவதாகக் கூறினார் ‘பிசிஎஃப்’ முதியோர் பராமரிப்புப் பிரிவின் மூத்த இயக்குநர் ஆண்டி சீட், 50.
“தீபாவளி போன்ற பண்டிகைகளின் தனித்துவத்தைப் பற்றி மாணவர்கள் மூத்தோரிடம் கற்றுக்கொள்ளலாம். அதே நேரத்தில், மாணவர்களுடன் நேரம் செலவிடுவதால் மூத்தோருக்கு தனிமை உணர்வு ஏற்படாது,” என்றார் திரு ஆண்டி.
‘ஸ்பார்க்கல் கேர்’ மூத்தோர் பராமரிப்பு நிலையத்தில் கடந்த நான்கு மாதங்களாக வந்துசெல்லும் இயூ டீ குடியிருப்பாளர் திரு வேணுகோபாலன் நாயர், 76, கலந்துகொண்ட முதல் தீபாவளிக் கொண்டாட்டம் இது.
“இங்கு வசிக்கும் பல இன நண்பர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு தீபாவளியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது கொண்டாட்டங்களை மேலும் சிறப்பிக்கிறது,” என்றார் திரு வேணுகோபாலன்.
தொடர்புடைய செய்திகள்
கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட திருவாட்டி சான் சோவ் கெங், 86, பாலர் பள்ளி மாணவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இளைய தலைமுறையினருடன் அர்த்தமுள்ள பிணைப்பை உருவாக்கலாம் என்றார்.
“மாணவர்கள் ஆடிப்பாடி மகிழும் காட்சி எனது சொந்த பேரக்குழந்தைகளை நினைவூட்டுகிறது. அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது,” என்று கூறினார்.