தீபாவளியன்றும் ரத்த சுத்திகரிப்புக்குச் சென்றார் திருவாட்டி அமுதவள்ளி, 73.
இதனால் காலை 5 மணிக்கே எழுந்து தீபாவளி விருந்தைச் சமைக்கத் தொடங்கிவிட்டார். இவரின் இரு மகள்களின் குடும்பத்தினர், காலையிலேயே இவர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மாலையில் இவரை தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த இரு தீபாவளிகளிலும் திருவாட்டி அமுதவள்ளி முறுக்கு பிழிந்து நிலையத்தில் உள்ளவர்களுக்கும் தந்து மகிழ்ந்தார்.
ஒவ்வொரு தடவையும் நான்கு மணிநேரம் என வாரத்துக்கு மும்முறை இவர் ரத்தச் சுத்திகரிப்பு செய்துகொள்கிறார்.
தம் இரண்டாம் மகளைப் பெற்றெடுத்தபோது திருவாட்டி அமுதவள்ளிக்கு ஏற்பட்ட நீரிழிவு, அதன் பிறகு குணமாகவே இல்லை.
சிறுநீரகங்கள் படிப்படியாகச் செயலிழந்து கை, கால்களில் வலி ஏற்பட்டு, நடக்க முடியாமல் ஈராண்டுகளுக்கு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ரத்தச் சுத்திகரிப்பு செய்துகொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் எச்சரித்தபோதும் இதைச் செய்துகொள்ள திருவாட்டி அமுதவள்ளிக்கு விருப்பமில்லை. தன் உயிரை முடித்துக்கொள்வோமா என்றுகூட சில சமயம் இவருக்குத் தோன்றியது. எனினும், இவர் தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் கணவரும் மகள்களும் உணர்த்தியதால் அவர்களது உந்துதலில் ரத்தச் சுத்திகரிப்புக்குச் செல்ல இவர் இணங்கினார்.
“ரத்தச் சுத்திகரிப்புக்கு ஊசி போடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும். அவர் வலியில் இருப்பதைக் காணும்போது நானும் மிகவும் வேதனைப்பட்டேன்,” என்றார் கணவர் சுப்பிரமணியம், 78.
தொடர்புடைய செய்திகள்
முதலில், ஓராண்டுக்குத் தனியார் நிலையத்தில் ரத்தச் சுத்திகரிப்புக்குச் சென்றபோது மாதத்துக்கு $1,900 செலவானது. சேமிப்பு குறைந்துகொண்டே போனது.
“நான் வேலைக்குச் சென்ற காலத்தில் $500 மட்டும் வைத்துக்கொண்டு மீதமுள்ளதை மனைவியிடம் தந்துவிடுவேன்,” என்றார் கணவர் சுப்பிரமணியம்.
திருவாட்டி அமுதவள்ளியும் 27 ஆண்டுகள் தொழிற்சாலையில் வேலைசெய்து பணம் சேமித்திருந்தார். பிள்ளைகளிடம் பண உதவி பெற இவர் விரும்பவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக, தனியாரைவிட விலைக் கட்டுப்படியான தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் நிலையத்துக்கு இவர் செல்கிறார்.
எனினும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பலூனிங் சிகிச்சைக்குச் செல்லவேண்டியுள்ளது, அதற்கு அதிகம் செலவாகிறது. தங்கள் இருவரின் மெடிசேவ் கணக்குகளும் கூடிய விரைவில் தீரவுள்ளதாகக் கூறினார் திரு சுப்பிரமணியம். இதனால், அரசாங்கம் ஏதேனும் கூடுதல் உதவி தமக்கு அளித்தால் நன்றாக இருக்கும் என்றார் அவர்.
இத்தம்பதியர் அடுத்த ஆண்டு தங்கள் 50வது ஆண்டு மணநாளைக் கொண்டாடவுள்ளனர்.
இவ்வாண்டு தேசிய சிறுநீரக அறநிறுவனம், அதன் முதலாவது பேரளவிலான தீபாவளிக் கொண்டாட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தன் தலைமையகத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு இத்தம்பதியர் வந்திருந்தனர்.
“ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நான் முதன்முறையாகச் சேலை அணிந்துள்ளேன்,” என்று சொன்ன திருவாட்டி அமுதவள்ளி, ‘தலைசிறந்த உடை அணிந்தவர்’ பரிசை வென்றார்.
“இவர் எப்போதும் சேலை அணிந்தால் வெல்வார்,” எனப் பெருமையுடன் கூறினார் திரு சுப்பிரமணியம்.
ரத்தச் சுத்திகரிப்புக்குச் சென்றதால் தற்போது தம்மால் சக்கர நாற்காலி இல்லாமல் கைத்தடியைப் பிடித்து நடக்க முடிகிறது என்றார் திருவாட்டி அமுதவள்ளி.
“ரத்தச் சுத்திகரிப்பு நம் வாழ்நாளை அதிகரிக்கும்,” என தம்மைப் போன்றோர் அஞ்சாமல் மருத்துவர் கூறும்படி அதை மேற்கொள்ளும்படி இவர் ஊக்குவிக்கிறார்.
கோலாகலக் கொண்டாட்டம்
தீபாவளிப் பலகாரங்கள், வண்ண உடைகள், இசைக்கருவிகள், பாரம்பரிய விளையாட்டுகள் முதலானவற்றுடன் தீபாவளிச் சந்தை இடம்பெற்றது. அதில் கடைகளை வைத்திருந்தோர் தேசிய சிறுநீரக அறநிறுவன நோயாளிகளே.
விறுவிறுப்பான பாடல்கள், இசை, நடனங்கள், வந்திருந்தோரைக் குதூகலப்படுத்தின. சேலை அணிந்த ஆண்கள், வேட்டி அணிந்த பெண்கள் போன்ற சுவாரசிய போட்டிகள் நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தன. இந்து அறக்கட்டளை வாரியம், வந்திருந்தோருக்கு 300க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கியது.

