தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்ப ஒற்றுமையைப் பறைசாற்றும் தீபாவளி ஒளியூட்டு 2024

2 mins read
9cb42739-0353-45e4-b22b-bc50b568e9b4
சனிக்கிழமை (செப்டம்பர் 14) இரவு நடந்தேறிய தீபாவளி ஒளியூட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். - படம்: த. கவி
multi-img1 of 2

தீபாவளிப் பண்டிகை பெரும்பாலும் இந்தியச் சமூகம் கொண்டாடும் ஒன்று என்றாலும், இருளை அகற்றி ஒளியை வரவழைக்கும் அதன் முக்கியத்துவமானது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியிருக்கிறார். 

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) ஏற்பாட்டில், பிர்ச் சாலை திறந்தவெளியில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) இரவு நடந்தேறிய தீபாவளி ஒளியூட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது திரு டியோ இவ்வாறு சொன்னார்.

“பல்லின சமுதாய நாடான சிங்கப்பூரில் தீபாவளித் திருநாள் சமூக ஒற்றுமையின் அடையாளமாக மாறியுள்ளது,” என்றார் அவர். 

சக இந்திய நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடும் மகிழ்ச்சியைப் பற்றி குறிப்பிட்ட அவர், இது போன்ற தருணங்கள் பிணைப்புகளை வளர்க்க உதவுகின்றன என்றார். 

இவ்வாண்டிற்கான தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சி, சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் திரண்டிருக்க, பிரம்மாண்டமாக நடந்தேறியது. 

இதனையடுத்து, வரும் நவம்பர் மாதம் 17ஆம் தேதிவரை 64 நாள்களுக்கு லிட்டில் இந்தியா சாலைகள் வண்ண விளக்குகளால் மின்னி, காண்போரைக் களிப்பில் ஆழ்த்தவுள்ளன.

கண்கவர் நடனத்துடன் ‘பாரதா ஆர்ட்ஸ்’ நடனமணிகள் தீபாவளி ஒளியூட்டு விழாவைத் தொடங்கி வைத்தனர். 

தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு ஆதரவளித்த 23 சமூகத் தலைவர்களுக்கு மேயர் டெனிஸ் புவா நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

மேலும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா), சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுச் சங்கம் உட்பட 19 அமைப்புகளும் கோவில்களும் அதிபர் சவால் இயக்கத்திற்காக $90,000 திரட்டின. அதிபர் சவால் இயக்கம் சார்பாக துணை அமைச்சர் ஆல்வின் டான் அதற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாண்டின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் ‘குடும்பம்’ எனும் கருப்பொருளில் இடம்பெறும் என்று லிஷா தெரிவித்துள்ளது. அதனைச் சித்திரிக்கும் வகையில், தந்தை, தாய், இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு மகிழ்ச்சியான குடும்பக் காட்சிப் படைப்புகள் லிட்டில் இந்தியா வட்டாரத்திற்கு மக்களை வரவேற்கும் இரண்டு முக்கிய வளைவுகளில்  வைக்கப்பட்டுள்ளன.

“இந்த ஆண்டின் ஒளியூட்டில் முதன்முறையாக ‘எல்இடி’ மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நமது கொண்டாட்டங்களின்போது மின்சாரத்தைச் சேமிக்க இம்முயற்சி ஊக்குவிக்கிறது,” என்று கூறினார் ‘லிஷா’ தலைவர் ரெகுநாத் சிவா.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இவ்வாண்டு லிஷாவின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

வழக்கம்போல கேம்பல் லேனில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை தீபாவளி விற்பனைக்காகக் கடைகள் அமைக்கப்படும்.

புதிய புதையல் வேட்டை விளையாட்டு, ‘பிக் பஸ்’ பேருந்துச் சுற்றுலா, ‘தேக்கா ராஜா’ யானை உருவச் சின்ன ஊர்வலம், பூ கட்டுதல், ரங்கோலி வரைதல் போன்ற பயிலரங்குகள் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை இடம்பெறவுள்ளன.

இந்திய மரபுடைமை நிலையமும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமும் (சிண்டா) பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. 

ஆண்டுதோறும் இடம்பெறும் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிண்டா மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு  https://www.deepavali.sg/, https://ihc-programmes.peatix.com/events ஆகிய இணையத்தளங்களை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்