சன்லவ் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்களின் உள்ளங்களை தீபாவளிக் கொண்டாட்டங்கள் அலங்கரித்தன. ஒவ்வோர் ஆண்டும் சன்லவ் இல்லத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள் பண்டிகைக்கால ஒன்றுகூடல் நிகழ்வில் இணைந்து முதியவர்களுக்குத் தீபாவளிக் கொண்டாட்ட உணர்வை அளிப்பதுமின்றி, அவர்களுக்குப் பல்வேறு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அவ்வகையில், இம்முறை உட்லண்ட்சில் இருக்கும் சன்லவ் துடிப்பாக மூப்படைதல் நிலையத்திலும் புவாங்கோக்கில் இருக்கும் சன்லவ் தாதிமை இல்லத்திலும் முதியவர்கள் தீபாவளிக் கொண்டாட்ட உணர்வில் திளைத்தனர்.
முதியவர்கள் ஒன்றிணைதல்
உட்லண்ட்ஸ் சர்க்கிள் வீவக புளோக் ஒன்றின் கீழ்த்தளத்தில் அமைந்துள்ளது சன்லவ் கோல்டன் சஃப்ரான் துடிப்பாக மூப்படைதல் நிலையம். அந்த புளோக்கில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பதால், அவர்கள் தங்களின் முதுமைக் காலத்தை ஆரோக்கியமாக கழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொண்டூழியர்கள் அவர்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி நிகழ்ச்சி ஒன்றில், அக்கம்பக்கத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த இந்தியர்களுக்கு அப்பாற்பட்டு மற்ற இனங்களைச் சேர்ந்த முதியவர்களும் கலந்துகொண்டனர்.
குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளி கொண்டாட முடியாமல் இருக்கும் மூத்தோருக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏக்கத்தைத் தீர்த்து வைக்கின்றன.
ஆடல் பாடல் என களைகட்டிய கொண்டாட்டத்தில் முதியவர்களை மகிழ்வூட்டும் அங்கங்களும் விருந்து உபசரிப்பும் இருந்தன. நிலையத்தைச் சேர்ந்த மூத்த தொண்டூழியர்கள் சிலர் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்குக் கைகொடுத்தனர்.
“ஓய்வுபெற்ற பிறகு என் நேரத்தைப் போக்க இந்த நிலையத்தில் தொண்டூழியராகச் சேர்ந்தேன். மற்றவர்களுடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது இன்பம் தருகிறது. இந்த நிகழ்ச்சி அலங்காரத்திற்கு நான் உதவினேன்,” என்றார் திருமணி, 68.
“மற்ற இனத்தவர்களும் நம் கலாசாரத்தை அறிய இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. குறிப்பாக, தனியாக வசிப்போர் பண்டிகைக்காலத்தை தனியாக கழிப்பதற்குப் பதிலாக இங்கு ஒரு குடும்பமாக தீபாவளியைக் கொண்டாடலாம்,” என்று நிலைய மேலாளர் லீனா கிருஷ்ணசாமி, 45, கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பல இனத்தவர்களுக்கு கொண்டாட்டம்
புவாங்கோக் சன்லவ் தாதிமை இல்லத்தில் பல்லின முதியவர்களைச் சென்றடையும் வகையில் தீபாவளிக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
அனைவரையும் உள்ளடக்கும் வகையில் இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் இசை நிகழ்ச்சியில் கருவிகளை வாசித்து செவிக்கு விருந்தளித்தனர்.
தொண்டூழியர்கள் பலரின் உதவியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல்களுடன் சிலம்ப நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
ஒவ்வொரு மாதமும் முதியவர்களைக் கோயில்களுக்கு அழைத்துச் சென்றுவரும் தொண்டூழியர்கள், அவர்களுக்குப் பண்டிகைக்கால உணர்வளிக்க தீபாவளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
அவர்களில் ஒருவர் தொண்டூழியர் அருணாவதி செல்வராஜா, 42. இருபது ஆண்டுகளுக்குமேல் தொண்டு செய்துவரும் அவர், கடந்த சில ஆண்டுகளாக சன்லவ் இல்லத்தில் தொண்டூழியராக இருந்து வருகிறார்.
“தீபாவளிக்காக முதியவர்களுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்குவதில் நான் பங்காற்றினேன். அவர்களுக்குத் தேவையான புத்தாடைகள், உணவு வகைகள் உள்ளிட்டவை அன்பளிப்புப் பைகளில் உள்ளன,” என்றார் அவர்.
தம் 10 வயது மகளையும் சிறு வயதிலிருந்து தொண்டூழியத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள அருணாவதி, பிள்ளைகள் ஆரம்பத்திலேயே தொண்டில் ஈடுபடத் தொடங்கினால்தான் அவர்களுக்குப் பிறருக்கு உதவும் மனப்பான்மை வளரும் என்றார்.
“மற்றவர்களுக்கு உதவினால் நன்மை வந்துசேரும் என்று என் தாயார் சொல்வார். முதியவர்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அருணாவதியின் மகள் கியானா பன்னீர்செல்வம்.
“தீபாவளி நிகழ்ச்சியில் பங்கேற்றதில் உற்சாகமாக உள்ளேன். மற்றவர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடியதில் மகிழ்ச்சி,” என்றார் இல்லத்தைச் சேர்ந்த அன்பழகன், 44.