குழந்தைநல மருத்துவராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் டாக்டர் தேவ், வெற்றிகரமாக ஒரு தேநீர் வணிகத்தை நடத்தி வருவதோடு, அசாமில் குழந்தைகளுக்காக ஒரு நூலகத்தையும் இலவச மருத்துவமனையையும் நடத்தி வருகிறார்.
பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் அதே நேரத்தில் நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் ஒரு வணிகத்தை நடத்த முற்பட்டு, தன் குடும்பத் தொழிலான தேநீர் வணிகத்தைத் தன் தங்கையோடு இணைந்து, ‘டாரேங் ஈக்கோ வொர்க்ஸ்’ (Darrang Eco Works) என்ற நிறுவனத்தின் பெயரில் நடத்தி வருகிறார் 33 வயது தேவ்.
அசாமில் தேநீர் இலைகளை வளர்த்து, ரோஜா, செம்பருத்தி, எலுமிச்சைப் புல், போன்ற மூலிகைகளோடு கலந்து, ‘ஆர்ட்டிஸனால் டீ’ என்று சொல்லப்படும் தேநீரை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.
பல வருடங்களாக கிராமங்களில் குறைந்தபட்ச ஊதியத்தோடும் மோசமான வாழ்க்கைத் தரத்தோடும் இன்னல்படும் தொழிலாளர்களைப் பார்த்து வளர்ந்ததால், தங்கள் தேநீர் பண்ணையில் பணிபுரிபவர்களுக்கு வழக்கத்தைவிட 25 விழுக்காடு அதிக ஊதியமளித்து, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த டாக்டர் தேவ் உதவிபுரிந்து வருகிறார்.
“நான் மருத்துவம் பயிலத் தொடங்கியபோது, சமூகத்தில் என் பங்கைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. ஆனால், மக்களோடு கலந்துரையாடத் தொடங்கியபோதுதான் என் கண்ணோட்டம் மாறியது.
உடல்நல பிரச்சினைகளைத் தாண்டி, அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதுவே சமூகத் தொண்டில் ஈடுபட என்னை ஊக்குவித்தது,” என்று பகிர்ந்துகொண்டார் அவர்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் கொவிட்-19ஐ தவிர மற்ற நோய்களெல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்டோருக்கு இலவசமாகத் தொலை மருத்துவச் சேவைகளைத் தம் நண்பர்களோடு இணைந்து வழங்கினார்.
தம் மனைவியும் ஒரு குழந்தைநல மருத்துவர் என்பதால், அசாமில் தன்ம் கிராமத்தில், குழைந்தைகளுக்கான ஓர் இலவச மருத்துவமனையை மனைவியின் உதவியோடு நடத்தி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, பெற்றோரிடம் பணமில்லாததால் படிப்பை நிறுத்தவேண்டிய இக்கட்டான சூழலுக்கு இக்குழந்தைகள் தள்ளப்படுகின்றனர் என்பதை உணர்ந்து, அவர்களுக்கான நூலகத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.
“மருத்துவராக மக்களின் உடலநலத்தையும் கொடையாளராக மக்களின் வாழ்க்கை நலனையும் மேம்படுத்த உதவுகிறேன். மருத்துவர்களின் பணியும் சமூகத் தொண்டில் அடங்கும் என்பதால் இரண்டுக்கும் அதிக வேறுபாடு இல்லை,” என்றார் திரு தேவ்.
இவ்வாறு சமூகத் தொண்டில் ஈடுபடுவது அவருக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதால் இப்பயணம் நிச்சயம் தொடரும் என்றார் அவர்.