தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிங்கப்பூர் பயணத்தைப் பற்றிய வரலாற்றுப் பதிவான ‘சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்’ நூல் வெளியீட்டு விழாவின் மூலம் திரட்டப்பட்ட தொகை சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) ‘புரொஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
செம்மொழி சமூக, இலக்கிய இதழின் ஏற்பாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு அந்நூலை வெளியிட்டார்.
இந்நிலையில், நூலின் விற்பனைத் தொகை சமூக, கல்வி அறநிதிக்கு வழங்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப, அந்த நன்கொடையின் ஒரு பகுதி சிண்டாவின் ‘புரொஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு வழங்கப்படுவதாக அந்நூலை எழுதித் தொகுத்த திரு எம். இலியாஸ் தெரிவித்தார்.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி முன்னிலையில் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி இரா அன்பரசுவிடம் இம்மாதம் 18ஆம் தேதி நூலாசிரியர் இலியாஸ் நன்கொடையை வழங்கினார்.
காஸா மனிதாபிமான நிவாரண நிதிக்கும் இலவசமாக வழங்கப்படும் செம்மொழி இதழுக்கும் எஞ்சிய தொகை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.