இளையர்கள் புதிய விளையாட்டு அனுபவங்களை பெறுவதற்கும், விளையாட்டு பங்கேற்பில் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், சக தோழர்களுடன் இணைந்து பழகுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது ‘யூத்@பிளே’ விளையாட்டு விழா.
ஸ்போர்ட்எஸ்ஜி அமைப்பு ஆகஸ்டு 6ஆம் தேதி சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் ‘யூத்@பிளே’ விளையாட்டு விழாவை நடத்தியது. இதில் 16 முதல் 27 வயதுடைய இளையர்களுக்கான விளையாட்டுப் பயிற்சிகள், பயிலரங்குகள் மற்றும் விளையாட்டுகள் உற்சாகமாக இடம்பெற்றன.
‘டிராகன் போட்’ படகோட்டம், கயாக் படகோட்டம், ஸ்கேட்போர்டிங், நடனம் ஆகியவை உட்பட்ட பல விளையாட்டுப் பயிலரங்குகளில் இளையர்கள் கலந்துகொண்டனர்.
விளையாட்டுகளைத் தவிர, ‘ஒசிபிசி’ சதுக்கத்தில் சுவாரசியமான சவால் விளையாட்டுகள் இடம்பெற்றன. பிரபல உள்ளூர்க் கலைஞர்கள் விழாவைச் சுவாரசியமாக வழிநடத்தினர்.
இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் சிங்கச் சின்னமான நிலாவும் ‘கெட் ஆக்டிவ்’ (GASG) உடற்பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் இணைந்தது. ‘டான்ஸ் ஆஃப் தி நேஷன்’ என்று அழைக்கப்படும் இந்த உடற்பயிற்சி நிகழ்ச்சி, ‘என்றென்றும் ஒன்றாவோம்’ என்ற இவ்வாண்டின் தேசிய தினப் பாடலுக்கு ஏற்ப அமைந்திருந்தது.
‘கெட் ஆக்டிவ் சிங்கப்பூர்’ கொண்டாடும் இவ்வாண்டின் தேசிய தினத்தில் இதுவே ‘யூத்@பிளே’யின் முதல் விளையாட்டு விழா ஆகும். இந்த இயக்கம், விளையாட்டின் மூலம் ஆண்டுதோறும் சிங்கப்பூரைக் கொண்டாடுகிறது.
வருங்கால ‘யூத்@பிளே’ விளையாட்டு விழாக்களில் மேலும் பல விளையாட்டுகளைச் சேர்க்க திட்டமிடப்பட்டு வருகிறது. தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், உயர்கல்வி நிலையங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொடக்கக்கல்லூரிகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் போட்டிகளை உள்ளடக்கி, விளையாட்டு விழாவை விரிவுபடுத்துவதும் அவற்றில் ஒன்று.
விளையாட்டு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் உரையாடல்களை உயர்கல்வி நிலையங்களுடன் நடத்த இந்த விளையாட்டு விழா ஊக்குவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
பிற்காலத்தில் ஸ்போர்ட்எஸ்ஜி அமைப்பு, உயர்கல்வி நிலையங்களுடன் இணைந்து பள்ளி வளாகங்களில் கற்றல் - விளையாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, மேலும் பல பயிலரங்குகள், நிகழ்ச்சிகள் நடத்தும்.
மேலும், விளையாட்டுகள்மீது இளையர்களின் ஆர்வத்தைத் தக்கவைக்கும் பொருட்டு, விளையாட்டு ஆர்வலர் குழுக்களை உருவாக்குவதற்கும் உயர்கல்வி நிலையங்களுக்கு ஸ்போர்ட்எஸ்ஜி உதவும்.
‘யூத்@பிளே’ விளையாட்டு விழா போன்ற நிகழ்வுகள் இளவயதிலிருந்தே சிங்கப்பூரர்களிடம் வலுவான அடித்தளத்தையும், விளையாட்டுமீது ஆர்வத்தை உருவாக்கவும் பெரிதும் முயல்கின்றன. இந்த இன்றியமையாத அனுபவங்கள், பிற்காலத்தில் வேலையிடம் அல்லது குடும்பச் சூழல்களில் மிகவும் உதவியாக இருக்கும்.
அத்துடன், சிங்கப்பூரர்கள் அனைவரும் விளையாட்டுமூலம் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் இலக்குகளுடனும் ஒத்துப்போவதாக இம்முயற்சிகள் அமைந்துள்ளன.

