தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடரும் தமிழவேள் மரபு

5 mins read
cb73ef20-02f8-459d-92af-36de5cce8231
2003ஆம் ஆண்டு கோ.சாரங்கபாணியின் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டபோது, வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ கோசா கல்வி அறநிதியை தமிழ் முரசு அமைத்து, $1.1 மில்லியன் வெள்ளி திரட்டியது. அத்தொகை 2004ஆம் ஆண்டு சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டது. - படம்: தமிழ் முரசு

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தை வழிநடத்தி, இந்நாட்டின் தன்னிகரற்ற சமூகத் தலைவராக இன்றுவரை கொண்டாடப்படுபவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி.

சிங்கப்பூருக்கு 21 வயதில் வந்த திரு சாரங்கபாணி 71 வயதில் உயிர்துறக்கும்வரை சிங்கப்பூருக்காகவே வாழ்ந்தார். அந்த 50 ஆண்டு காலத்தில், சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தைக் கட்டி எழுப்பி, உயர்ந்த சமூகமாய் நிலைநிறுத்த அவர் மேற்கொண்ட பணிகள் இன்றும் தொடர்கின்றன.

தமிழர் பேரவை.
தமிழர் பேரவை. - படம்: தமிழர் பேரவை

அவரது முயற்சியால் பிறந்து, சமூகத்தின் குரலாய் உலகெங்கும் ஒலிக்கும் தமிழ் முரசு இன்று 90 ஆண்டுகளை நோக்கி வீறுநடை போடுகிறது.

தமிழ் முரசு மட்டுமின்றி, சமூகத்தைக் கட்டிக்காக்க தமிழ் மக்களின் நலன் கருதி அவர் செய்த பல பணிகள் இன்றளவும் சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

கோ. சாரங்கபாணி ஏற்றிய ஒளி

சிங்கப்பூரில் 1950களில் இருந்த 40க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளை ஒன்றிணைத்து, கோ.சாரங்கபாணி உருவாக்கியது தமிழர் பிரதிநிதித்துவ சபை.

இவ்வமைப்பு சிங்கப்பூரில் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்ததுடன், மக்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பல வழிகளில் பங்காற்றியது.

தமிழர் திருநாள் எனும் மாபெரும் நிகழ்வைச் சிங்கப்பூரிலிருந்து மலேசியா வரை நடத்தி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு எழுச்சியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியது. இன்றும் அவ்விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது மாதவி இலக்கிய மன்றம்.

1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவ சபை, 1980இல் தமிழர் பேரவை என்று பெயர் மாற்றம் கண்டது.

இன்றுவரை சிங்கப்பூரின் தமிழ் அமைப்புகளை ஒன்றிணைத்து, பல செயல்களை முன்னெடுக்கும் தமிழர் பேரவை சிங்கப்பூரின் ஒரு பலமிக்க குரலாகவும் களமாகவும் இயங்கி வருகிறது.

சிங்கப்பூரில் தமிழ்ச் சமூக சீர்திருத்தத்தை முன்னெடுத்த முதல் அமைப்பாகத் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தைக் குறிப்பிடலாம்.

1930களில் இங்கு வாழ்ந்த அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த அமைப்பு அடித்தளமிட்ட பல முயற்சிகள் இன்று பெரும் தூண்களாக உருவாகி சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தைத் தாங்கி நிற்கின்றன.

அவற்றுள் ஒன்று சங்கம் தொடங்கிய தமிழ் முரசு பத்திரிகை; மற்றது அவர்கள் வளர்த்த பகுத்தறிவுச் சிந்தனை; இன்றியமையாதது, சங்கம் தந்த தமிழவேள் கோ. சாரங்கபாணி.

தொடர்ந்து கோ. சாரங்கபாணியின் பணிகளை நினைவூட்டுதல்

சுவா சூ காங்கில் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் கல்லறை  2018ஆம் ஆண்டு அகற்றப்படும்வரை ஆண்டுதோறும் அவரது நினைவுநாளில் அங்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதை தமிழவேள் நற்பணி மன்றம் வழமையாகக் கொண்டிருந்தது.
சுவா சூ காங்கில் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் கல்லறை 2018ஆம் ஆண்டு அகற்றப்படும்வரை ஆண்டுதோறும் அவரது நினைவுநாளில் அங்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதை தமிழவேள் நற்பணி மன்றம் வழமையாகக் கொண்டிருந்தது. - படம்: தமிழ் முரசு

கோ. சாரங்கபாணி நிறுவிய அமைப்புகளோடு, அவரது பெயரில் தொடங்கப்பட்ட பல அமைப்புகள் இன்றளவும் சமூகத்திற்குப் பங்காற்றி வருகின்றன.

கோ. சாரங்கபாணியின் அரும்பணிகளையும் அவரது பங்களிப்பையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துக்கூறி, வரலாற்றில் அவரை வாழ வைக்கும் பணியைத் தலைமேற்கொண்டுள்ளது தமிழவேள் நற்பணி மன்றம்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் இவ்வமைப்பு, தமிழவேள் கோ. சாரங்கபாணியின் பிறந்தநாள், நினைவு நாள்களுடன் தமிழ் மொழி விழா போன்ற முக்கிய நிகழ்வுகளிலும் கோ.சாரங்கபாணியை நினைவுகூர்ந்து வருகிறது. அத்துடன், சமூகத்தில் அவர் குறித்த உரையாடலை ஏற்படுத்தி, தமிழவேளின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

“நம் நாட்டில் தமிழை அதிகாரத்துவ மொழியாக நிலைநிறுத்திய தலைவரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை தெரிந்துகொள்ளும்படி செய்வது நம் கடமை,’ என்றார் 1997ல் இருந்து தமிழவேள் நற்பணி மன்றத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் ப. தியாகராஜன், 85.

தமிழவேளின் பெயரில் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், கருத்தரங்குகளை நடத்துதல் எனப் பல முயற்சிகளில் ஈடுபடுவதோடு, தமிழவேள் நற்பணி மன்றத்தின் சார்பாக 1999ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ‘செம்மொழி’ இதழ் வெளியிடப்படுகிறது.

தமிழவேள் கோ. சாரங்கபாணியின் படத்துடன் வெளிவரும் ‘செம்மொழி’ இதழ்.
தமிழவேள் கோ. சாரங்கபாணியின் படத்துடன் வெளிவரும் ‘செம்மொழி’ இதழ். - படம்: எம். இலியாஸ்

“இன்று வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாளென அனைத்து ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் தமிழ் ஒலிக்க ஆரம்பப் புள்ளியாக இருந்தது தமிழவேள் கோ. சாரங்கபாணிதான்,” என்று பகிர்ந்துகொண்டதோடு, தமிழவேளின் பணிகள் சிங்கப்பூருக்கு அப்பாலும் மலேசியாவரை பரவியுள்ளன என்றார் செம்மொழி இதழின் ஆசிரியரும் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளருமான திரு எம். இலியாஸ்.

தமிழவேள் நாடக மன்றத்தை நடத்தியதுடன் தமிழவேள், அவரது பணிகள் குறித்த கவிதைகள் பலவும் எழுதியுள்ள தமிழாசிரியரும் எழுத்தாளருமான அமரர் மு.தங்கராசன்.
தமிழவேள் நாடக மன்றத்தை நடத்தியதுடன் தமிழவேள், அவரது பணிகள் குறித்த கவிதைகள் பலவும் எழுதியுள்ள தமிழாசிரியரும் எழுத்தாளருமான அமரர் மு.தங்கராசன். - படம்: இணையம்

மறைந்த தமிழ் ஆசிரியரும் எழுத்தாளருமான மு.தங்கராசன் தலைமையில் 1962ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 2002ஆம் ஆண்டுவரை செயல்பட்ட தமிழவேள் நாடக மன்றம் கோ.சாவின் பெயரில் இயங்கிய முக்கிய அமைப்புகளில் ஒன்று.

தமிழவேள் குரல் கொடுத்த கல்வி

தொடக்ககாலத்திலிருந்து இந்நாட்டில் கல்விக்குக் குரல்கொடுத்த முக்கியத் தலைவர்களுள் ஒருவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி. தமிழ்ப் பள்ளிகள் அமையவும், பல்கலைக்கழகத்தில் தமிழ் இடம்பெறவும் தொடர்ந்து குரல்கொடுத்தவர். அவரது பணி சமூகத்தில் இன்றும் தொடர்கிறது.

தமிழ்ச் சமூகத்தில் கல்வியறிவு மேலோங்க கோ.சாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் $1.1 மில்லியன் தொகையைத் திரட்டி, 2004ஆம் ஆண்டு சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையிடம் தமிழ் முரசு வழங்கியது.

குறிப்பாக ஊடகத் துறையில் பணியாற்றும் தமிழ் மாணவர்கள் மேற்கல்வி பயில உதவும் இந்நிதி, ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் தமிழ் முரசின் 90வது ஆண்டு விழாவில் புதுப்பிக்கப்படவுள்ளது.

சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பாக 2007ஆம் ஆண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை, சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வுக்கு வழிவகுத்துள்ளது. ஆய்வு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குவதுடன், சிங்கப்பூர்த் தமிழ் நூல்களையும் பல்கலைக்கழகத்திற்கு முஸ்தபா அறக்கட்டளை தொடர்ந்து அளித்து வருகிறது.

மேலும், இந்த அறக்கட்டளையின் வாயிலாக, ஆண்டுதோறும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்த சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்கு ‘கரிகாற்சோழன் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

கல்வியில் சிறந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகத்தை உயர்த்தும் இலக்கை நோக்கிய மற்றொரு முயற்சியாக சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஏறத்தாழ 15 வருடங்களாக ‘தமிழவேள் நினைவுச் சொற்பொழிவு’ நடத்தி வருகிறது.

தமிழ் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒன்றிணைத்து, தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

“தமிழுக்காக கோ. சாரங்கபாணி முன்னெடுத்த முயற்சிகளை மீண்டும் நினைவுகூரவும் தொடர்ந்து அவற்றைக் கட்டிக்காக்க வேண்டும் என்று எடுத்துரைக்கவும் இச்சொற்பொழிவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.” என்றார் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு சாமிக்கண்ணு.

பால பாஸ்கரன் எழுதிய ‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும் - இன்றைய பார்வை’ என்ற நூல். 
பால பாஸ்கரன் எழுதிய ‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும் - இன்றைய பார்வை’ என்ற நூல்.  - படம்: தமிழ் முரசு

ஒரு பக்கம் நிகழ்ச்சிகளின் மூலம் தமிழவேள் கோ. சாரங்கபாணியின் மரபு தொடரும் வேளையில், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிகளைக் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் பலர் எழுதிப் பதிவு செய்து வருகின்றனர்.

அவற்றுள் மறைந்த செய்தியாளர் திரு பால பாஸ்கரன் எழுதிய ‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

தமிழ் முரசு குறித்த வரலாறு, கோ. சாரங்கபாணியின் சமூகப் பயணம், ஆகியவற்றுடன் அவர் எழுதிய தலையங்கங்களையும் தொகுத்துள்ள அந்நூல், தமிழ் முரசின் மூலம் அவர் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பல பணிகளையும் எடுத்துரைக்கிறது.

குறிப்புச் சொற்கள்