இளையர்களையும் ஈடுபாட்டையும் அரவணைத்த ‘ஈடுபடு இமயம் தொடு’

இளையர்களையும் ஈடுபாட்டையும் அரவணைத்த ‘ஈடுபடு இமயம் தொடு’

1 of 2
படம்: ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கச் சிங்கப்பூர்க் கிளை
படம்: சக்திவேல் சிவாணி

18 Apr 2026 - 7:00 am

2 mins read

இளையர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில், ‘ஈடுபாடு’ எனும் தமிழ்மொழி விழா 2026ன் கருப்பொருளை ஒட்டி, நகைச்சுவைச் சொற்பொழிவுடன் சிறப்புரை, குறுநாடகம் போன்ற அங்கங்களைக் கொண்ட இலக்கிய நிகழ்ச்சி ஒன்று நடந்தேறியது.

அத்துடன், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் ‘மொழி எதற்கு? தமிழ் எதற்கு?’ என்ற அங்கத்தையும் படைத்தனர்.

ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கச் சிங்கப்பூர்க் கிளையின் ஏற்பாட்டில், ‘ஈடுபடு இமயம் தொடு’ என்ற தலைப்பில் சனிக்கிழமை (ஏப்ரல் 11) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூகத் தலைவர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், மாணவர்கள் என ஏறக்குறைய 350 பேர் கலந்துகொண்டனர்.

வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் முனைவர் மு.அ.காதர், இவ்வாண்டு தமிழ் மொழி விழாக் கருப்பொருளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன் அச்சங்கம் கடந்த 15 ஆண்டுகளில் படைத்துள்ள 150க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஈடுபாடே காரணம் என்று சுட்டினார். அந்த நிகழ்ச்சி அந்த அமைப்பின் 152வது நிகழ்ச்சியாகும்.

‘ஈடுபாடு’ என்ற தலைப்பில் தமிழ் முரசு நாளிதழின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா. முத்து நடராஜன் வழங்கிய சிற்றுரை, உள்ளூர் மூத்த பாடகர் இர்ஃபானுல்லா பாடிய சிறப்புப் பாடல், சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்ட அங்கம் ஆகியவை நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

“பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்றுக் கொடுப்பதைப் பரிசாகப் பார்க்கிறேன்,” என்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற நியமன உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு கூறினார்.

தம்மால் தமிழில் உரையாட முடிந்ததால் தமிழ் மட்டும் தெரிந்த பெண் நோயாளி ஒருவரின் உடல்நலம் தேறி வந்த அனுபவக் கதையை விளக்கினார் டாக்டர் ஹரேஷ்.

“மொழி என்பது தகவல் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தப்படும் கருவி மட்டுமன்று, அது வலிமையான பாலம்,” என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்குச் சென்ற பார்வையாளர்கள்.
நிகழ்ச்சிக்குச் சென்ற பார்வையாளர்கள். - படம்: சாதனா சுரேஷ்

நிகழ்ச்சியின்போது, 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டூழியம் செய்து சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுவரும் எழுத்தாளரும் இதழாசிரியருமான திரு. சு. ஜஹாங்கீருக்கு ‘ஜமாலியன்’ விருது வழங்கப்பட்டது.

நகைச்சுவைப் பேச்சாளரும் கவிஞருமான எம். ராமலிங்கம் உரையாற்றுகிறார்.
நகைச்சுவைப் பேச்சாளரும் கவிஞருமான எம். ராமலிங்கம் உரையாற்றுகிறார். - படம்: சக்திவேல் சிவாணி

புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளரும் தொலைக்காட்சிப் புகழ் நகைச்சுவை நாவலருமான புலவர் மா. இராமலிங்கம், ‘ஈடுபடு இமயம் தொடு’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். ஈடுபாடு இருந்தால் இமயத்தையும் தொடலாம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்