முதியவர்களின் சமூகத் தனிமையைப் போக்கி, அவர்களின் அன்றாட வாழ்வில் உற்சாகத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு உலா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்ரீ நாராயண மிஷன், சிங்கப்பூர் வணிகக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவை இணைந்து முதியோர் இல்லவாசிகளைச் சிங்கப்பூர் கடல்வாழ் உயிரினக் காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றன.
திங்கட்கிழமை (ஏப்ரல் 20) தொடங்கிய இந்நிகழ்ச்சி, ஏப்ரல் 21, 23, 24 ஆகிய நாள்களிலும் நடைபெற்றது.
இத்திட்டத்திற்குச் சிங்கப்பூர் தேசியக் கூட்டுறவுச் சம்மேளனமும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் இணைந்து உருவாக்கிய 1 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ‘எம்பவரிங் கம்யூனிட்டீஸ் ஃபண்ட்’ நிதியுதவி வழங்கியது.
மத்தியக் கூட்டுறவு நிதி, அரசாங்கம், சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்பட இந்த நிதியின்கீழ், அதுபோன்ற 22 திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.
தமது சங்கம் 100வது ஆண்டுவிழாவை இவ்வாண்டு கொண்டாடுவதாக சிங்கப்பூர் வணிகக் கூட்டுறவுச் சங்கத்தின் கௌரவச் செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த உலாவில் சுமார் 120 முதியவர்கள் கலந்துகொண்டனர். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்த ஏதுவான வசதிகள் இருந்ததாலும், குளிர்சாதன வசதியுடன் கூடிய அமைதியான சூழல் முதியவர்களுக்குப் பாதுகாப்பாக அமைந்ததாலுமே கடல்வாழ் உயிரினக் காட்சியகம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக திரு ராதாகிருஷ்ணன் கூறினார்.
முதியவர்களுக்குத் துணையாக மகளிர் நலக் குழுவினர், பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் தொண்டூழியர்கள் களமிறங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
முதல் நாளன்று சிங்கப்பூர் மெர்கன்டைல் கூட்டுறவு சங்கத்திலிருந்து 11 பேர், மூன்று தாதியர் உட்பட ஸ்ரீ நாராயண மிஷனைச் சேர்ந்த 7 பேர், ஸ்ரீ ராமானுஜா சங்கத்தைச் சேர்ந்த 13 பேர் எனப் பலர் இந்த நற்பணியில் ஈடுபட்டனர்.
“முதியவர்கள் சமூகத்தில் தாங்களும் ஓர் அங்கம் என உணர்வதை உறுதிசெய்வதே இந்நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கமாகும்,” என்று ஸ்ரீ நாராயண மிஷனின் திட்ட நிர்வாகி ரேஷ்மா தாசிம், 25, தெரிவித்தார்.
இந்த உலா முதியவர்களிடையே உணர்வுபூர்வமான தாக்கத்தையும் பெருமகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
86 வயது திருமதி அடிகள் அம்மாள், இந்த உலா தமக்கு மிகுந்த மனநிம்மதியைக் கொடுத்ததாகவும் அங்குள்ள மீன்களைப் பார்ப்பது தமக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறினார்.
மற்றொரு முதியவரான 67 வயது திரு நாரஜ, சுறா மீன்களைப் பார்த்ததில் தாம் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார். தமது இளம் வயதில் மீன்பிடிக்கச் சென்ற நினைவுகள் வந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

