வயது முதிர்வால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றான சிறுநீர்க் கசிவு, பலரது அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதுடன் தன்னம்பிக்கையையும் குலைக்கிறது. இதுபற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்கும் பலர், சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதையும் தவிர்த்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கின்றனர்.
இத்தகைய சூழலில், முதியவர்கள் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து இயங்குவதற்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், பாதுகாப்பான பெருநிறுவனத் துறையைத் துறந்து தொழில்முனைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் 37 வயது நிவேதிதா வெங்கடேஷ்.
அவர் 2022ஆம் ஆண்டு தொடங்கிய ‘ஏர்’ (Aire) நிறுவனம், முதியோருக்கான சிறுநீர்ச்கசிவை உறிஞ்சும் உள்ளாடைகளையும் அணையாடைகளையும் (டயப்பர்) தயாரித்து வருகிறது.
தரமான தயாரிப்புகளை வழங்குவதுடன், சிறுநீர்க்கசிவு குறித்த சமூகத்தின் தயக்கத்தையும் களைய வேண்டும் என்பதே இவரது முக்கிய நோக்கம்.
பாட்டியின் அனுபவம் தந்த திருப்புமுனை
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் பட்டமும் அமெரிக்காவில் முதுகலை வணிக நிர்வாகப் பட்டமும் பெற்ற நிவேதிதா, ‘யூனிலீவர்’, ‘கிராஃப்ட் ஹைன்ஸ்’ உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
2022ஆம் ஆண்டு இறுதியில் ‘மெட்டா’ நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையிழந்தபோதிலும், மனந்துவளாமல் அதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட இவர், ஐந்தே வாரங்களில் ‘ஏர்’ நிறுவனத்தைத் தொடங்கினார்.
கொவிட்-19 காலத்தில் காய்ச்சலால் தட்டுத் தடுமாறிக் கழிப்பறைக்குச் செல்ல முயன்றபோது கீழே விழுந்த இவரது 90 வயது பாட்டி, அதன்பின் பல மாதங்கள் படுக்கையிலேயே இருக்க நேரிட்டது.
சிறுநீர்க்கசிவுப் பிரச்சினையால் அவதிப்பட்ட அவருக்கு, சந்தையில் கிடைத்த தடிமனான, கரடுமுரடான அணையாடைகளும் அணிந்துகொள்ள வசதியாக இல்லை. அவற்றை அணிவது காகிதப் பையை அணிந்திருப்பது போன்ற உணர்வைத் தருவதாகப் பாட்டி வேதனையுடன் கூறியிருந்தார்.
இந்த அனுபவம் நிவேதிதாவைச் சிந்திக்க வைத்தது. குழந்தைகளுக்கான அணையாடைகள், பெண்களுக்கான சுகாதாரப் பொருள்கள் ஆகியவற்றில் தொடர்ந்து புத்தாக்கங்கள் அறிமுகமாகும் நிலையில், முதியோருக்கான தயாரிப்புகளில் ஏன் அத்தகைய முன்னேற்றம் இல்லை என்ற கேள்வி இவருக்குள் எழுந்தது.
“முதியவர்களின் சுயமரியாதையையும் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் ஒரு பிரச்சினைக்கு ஏன் சிறந்த தீர்வுகள் இல்லை என்று யோசித்தேன்,” என்றார் நிவேதிதா.
அந்தப் பிரச்சினை தமது குடும்பத்துக்கு மட்டுமானதன்று என்பதை உணர்ந்த இவர், சந்தையில் அதற்கான தேவையை ஆராயத் தொடங்கினார்.
இதையடுத்து, 2022ஆம் ஆண்டு தமது சொந்தச் சேமிப்பைப் பயன்படுத்தி, ‘ஏர்’ நிறுவனத்திற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்; 2023ல் அதன் தயாரிப்புகள் சந்தைக்கு வந்தன.
வசதிக்கும் கண்ணியத்திற்கும் முக்கியத்துவம்
முதியவர்களுடனும் அவர்களைப் பராமரிப்போருடனும் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அறிந்துகொண்ட பின்னரே தயாரிப்புகளை வடிவமைத்தார் நிவேதிதா.
ஆசியர்களின் உடலமைப்பிற்கும் வெப்பமண்டலக் காலநிலைக்கும் ஏற்றவாறு மென்மையான, காற்றோட்டமுள்ள துணிப் பொருள்களைக் கொண்டு அணையாடைகள் தயாரிக்கப்பட்டன. ஒரே இரவில் இரண்டு லிட்டர் வரையிலான திரவத்தை உறிஞ்சும் திறன் கொண்ட இரட்டை அடுக்கு பாதுகாப்புத் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதுடன் சிறுநீர்க்கசிவு குறித்த சமூகத்தின் பார்வையையும் மாற்ற வேண்டியிருந்தது.
“சிறுநீர்க்கசிவு என்பது வயது முதிர்வுடன் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினை. ஆனால், அதனைப் பற்றிப் பேச பலரும் தயங்குவதால் உதவி தேவைப்படுவோரும் அதனை நாடுவதில்லை,” என்று அவர் கூறினார்.
அதனை மாற்றும் நோக்கில், ‘டேக் ஆன் டுடே’ (Take on Today), ‘ஹியூமன்ஸ் ஆஃப் ஏர்’ (Humans of Aire) உள்ளிட்ட விழிப்புணர்வுத் திட்டங்கள்மூலம் சுறுசுறுப்பாக வாழும் முதியவர்களின் அனுபவங்களை நிறுவனம் அதன் இணையத்தளத்தில் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறது.
86 வயதிலும் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரம் வரை சென்றுவந்த பெண், பூமலையில் நாளும் காலை நடனப் பயிற்சி அளிக்கும் முதியவர் எனப் பலரின் கதைகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய கதைகள்மூலம், வயது முதிர்ந்தாலும் ஒருவர் தமது விருப்பங்களையும் சமூக வாழ்க்கையையும் தொடர முடியும் என்பதை நிறுவனம் எடுத்துரைக்கிறது.
பலதுறை மருந்தகங்கள், சமூக மன்றங்கள், முதியோர் நிலையங்கள் ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணர்வு முகாம்களையும் நிறுவனம் நடத்துகிறது. மேலும், 10,000க்கும் அதிகமான இலவச மாதிரிப் பொட்டலங்களை விநியோகித்து, முதியவர்கள் தயக்கமின்றித் தயாரிப்புகளைப் பயன்படுத்திப் பார்க்க அது வழிவகுத்தது.
ஏளனத்தையும் சவால்களையும் கடந்த பயணம்
முதியோருக்கான அணையாடை தயாரிக்கும் தொழிலில் இறங்கப்போவதாக நிவேதிதா கூறியபோது, அவரைச் சுற்றியிருந்த பலரும் வியப்புடன் எதிர்வினையாற்றினர்.
“பெருநிறுவன உலகை விட்டுவிட்டு முதியோர் அணையாடைகளை விற்கப்போகிறாயா என்று சிலர் சிரித்துக்கொண்டே கேட்டனர்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
தொழில் தொடங்கியபோது முதலீடு திரட்டுவதும் எளிதாக இருக்கவில்லை. குறிப்பாக, தொடக்கநிலை முதலீட்டாளர்களில் பலர் ஆண்களாக இருந்ததால், முதியோர் பராமரிப்புத் துறையின் தேவையையும் சந்தை வாய்ப்புகளையும் அவர்களுக்குப் புரியவைப்பது சவாலாக இருந்ததாக நிவேதிதா கூறினார்.
இருப்பினும், சிறிய குழுவுடன் தொடங்கிய ‘ஏர்’ நிறுவனம், தற்போது சிங்கப்பூரின் முன்னணிச் சில்லறை விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள், இணைய விற்பனைத் தளங்கள் உள்ளிட்ட இடங்களில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது; மலேசியச் சந்தைக்கும் விரிவடைந்துள்ளது.
வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இத்தயாரிப்புகளைப் பயன்படுத்துவோர், இரவில் இடையூறின்றி உறங்க முடிவதாகவும் அன்றாட நடவடிக்கைகளில் அதிக நம்பிக்கையுடன் ஈடுபட முடிவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளதாக நிவேதிதா குறிப்பிட்டார்.
அதுமட்டுமன்றி, பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழும் ஓசிபிசி வங்கியும் இணைந்து அண்மையில் நடத்திய வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது விழாவில், ‘மிகுந்த நம்பிக்கையளிக்கும் பசுமை நிறுவன விருதை’ (Most Promising Sustainability Start-up Award) ‘ஏர்’ நிறுவனம் வென்றது.
இதுபோன்ற அங்கீகாரங்கள் தமது சிறு குழுவினர்க்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக நிவேதிதா மகிழ்ச்சியுடன் கூறினார்.
அடுத்த இலக்குகள்
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வளர்ந்துவரும் நிலையில், மூன்றாவது வெளிநாட்டுச் சந்தையிலும் விரிவடைய ‘ஏர்’ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
மகப்பேற்றுக்குப் பிறகும் மாதவிடாய் நின்ற பின்னரும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய லேசான சிறுநீர்க்கசிவைச் சமாளிக்க உதவும் புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தொழில் தொடங்க விரும்பும் இளையர்கள், சந்தை ஆராய்ச்சியுடன் நின்றுவிடாமல் வாடிக்கையாளர்களிடம் நேரடியாகப் பேசிப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது நிவேதிதாவின் அறிவுரை.
“துணிந்து களமிறங்குங்கள். வெற்றி ஒரே இரவில் கிடைத்துவிடாது. நிதி நெருக்கடி உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொள்ள பொறுமையும் மனவுறுதியும் அவசியம்,” என்கிறார் அவர்.
தம் பாட்டி எதிர்கொண்ட சிரமத்திலிருந்து உருவான நிவேதிதாவின் முயற்சி, இன்று பல முதியவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ உதவி வருகிறது.
