பேச்சில் உரத்த தொனி இல்லை. ஆனால், ஒவ்வொரு சொல்லிலும் அழுத்தம் இருந்தது. அவர்தான் சிங்கப்பூர் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் முதன்மைச் சிறப்புப் புலனாய்வாளர் யுவராஜ் குணாளன்.
பதினைந்து ஆண்டுகளாக ஊழல் வழக்குகளைப் பார்த்துவரும் அனுபவம் இவரது குரலில் வெளிப்பட்டது.
‘எங்கள் ஊரில் இதெல்லாம் இயல்பு’ என்று இருக்க வேண்டாம்
தமிழ் முரசுடனான நேர்காணலின் தொடக்கத்திலேயே திரு யுவராஜ், ஒன்றைத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. இங்கு எல்லார்க்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். பொருளியல் நிலையாக இருக்க வேண்டும். அதற்கு ஊழலுக்குத் துளியும் இடம் கொடுக்க முடியாது.
“ஒரு சிறிய ஊழலை உள்ளேவிட்டால்கூட, நம்முடைய நேர்மையை, உலக மக்கள் சிங்கப்பூர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாம் இழக்க நேரிடலாம். அதனால்தான் எந்தப் புகார் வந்தாலும், யாராக இருந்தாலும், பாகுபாடு பார்க்காமல் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார் இவர்.
வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவோரிடம் இவர் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்.
“எங்கள் ஊரில் இதெல்லாம் இயல்பு என்று நினைத்து இங்குச் செயல்படக்கூடாது. வேறோர் இடத்தில் பத்து வெள்ளி கொடுத்துத் தப்பித்திருக்கலாம். ஆனால் இங்கு அது செல்லுபடியாகாது. இங்குத் தொகை முக்கியமன்று, நோக்கம்தான் முக்கியம். ஒரு வெள்ளி லஞ்சம் கொடுத்தாலும் அது குற்றம்தான். இன்று ஒரு வெள்ளியை அனுமதித்தால் நாளை அது பெரிய தொகையாக மாறிவிடும்,” என்று உறுதிபடச் சொன்னார் திரு யுவராஜ்.
வேலை போய்விடும் என்று அஞ்சி பணம் கொடுக்காதீர்!
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் சமூக அமைதிக்கும் ஊழலற்ற நிர்வாகம் எவ்வளவு அவசியம் என்பதைத் திரு யுவராஜ் விளக்கினார்.
மேலதிகாரி ஒருவர், ‘பணம் கொடுத்தால்தான் நாளை வேலைக்கு அழைப்பேன் என்று மிரட்டினால் என்ன செய்வது’ என்ற கேள்வியை முன்வைத்தபோது, அதற்குச் சட்டென பதிலளித்தார்.
“முதலில் அதனை மறுத்துவிடுங்கள். வேலை போய்விடும் என்று அஞ்சி, பணம் கொடுத்துவிட்டு, சட்டத்தின்முன் குற்றவாளியாக நிற்பதைவிட அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடுவது மேல்.
“பணம் கொடுப்பவரும் குற்றவாளி, வாங்குபவரும் குற்றவாளி. ஆனால், மிரட்டலுக்கு ஆளாகி புகார் கொடுப்பவர்களுக்கு நாங்கள் உரிய பாதுகாப்பு அளிப்போம்,” என்று திரு யுவராஜ் உறுதியளித்தார்.
புகார் கொடுத்தால் தங்களது அடையாளம் வெளிப்பட்டுவிடுமோ என்று பலர் அஞ்சுகின்றனர். அந்த அச்சம் தேவையே இல்லை என்று இவர் தெளிவுபடுத்தினார்.
கடனும் பரிசும் லஞ்சம்தான்!
“அவர்கள் கொடுக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். நீங்கள் சிங்கப்பூரராக இருந்தாலும் சரி, வெளிநாட்டு ஊழியராக இருந்தாலும் சரி, சுற்றுலாப் பயணியாக இருந்தாலும் சரி, அச்சமின்றி முறையிடலாம். லஞ்சம் என்றால், கையில் பணம் கொடுப்பது மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று வினவியவாறு புன்னகைத்தார் திரு யுவராஜ்.
“அது மட்டுமன்று. திருப்பித் தராத கடன் என்ற பெயரில் வாங்கப்படும் பணம், விலை உயர்ந்த பரிசுப் பொருள்கள், பொழுதுபோக்குச் செலவுகள், எதிர்காலத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கப்படும் வாக்குறுதி, நிறுவனப் பங்குகள், இன்றைய நவீன காலத்தில் மறைமுகமாகக் கைமாறும் மின்னிலக்க நாணயம், போலி நிறுவனங்கள் மூலம் கொடுக்கப்படும் தொகை என அனைத்துமே லஞ்சம்தான். ஒருவருக்குச் சாதகமாகச் செயல்படுவதற்காக இவை கொடுக்கப்பட்டால், அது நிச்சயம் குற்றமே!” என்று இவர் விளக்கினார்.
பணத்தைக் காட்டாமலேயே சிறைக்குப் போன ஓட்டுநர்
“பணம் கொடுக்கிறேன் என்று வாய்மொழியாகச் சொன்னாலே அது குற்றம்தான். பணத்தைக் காட்ட வேண்டும் என்ற அவசியமே இல்லை. ‘அவர் கேட்டதால்தான் கொடுத்தேன், பணத்தை மாற்றிவிட்டேன்’ என்று சொல்வதும் தப்பிப்பதற்கான வழியன்று,’’ என்று திரு யுவராஜ் தெரிவித்தார்.
இதற்கு எடுத்துக்காட்டுகளாக இவர் இரண்டு உண்மைச் சம்பவங்களைக் குறிப்பிட்டார்.
“அனுமதியின்றி சிங்கப்பூர் - மலேசியா இடையே பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்துக் காவல் அதிகாரியிடம் ஐம்பது வெள்ளி தருவதாக வாய்மொழியாகச் சொன்னார். அவர் பணத்தை எடுத்துக் காட்டக்கூட இல்லை. ஆனால், அந்த அதிகாரி உடனடியாக முறையிட்டதன் பேரில், அந்த ஓட்டுநருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
“மற்றொரு சம்பவத்தில், கட்டுமானத் தளத்தில் மேற்பார்வையாளராக இருந்தவர், தனக்குக் கீழ் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களிடம் கடன் என்ற பெயரில் பணம் வாங்கினார். வெளிப்படையாக லஞ்சம் என்று பேசிக்கொள்ளாவிட்டாலும், பணம் கொடுத்தால் அவர் தங்கள் வேலையில் குறை கண்டுபிடிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் பணம் கொடுத்தனர். விசாரணையில் அது உறுதியாகி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது,” என்று திரு யுவராஜ் சொன்னார்.
“பழுதான வாகனத்திற்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு சான்றிதழ் கொடுத்தால், சாலையில் செல்லும் அப்பாவி மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே, லஞ்சம் என்பது தனி மனிதர் சார்ந்த செயல் மட்டுமன்று, ஒட்டுமொத்த சமுதாயத்தின் பாதுகாப்பையும் பாதிக்கும் செயல்,” என்கிறார் இந்த முதன்மைச் சிறப்புப் புலனாய்வாளர்.
“உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், அஞ்சாமல் அதனை மறுத்துவிட்டு உடனடியாக 1800-376-0000 என்ற 24 மணி நேரத் தொலைபேசி எண்ணிலோ அல்லது இணையத்தளம் மூலமாகவோ முறையிடுங்கள். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஊழலற்ற சிங்கப்பூரைத் தொடர்ந்து பாதுகாக்க முடியும்,” என்பதுதான் திரு யுவராஜ் அனைவரிடமும் முன்வைக்கும் வேண்டுகோள்!
