தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதியோரின் நலனைக் கருத்தில்கொண்டு இளையர்கள் வழிநடத்திய கொண்டாட்டம்

2 mins read
6888ddd0-5f72-473d-b134-1100e20a6eed
நாடாளுமன்ற நியமன உறுப்பினர் சையது ஹரூனுக்கு சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவர் ராஜ் முஹம்மது நினைவுப் பரிசை வழங்கினார். - படம்: சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

பல்வேறு தலைமுறையினர் இணைந்து கொண்டாடிய சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் குடும்ப தினத்தில் அறுசுவை விருந்துணவுடன் உடல்நலம் பேணும் அறிவுரைகளும் அன்போடு பரிமாறப்பட்டன.

‘த செவ்ரோன்ஸ்’ கேளிக்கை நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) நடைபெற்ற நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 600 பேர் கலந்துகொண்டனர். ‘கடந்ததைப் பேணுவோம், வருங்காலத்தை வளமாக்குவோம்’ என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற அந்த நிகழ்ச்சி, மூத்தோரின் நலனை மனத்தில் நிறுத்தி அவர்களுக்கான வாழ்வியல் குறிப்புகளை வழங்கியது.

சமூகத் தலைவர்களும் தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் சையது ஹரூன் அல்ஹப்சி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

உள்ளூர்ப் பாடகர் இர்ஃபானுல்லா உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் படைப்புகளும் விளையாட்டு நடவடிக்கைகளும் வருகையாளர்களின் குதூகல உணர்வை அதிகரித்து, மகிழ வைத்ததைக் காணமுடிந்தது.

நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய சங்கத்தின் தலைவர் ராஜ் முஹம்மது, “அனைவரின் வாழ்க்கையிலும் குடும்பம் முக்கியம். குடும்பம் நன்றாக இருந்தால் சமூகமும் நாடும் நன்றாக இருக்கும் என்ற கொள்கையுடன் இந்தக் குடும்ப தினத்தைப் பல்லாண்டுகளாக நடத்திவருகிறோம்,” என்றார்.

2026ஆம் ஆண்டில் சங்கம் தனது 85வது ஆண்டு விழாவைக் கொண்டாடவிருப்பதைக் குறிப்பிட்ட திரு ராஜ் முஹம்மது, நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விருப்பத்தையும் முன்வைத்தார். அது சாத்தியமாவதற்குச் சங்கம் தலைசிறந்த அமைப்பாக விளங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சங்கத்திற்கு ஆதரவு தந்து ஊக்குவிக்கும்படி அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

சங்கத்திற்குப் பல்லாண்டுகளாக உழைத்த மூத்தோருக்கு மனமார நன்றி நவின்ற திரு ராஜ் முஹம்மது, சங்கத்தின் வருங்காலம், இளையர்களின் துடிப்பையும் பங்களிப்பையும் நம்பியுள்ளதாகக் குறிப்பிட்டார். விருந்துணவு முறையில் இந்த நிகழ்ச்சியை நடத்தியது இளையர்களே என்றார் அவர்.

எல்லாத் தலைமுறையினரும் ஆர்வத்துடன் பங்குபெற ஏற்றதொரு துடிப்பான அமைப்பாகச் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற குறிக்கோளையும் அவர் முன்வைத்தார்.

“பிள்ளைகளைச் சங்கத்தில் சேர்த்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். அவர்களுக்காக இவ்வாண்டு மெண்டாக்கியுடன் இணைந்து ‘கிலாஸ் மெத்தமெத்திகா’ (KelasMateMatika) கணிதப் பாடங்களை வழங்குகிறோம்,” என்றார் திரு ராஜ் முஹம்மது.

அத்துடன், 2021ல் தொடங்கப்பட்ட முதியோர் நலன் மீதான அக்கறையை மேம்படுத்தும் ‘சலாம் நீங்கள் நலமா’ திட்டத்தைக் குறிப்பிட்ட அவர், இதுவரை ஏறத்தாழ 110 குடும்பங்கள் பயன் அடைந்திருப்பதையும் சுட்டினார்.

“முதியாேரின் மனநலனையும் பாதுகாக்கும் இந்தத் திட்டத்திற்குத் தொண்டூழியர்களும் ஆதரவாளர்களும் உயிரோட்டம் தருகின்றனர்,” என்றார் அவர்.

சங்கத்தைச் சேர்ந்த சமூக உன்னத வட்டத் திட்டத்தைச் சேர்ந்த (Community Excellence Circle Programme) வசதிகுறைந்தோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்