சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகள், பொழுதுபோக்க வரும் மக்கள் என அனைவரின் கண்களுக்கும் வியப்பளிக்க அரிய விருந்து காத்திருக்கிறது.
ஒளிமயமான தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சிங்கப்பூரின் நுழைவாயிலான சாங்கி விமான நிலையமும் ஜூவல் வளாகமும் வண்ணமயமான அலங்காரங்களால் விழாக்கோலம் பூண்டுள்ளன.
தீபாவளிப் பண்டிகையின் பாரம்பரியச் சிறப்புகள், பண்பாட்டுக் கூறுகள், அதன் நன்மதிப்புகள் ஆகியவற்றை உலகறியச் செய்யும் வகையில் இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒளி, புதுமை, ஒற்றுமையைக் கொண்டாடும் இந்த விழா அலங்காரங்கள், உள்ளூர்வாசிகளுக்கும் உலகெங்கிலுமிருந்து வரும் பயணிகளுக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பண்பாட்டு மரபுகளை எடுத்துக்காட்டும் மயில், அகல்விளக்குகள், பாரம்பரிய ரங்கோலிக் கோலங்கள் ஆகியவை, மலர், செடி அலங்காரங்கள், ஒளிவிளக்குகளுடன் இணைந்து, பயணிகளையும் பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்து வருகின்றன.
சாங்கி விமான நிலையத்தின் ஐந்து முக்கியப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கண்கவர் கலைப்படைப்புகள், நவம்பர் மாதம் வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இம்முறை சாங்கி விமான நிலைய வரலாற்றிலேயே முதன்முறையாக, இரண்டாம் முனையத்தின் புறப்பாட்டுக் கூடத்தில் 6 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்ட தோரண வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
சாமந்திப் பூக்கள், ஒளிரும் விளக்குகள், மயில் உருவங்களால் அந்தத் தோரண வளைவு எழிலுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மூன்றாம் முனையத்தின் புறப்பாட்டுக் கூடத்தில் கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரமுள்ள அழகுமயில் வடிவம், இயற்கைத் தாவரங்களுக்கும் ரங்கோலி வடிவங்களுக்கும் நடுவே அமைக்கப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
நீலம், பொன்னிறம், பச்சை ஆகிய வண்ணங்களின் நேர்த்தியான கலவையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அலங்காரங்கள், இந்தியப் பண்பாட்டின் முக்கிய அடையாளமாக விளங்கும் மயிலின் சிறப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்துகின்றன.
ஜூவல் வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள ‘வெஸ்ட் கேன்யன்’ பகுதியில், இயற்கையோடு இணைந்த அலங்காரத் தோற்றம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் இலக்குடன் அமைக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த பசுமைத் தாவரங்கள், தென்னை மரங்களுக்கு இடையே இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் பொன்னிற இதழ்களாலான வட்ட வடிவக் கலைப்படைப்பும் இடம்பெற்றுள்ளன.
இது குறித்துக் கருத்துரைத்த சாங்கி விமான நிலையக் குழுமத்தின் செயல்பாட்டுச் சேவைப் பிரிவின் மூத்த மேலாளர் அஷ்ரப் அலி, “சாங்கி விமான நிலையம் என்பது வெறும் பயணப் பாதை மட்டுமன்று. சிங்கப்பூருக்கு வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு நாட்டின் முதல் மற்றும் இறுதி நினைவுகளை வழங்கும் இடமாகும்," என்றார்.
தீபாவளியின் ஆழமான, துடிப்புமிக்க பண்பாட்டை உலகப் பயணிகளுடன் பகிர்ந்துகொள்வதும் அவர்களின் பயணத்தை மேலும் நினைவுகூரத்தக்கதாக மாற்றுவதுமே இந்த அலங்காரங்களின் முதன்மை நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
