ராஜாமணி நந்தியார் மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், ஆறு தலைமுறைகளாகச் சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் அண்மையில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினர்.
திரு ராஜாமணியின் 60, 70 வயது மதிக்கத்தக்க பேரப்பிள்ளைகள் ஏற்பாடு செய்த அந்த விழாவில் விழாவின்போது மூத்த குடும்ப உறுப்பினர்கள், மலர்க்கொத்தும் பொன்னாடையும் பெற்று கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கிட்டத்தட்ட 80 பேர், தங்கள் குடும்பத்தை ‘ராஜாமணி குடும்பம்’ என்று பெருமையுடன் கூறி தங்கள் தலைமுறையின் தலைவரைக் கொண்டாடினர்.
ஆறு தலைமுறையினரையும் உள்ளடக்கிய குடும்ப வரைபடம் ஒன்றை அந்தக் குடும்பத்தினர் ஐந்தாண்டு முயற்சிக்குப் பிறகு தயாரித்துள்ளனர்.
பிரிட்டிஷ் காலனித்துவக் காலத்தில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர்கள் அல்லது சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள், சத்தியப் பிரமாணம் எடுத்து இந்தியாவில் உள்ள தங்கள் உறவுகளைச் சிங்கப்பூருக்கு வரவழைத்தனர். அவ்வாறு குடும்ப உறுப்பினர்களை வரவழைத்த திரு ராஜாமணியை, ‘பலரையும் வாழவைத்தவர்’ என நிகழ்ச்சியின்போது அவரது சந்ததியினர் போற்றினர்.
‘எஸ்டிசி’ போக்குவரத்து நிறுவனத்தில் உறவினர்கள் பலரையும் ஓட்டுநர், பழுது பார்ப்பவர், பொறியாளர் என நிறுவனத்தின் பல்வேறு வேலைகளில் ராஜாமணி சேர்த்ததாக அவரது குடும்பத்தினர் பெருமையுடன் நினைவுகூர்ந்தனர்.
ஈரடுக்கு கடைவீட்டின் இனிய நினைவுகள்
ரோச்சோர் பகுதியிலுள்ள 73 நிவன் ரோட்டில் ஈரடுக்குக் கடைவீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்த பசுமையான நினைவுகள் தம் மனதில் இன்றும் நிழலாடுவதாக ராஜாமணியின் பேரனான சொத்து முகவர் வைரப்பன் தமிழ்ச்செல்வம், 70, தெரிவித்தார்.
ராஜாமணியின் 13 பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையான ஜெயலட்சுமி தம் தாயார் என்றார் தமிழ்ச்செல்வம்.
ராஜாமணியின் மூத்த மகளான தம் பெரியம்மா திருமதி பார்வதி குஞ்சு தஞ்சுராயர் மறைவில், உறவுகள் கூடியிருந்தபோது, குடும்ப உறவினர்களை ஒன்றுசேர்க்கும் எண்ணம் சிலருக்கு எழுந்ததாக தமிழ்ச்செல்வம் கூறினார்.
“இதில் கூடுதல் ஆர்வம் காட்டியது என் தம்பி பாரி வைரப்பன். ராஜாமணித் தாத்தாவின் தந்தை கருத்தசாமி என்பதை அவர்தான் அறிந்து வந்தார். தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று என் குடும்பத்தைச் சேர்ந்த பலரது பூர்வீக ஊர்களை அறிவதில் ஆர்வம் கொண்டவர் அவர்,” என்றார் தமிழ்ச்செல்வம்.
பெரிய குடும்பத்திற்கான அன்றாட சமையலும் சிறப்பாக இருக்கும். தாத்தாவுடன் வேலை பார்த்த வெள்ளைக்காரர்களும் வீட்டுக்கு வருவார்கள் என்று தமிழ்ச்செல்வனின் அக்கா, திருவாட்டி வைரப்பன் அன்பழகி, 73, நினைவுகூர்ந்தார்.
“தாத்தா எங்களுக்கு நுழைவுச் சீட்டுகளை வாங்கித் தருவார். நானும் மற்ற பிள்ளைகளும், கிட்டத்தட்ட 30 பேர் ஒன்றாக ரெக்ஸ் திரையரங்கிற்குச் செல்வோம். ‘பார் மகளே பார்’ பார்த்த ஞாபகம் உள்ளது.
“தீபாவளி போன்ற சிறப்புப் பண்டிகைக் காலங்களில் வீட்டில் உள்ள தாய்மார்கள் யாவரும் சேர்ந்து சமைப்பர். தீபாவளிக் கொண்டாட்டம் குறைந்தது ஒரு மாதம் நீடிக்கும். பெருங்கூட்டம் கூடும்,” என்று அவர் கூறினார்.
ஆங்கிலம் பேசத் தெரிந்த ராஜாமணி, கரண்டி, முள்கரண்டி பயன்படுத்திச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், மேற்கத்திய நாகரிகத்தை விரும்பினாலும் தங்கள் தாத்தா, பூர்விகத்தின்மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்ததாகப் பேரப்பிள்ளைகள் கூறினர்.
சொந்த ஊரின் மீது பற்றுக் கொண்டிருந்த ராஜாமணி, மூன்று மகன்களுடன் 1962ல் சொந்த ஊருக்குத் திரும்பினார். 1965ல் வீட்டை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டு ஊரில் சொகுசாக வாழ்ந்த ராஜாமணி, பின்னர் சிங்கப்பூர் திரும்ப ஆசைப்பட்டார். ஆயினும் அவரது உயிர், 1970ல் சொந்த ஊரிலேயே பிரிந்தது.
தொலைதூரப் பந்தங்கள்
ஆறு தலைமுறை வரையிலான பந்தங்களை ஒன்றுசேர்ப்பதில் குடும்பத்துப் பெரியவர்களுக்கு அலாதி மகிழ்ச்சி என்றாலும் தூரத்துச் சொந்தங்களுடன் இணக்கம் பாராட்டுவதற்குக் காலமாகும் என்று குடும்பத்தின் இளம் பெரியவர்கள் கூறினர்.
உடன்பிறந்தோர், நெருக்கமான உறவினர்களையே குடும்பமாகக் கருதும் சேவை நிறுவன நிர்வாகியான 36 வயது திவ்யன் ராமசாமி, தூரத்துச் சொந்தங்களைத் தெரிந்துகொள்வதில் தொடக்கத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.
“தூரத்துச் சொந்தங்களை ஒன்றுதிரட்டி எல்லோருடனும் பழக வேண்டியதன் அவசியம் என்ன என்ற சிந்தனை தொடக்கத்தில் என்னிடம் இருந்தது. ரத்த உறவு உள்ளது என்றாலும் தொலைதூர உறவுகள் மீது பாசம் சட்டென்று வராது,” என்றார் திவ்யன்.
இருந்தபோதும் தம் கொள்ளு தாத்தா பற்றிய வரலாறும் விவரங்களும் தமக்கும் தம் பிள்ளைகளுக்கும் நல்ல படிப்பினைகளைக் கற்றுத்தரும் என்று திருவாட்டி வித்யா நம்புகிறார்.
“அறிமுகம் அவ்வளவு இல்[Ϟ]லாத சொந்தங்களிடம் அன்புடன் பழகும் பெருந்தன்மை, எங்களது வயதொத்தவர்களைக் காட்டிலும் மூத்தவர்களுக்கு அதிகம் உள்ளது. இருந்தபோதும் இளையர்களை மனதில் முன்னிறுத்தி இக்கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தோரில் நானும் ஒருவர். இதே குடும்பத்தில் நாங்கள் அனைவரும் மீண்டும் பிறக்கப்போவதில்லை, இல்லையா,” என்றார் இரு இளம் பிள்ளைகளுக்குத் தாயாரான வித்யா.

