பிற சமயத்தினரையும் ஈர்த்த தீமிதித் திருவிழா

பிற சமயத்தினரையும் ஈர்த்த தீமிதித் திருவிழா

1 of 3
படம்: வித்யா வெங்கடேசன்
படம்: வித்யா வெங்கடேசன்
படம்: வித்யா வெங்கடேசன்

03 Nov 2026 - 6:44 am

3 mins read

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ராயனின் தாயாருடைய உடல்நலம் மோசமாக இருந்தது.

ரயனின் துயரத்தை அறிந்த அவருடைய நண்பர், ஶ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதித்தால் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று கூறினார்.

அவரது ஆலோசனையை ஏற்று, மனமுருகி வேண்டினார் அரசாங்க ஊழியரான ரயன் டான், 45.

நினைத்தது பலித்தது

ஓராண்டிற்குப் பிறகு தாயாரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட, அவர் அம்மனுக்கு நன்றி தெரிவிக்க தீக்குழியில் இறங்கி தீமிதித்தார்.

அன்றிலிருந்து, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக திமிதித்து வருகிறார் ரயன்.

“இருபது ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தீக்குழியில் இறங்கியபோது, மனம் படபடத்தது, பயமாக இருந்தது. இன்றும் அந்த அச்சம் உள்ளது. ஆனால், ‘ஓம் சக்தி’ என்று உளமாற நினைத்து, அம்மனின் திருவுருவத்தை மனதில் நிறுத்தி தீமிதிப்பேன்,” என்று சொன்னார் ரயன்.

“நான் ஒரு சீனர். இந்து சமயத்தைப் பின்பற்றும் என்னுடைய நண்பர்களிலேயே பலர் தீமிதிப்பதில்லை. ஆனால், நான் இதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுகிறேன்,” என்றார் அவர்.

தீமிதிப்பதால் வலுவடைந்த தந்தை-மகன் உறவு

திருமணத்துக்குப் பிறகு குடும்ப நலன் வேண்டி தீமிதிக்கத் தொடங்கினார் ராமு கிருஷ்ணன், 56.

அவர் தீமிதிப்பதைக் காண அவரது குடும்பம் கோயிலுக்கு வரும். அதன்மூலம், தானும் தீமிதிக்க வேண்டும் என்ற ஆசை மகன் லிவினேஷ் மனத்தில் துளிர்விட்டது.

“பதினாறு வயதாகியவுடன் தாம் தீமிதிக்க முடியும் என்பதால், எனக்குப் பதினாறு வயதாகியவுடன், தீமிதிக்க அப்பாவிடம் அனுமதி கேட்டேன்,” என்றார் லிவினேஷ் ராமு, 27.

லிவினேஷ் தீமிதிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளை இவ்வாண்டு குறிக்கிறது.

“நான் தீமிதிக்கும்போது, என் அப்பா என்னோடு சேர்ந்து தீக்குழிக்கு அருகில் நடப்பார். அவர் எப்பொழுதும் அருகில் இருப்பது அவர் என்மீது கொண்டுள்ள பாசத்தின் அடையாளம். அவர் நடப்பது எனக்கு ஆதரவாக இருக்கும்,” என்று குறிப்பிட்டார் லிவினேஷ்.

“என் மகன் தீமிதிக்கும்போது, எனக்கு சற்று பயமாகத்தான் இருக்கும். ஆனால், பெருமையாகவும் உள்ளது,” என்று பெருமிதத்தோடு கூறினார் ராமு.

கோயில் பணிகளில் சேர்ந்து பங்காற்றுவதும் தீமிதிப்பதும் இருவரிடையே உள்ள உறவை வலுப்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறினர்.

சேவையில் தொடங்கி பூக்குழி வரை

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு, 1988ஆம் ஆண்டில், ஶ்ரீ மாரியம்மன் கோயிலில் அவரைத் தொண்டூழியராக டேவிட் எங்கின் பயணம் தொடங்கியது.

சீனராக இருப்பினும், கோயிலின் மற்ற தொண்டூழியர்களுடன் ஓர் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டார்.

“இந்தக் கோயில் எனக்கு இன்னொரு வீடாகியது. அதன் தொண்டூழியர்கள் எனக்கு இன்னொரு குடும்பமாக மாறினர்,” என்றார் டேவிட், 71.

நாளடைவில், சேவை பக்தியாக மாறியது. சகோதரியின் உடல்நலம் கோரி டேவிட் தீமிதிக்கத் தொடங்கினார்.

நாளடைவில், மற்ற குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவும் தீமிதிப்பதைத் தொடர்ந்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றை அடுத்து, தீமிதிப்பதை நிறுத்தினாலும், தீமிதித் திருவிழாவில் பிற பொறுப்புகளை ஏற்று தொடர்ந்து சேவையாற்றி வருகிறார் டேவிட்.

‘தீயில் தெய்வத்தைக் காண்கிறேன்’

தம்முடைய எட்டு வயதிலிருந்து தீமிதித் திருவிழாவைக் காணத் தொடங்கிய ஆதிலெட்சுமி காசிநாதன் இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகிறார்.

அவரது சிறுவயது அனுபவம் பிற்காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் அத்திருவிழாவில் நேர்த்திகடன் செலுத்துவதற்கான உத்வேகமாக உருவெடுத்தது.

சென்ற ஆண்டு வரை, தம்மால் இயன்ற முறைகளில், நேர்த்திக்கடன் செலுத்தி வந்தார்.

“அம்மா, உங்களுக்கு வயதாகிவிட்டது. சற்று ஓய்வெடுங்கள் என்று என் மகன்கள் கூறினர். அதனால், இவ்வாண்டு, தீமிதியைக் காண மட்டும் வந்துள்ளேன்,” என்று கூறினார் ஆதிலெட்சுமி, 70.

தீமிதித் திருவிழாவைக் கண்கூடாகக் காண தீக்குழிக்கு நேர் எதிராக முதல் வரிசையில் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே அவர் அமர்ந்திருந்தார்.

தம்முடைய மகன் தீமிதிப்பதையும் தீமிதிக்கும் பழக்கம் குடும்பத்தில் தொன்றுதொட்டு நிலைப்பதையும் எண்ணி மகிழ்வுற்றார் ஆதிலெட்சுமி.

“அந்தத் தீயில் தெய்வத்தைக் காண்கிறேன், அதுதான் தீமிதித் திருவிழா,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்