சிங்கப்பூரில் முதன்முறையாக இடம்பெறும் ‘சிங்கப்பூர் புத்தகத் தெரு’ காட்சி, நவம்பர் 2 முதல் 8ஆம் தேதி வரை விவோசிட்டி கடைத்தொகுதியில் நடைபெறுகிறது.
நாற்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர் பதிப்பகங்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் 1,200க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் இலக்கிய நூல்கள் இடம்பெறுகின்றன.
தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர் புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் கூட்டு முயற்சியில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, சிங்கப்பூர் இலக்கிய நூல்களுக்கென பிரத்தியேகமான நாட்டின் மிகப்பெரிய புத்தகக் காட்சியாகும்.
ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளில் வெளியிடப்பட்ட உள்ளூர் படைப்புகளைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ளவும் அவற்றை வாங்கவும் இப்புத்தகக் காட்சி வாய்ப்பளிக்கிறது.
இங்கு இடம்பெறுபவற்றில் 80 விழுக்காட்டு நூல்கள், எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகையைக் கொண்டு வாங்குவதற்குத் தகுதிபெறுகின்றன.
2026 மார்ச் முதல் எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகையைப் பயன்படுத்தி சிங்கப்பூர் இலக்கிய நூல்களை வாங்க அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் விற்பனை 300 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளதாகப் பதிப்பாளர் சங்க உறுப்பினர்கள் நடத்திய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.
“சிங்கப்பூரில் தற்போது எழுதப்பட்டு வெளியிடப்படும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியாக இது அமைகிறது. உள்ளூர் பதிப்பகத்துறை இதுவரை இவ்வளவு பெரிய அளவில் ஒன்றிணைந்ததில்லை. மக்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இலக்கியத்தை ஒன்றிணைப்பதே எங்கள் நோக்கம்,” என்றார் சிங்கப்பூர் புத்தகப் பதிப்பாளர் சங்கத் தலைவர் மெல்வின் சூ.
“பதிப்பகங்கள் கதைகளை உயிர்ப்பித்து, சிங்கப்பூரிலும் உலகெங்கிலும் உள்ள வாசகர்களிடம் கொண்டு சேர்க்கின்றன. உள்ளூர் பதிப்பகங்களுக்கு ஆதரவளிக்கவும் உள்ளூர் இலக்கியத்தின் பன்முகத்தன்மையை அறிந்துகொள்ளவும் புதிய படைப்புகளைக் கண்டறியவும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பளிக்கிறது,” என்றார் தேசிய கலைகள் மன்றத்தின் இலக்கியக் கலைப் பிரிவின் இயக்குநர் அருணா ஜான்சன்.
புனைவு, அல்புனைவு, கவிதைகள், சிறுவர் படப் புத்தகங்கள் எனப் பல்வேறு வகையான நூல்கள் விற்கப்படுகின்றன.
“குழந்தைகளிடம் எவ்வளவு விரைவாக வாசிப்புப் பழக்கத்தை அறிமுகப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதோடு, அதன் மூலம் கலாசாரத்தையும் புரிந்துகொள்வார்கள்.
“இதனால் தெளிவாகச் சிந்திக்கும் திறன், நம்பிக்கை, கம்பீரத்துடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் வலிமை ஆகியவை அவர்களிடம் ஏற்படும்ம் என நம்புகிறோம்,” என்றார் கிரிம்சன் எர்த் பதிப்பகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் அதன் இயக்குநருமான விஜய் ஆனந்த் தாமோதரன்.
புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து, வாரம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்ச்சிகளும் கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன. நூல் வெளியீடுகள், சிறுவர்களுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சிகள், உள்ளூர் கவிஞர்களின் கவிதை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
சமூகத் தொடர்புகளை வளர்ப்பதில் ஈடுபட்டு வரும் வெள்ளி நிலா குணாளன், இளவழகன் முருகனின் ‘பீஷ்மர்’ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை சனிக்கிழமை (நவம்பர் 7) வாசிக்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த உள்ளூர் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கவும் நூல்களில் அவர்களின் கையொப்பம் பெறவும் வாய்ப்புள்ளது.
