பயணங்களை எளிதாக்கும் 'பயணி’

பயணங்களை எளிதாக்கும் 'பயணி’

படம்: முரளீதரன் மாணிக்கம்

24 Oct 2026 - 6:00 am

2 mins read
தற்போதைய பயணச் செயலிகளில் தேவைப்படும் பல அம்சங்கள் இல்லாததால் ‘பயணி’ என்ற செயலியை உருவாக்கினார் முரளீதரன் மாணிக்கம்.
தற்போதைய பயணச் செயலிகளில் தேவைப்படும் பல அம்சங்கள் இல்லாததால் ‘பயணி’ என்ற செயலியை உருவாக்கினார் முரளீதரன் மாணிக்கம். - படம்: முரளீதரன் மாணிக்கம்

வெவ்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதை விரும்பும் திரு முரளீதரன் மாணிக்கம், 50, தனது பயண நிர்வாகப் பணிகளை எளிதாக்க பெரும்பாலும் செயலிகளையே சார்ந்திருந்தார்.

இருப்பினும், இந்தச் செயலிகளில் ஏதோ ஒரு வகையில் குறைபாடு இருப்பதை அவர் உணர்ந்தார்.

“சில செயலிகளில் விமானச் சீட்டுகள், பயணத் திட்டம் போன்ற ஆவணங்களைப் பதிவேற்ற முடியாது,” என்று தெரிவித்த அவர், தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கக்கூடிய ஒரே ஒரு பயணச் செயலி இல்லை என்றும் விளக்கினார்.

இதுபோன்ற அமைப்புரீதியான சிக்கல்கள் காரணமாக, தனது அண்மைப் பயணத்திற்கு உரிய நேரத்தில் விசா பெறுவதிலும்கூடச் சிக்கலை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

“அதனால், அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பயணச் செயலியை உருவாக்க முடிவு செய்தேன்,” என்றார் அவர்.

இவ்வாறு கடந்த ஆகஸ்ட் மாதம் உருவானது ‘பயணி’ என்ற செயலி.

திரு முரளீதரன் தற்போது நிதித் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்தாலும், தமது வாழ்க்கைத்தொழிலின் தொடக்கக் காலத்தில் கணினி நிரலாளராக இருந்தார்.

“மக்கள் தங்களின் சவால்களைத் தீர்ப்பதற்காகப் பயன்படுத்தக்கூடிய செயலிகளை நிரலாக்கம் செய்ய எப்போதும் விருப்பம் உண்டு,” என்றார் இவர்.

பயணப் பட்டியல், பொருள் சரிபார்ப்புப் பட்டியல், பயண அனுமதிச் சீட்டுகள், தேவையான இதர ஆவணங்களைச் செயலியில் பயனர்கள் பதிவேற்றலாம். அங்கு அவை அனைத்தையும் விரைவாக அணுக முடியும்.

அதுமட்டுமன்றி, நாட்காட்டி, வானிலை, நாணய மாற்றுக் குறியீடு, இதர குறிப்புகள் ஆகியவற்றைப் பயனர்கள் இந்தச் செயலிவழி அணுகலாம்.

செயலியின் பதிவிறக்கம், அதனுள் உள்ள அம்சங்கள் அனைத்தும் இலவசம் என திரு முரளீதரன் குறிப்பிட்டார்.

பயனர்களுக்குச் செலவின்றி முற்றிலும் இலவசமாக விநியோகிக்கப்படும் தனியுரிம மென்பொருளான ‘ஃபிரீவேர்’ மீது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள முரளீதரன், அனைத்துப் பயனர்களுக்கும் செயலியை இலவசமாக வழங்க விரும்புகிறார்.

“இலவச மென்பொருளைப் போலவே, செயலி பயனுள்ளதாக இருந்தால், உருவாக்கியவருக்குப் பானம் வாங்கிக் கொடுப்பது போன்ற நன்கொடைகள் மூலம் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பயனர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது, ​​செயலியின் குறியீடாக்கம், வடிவமைப்புச் செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்காக ‘கிளாட்’ (Claude) போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைத் திரு முரளீதரன் அதிகம் பயன்படுத்துகிறார்.

“இருப்பினும், செயற்கை நுண்ணறிவின் அதிகச் செலவுகளும் பயன்பாட்டு வரம்புகளும் சவால்களாக அமைகின்றன,” என்று அவர் கூறினார்.

பயனர்கள் தங்களின் சொந்தச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை இந்தச் செயலிவழி பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது செயலியை மேலும் தனிப்பயனாக்கம் செய்துகொள்ள உதவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதை ஒரு பெரிய நிறுவனமாக விரிவுபடுத்துவதற்கு உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என்று திரு முரளீதரன் கூறினார்.

ஒப்பீட்டளவில், இந்தச் செயலி புதிது என்பதால் அமைப்புகளை மேலும் மேம்படுத்துவதற்காகக் கூடுதல் கருத்துகளைச் சேகரிக்கவும் இவர் விரும்புகிறார்.

குறிப்புச் சொற்கள்
செயலிபயணிபயணம்செயற்கை நுண்ணறிவு