தேசிய நூலக வாரியத்தின் நற்பணி வாசிப்பு இயக்கமான ‘நற்பணிக்கு வாசிப்பு’ (ரீட் ஃபார் குட்) இயக்கம் செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 7 வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறவுள்ளது.
வசதி குறைந்தவர்களுக்கு வாசிப்பின் இன்பத்தைக் கொண்டுசேர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த இயக்கத்தில் அமைப்புகள், தனிமனிதர்கள் அனைவரையும் பங்கேற்று, பங்களிக்குமாறு தேசிய நூலக வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
15 நிமிடங்கள் வாசிப்பது, வாசித்துப் பதிவு செய்வதன் மூலம் கிட்ஸ்ரீட், வொண்டர்ரீட், மைண்ட்எஸ்ஜி போன்ற அமைப்புகளுக்கான நன்கொடைகளையும் நிதியையும் பெற உதவலாம்.
‘சேர்ந்து வாசிப்போம்’ அமர்வுகள் மூலம் ஸூம் வழியே இணையப்பக்கத்தில் இணையலாம் அல்லது ஒருவர் தமது வாசிப்புப் பழக்கங்களைக் கண்காணிக்கலாம். பங்கேற்க விரும்புவோர் ‘ரீட் ஃபார் குட் ஃபார்ம்எஸ்ஜி’ படிவம் வாயிலாகப் பதிவுசெய்யலாம்.
இத்திட்டத்தின் கீழ் 5,00,000 வாசிப்பு அமர்வுகளை (7.5 மில்லியன் வாசிப்பு நிமிடங்கள்) எட்டி, ஏறத்தாழ 10,000 பேருக்கு வாசிப்பு வாய்ப்பை வழங்க தேசிய நூலக வாரியம் இலக்குக் கொண்டுள்ளது.
சஞ்சிகைகள், செய்தித்தாள்கள், மின்னூல்கள், ஒலிநூல்கள் என எதையும் எந்த மொழியிலும் வாசிப்பதன் மூலம் பொதுமக்கள் இயக்கத்தில் பங்கு பெறலாம்.
இம்மாதம் தொடங்கும் தேசிய வாசிப்பு இயக்கத்தின் ஓர் அங்கமாக இடம்பெறும் நற்பணி வாசிப்பில், பொதுமக்கள், அமைப்புகள், நெறியாளர்கள் என அனைவரும் பல்வேறு வழிகளில் பங்களிக்கலாம்.
அமைப்புகள் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள், உறுப்பினர்களுக்காக வாசிப்பு அமர்வுகளை நேரிடையாகவோ இணையம் வழியாகவோ ஏற்பாடு செய்யலாம்.
சிங்பாஸ் கணக்கு உள்ளவர்கள் https://go.gov.sg/rcct. என்ற இணையப்பக்கத்தில் இணைந்து ‘ரீட்எஸ்ஜி’ சவாலில் பங்கேற்கலாம். இப்பக்கம் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் நேரலையில் செயல்படும்.
சிங்பாஸ் இல்லாதவர்கள் தங்கள் வாசிப்பு விவரங்களை நவம்பர் 15 ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் https://go.gov.sg/r4g26-all என்ற இணையப்பக்கத்தில் பதிவு செய்யலாம்.
இயக்கத்திற்கான வாசிப்புப் பரிந்துரைகளை https://go.gov.sg/r4g26-bookrec என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.
மேலும், தேசிய நூலக வாரியத்தின் கைப்பேசி செயலி வாயிலாக அச்சு நூல்கள், மின்னூல்களை பொதுமக்கள் இரவல் பெறலாம். ஒருவரே பலமுறை வாசிப்பு விவரங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்பதால், அனைவரும் வாசித்து நற்பணி ஆற்றுமாறு நூலக வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.


