உணவகங்களின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துவருவதோடு, வாடிக்கையாளர்கள் செலவிடும் தன்மை மாறிவரும் நிலையில் உணவு, பானத்துறையின் சிறுவணிகர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ‘கிராப் ஃபுல் ஹவுஸ் மிஷன்’ என்ற புதிய திட்டத்தைக் கிராப் சிங்கப்பூர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தஞ்சோங் பகார் சமூக மன்றத்தில் ஜூன் 9ஆம் தேதி நடந்த புதுத்திட்டத்தின் தொடக்க விழாவில் வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
வாடிக்கையாளர்கள் உணவகங்களை அடையாளம் கண்டறியும் விதம் மாறிவருவதை கிராப் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
“சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்ட பயனீட்டாளர்களில் 84 விழுக்காட்டினர் புதிய உணவகங்கள், கடைகளைக் கிராப் செயலியைக் கொண்டுதான் அறிந்துகொள்கின்றனர். அவர்களில் 74 விழுக்காட்டினர் யாரிடம் உணவை முன்பதிவு செய்வது என்பதை முடிவு செய்யாமல் செயலியைத் திறக்கின்றனர்,” என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலயாண்ட்ரோ ஒசொரியோ செய்தியாளர்களிடம் கூறினார்.
வாடிக்கையாளர்களை ஈர்க்க, ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்புடன் இணைந்து ‘டைன் அவுட் பிரசிங்க்ட்’ எனப்படும் சிறப்புச் சலுகை வழங்கப்படுகின்றது.
இதன் முதல் கட்டமாக, தஞ்சோங் பகார் பகுதியில் ஜூலை 25 வரை நேரடியாக உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு 15 விழுக்காடுவரை தள்ளுபடி வழங்கப்படும். சிங்கப்பூரில் விநியோகிக்கப்படும் அனைத்து கிராப் உணவுகளின் முன்பதிவுகளுக்கு 15 விழுக்காடுவரை கழிவும் பெறலாம்.
மேலும், வணிகர்களின் மின்னிலக்கத் திறன்களை வலுப்படுத்த, கிராப் பலமுனைகளில் உதவிகளை வழங்குகிறது.
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’, ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்புகளுடன் இணைந்து ஆண்டுக்கு நான்கு பயிற்சி வகுப்புகளையும் சந்தை நுண்ணறிவுத் திறன் ஆய்வறிக்கைகளையும் அது இலவசமாக வழங்கவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், வணிகர்கள் தங்கள் பகுதிகளில் நேரடியாக ஆலோசனைகளைப் பெற மாதாந்தரக் கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக இணையும் 70 வணிகர்களுக்கு $388 மதிப்புள்ள ஊக்குவிப்புத் தொகையைக் கிராப் சிங்கப்பூர் நிறுவனம் வழங்கும். இதன்மூலம் அவர்களுக்குத் தள்ளுபடிகள், வணிக ஆய்வுகள், தனித்துவ வாடிக்கையாளர் சேவை ஆதரவு ஆகியவை கிடைக்கும்.
சிங்கப்பூரின் அடையாளமாக விளங்கும் உள்ளூர் உணவகங்கள் நலிவடையாமல், மின்னிலக்க உலகில் நிலையான வளர்ச்சி காண இத்திட்டம் ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியுள்ள வணிகர்கள் ‘grb.to/fullhousemission’ வழியாகப் பதிவுசெய்து கொள்ளலாம்.

